Showing posts with label இரா.சிந்தன். Show all posts
Showing posts with label இரா.சிந்தன். Show all posts

வெயிலின் வெள்ளம்

உச்சி வெயில்
ஊற்றியடிக்கிறது

முழுக்க நனைந்துதான்
வீடு செல்கிறோம்

மழைக்காலத்தில்
ஓட்டுக் கூரைதான் ஒழுகும்

காங்கிரீட் அறைக்குள்
நனைந்தபடி புரள்கிறோம்

ஜன்னல் வழியே
சாரலாய்த் தெரிக்கும்
வெக்கையோடுதான்
வேலை பார்க்கிறோம்

ஆட்களற்ற தெருவெங்கும்
அடித்து ஓடுகிறது
அனலின் வெள்ளம்

தெலுவுக் கூடையை
அழுந்தப் பிடித்தபடி
நீந்திக் கடக்கிறாள்
கருத்த கிழவி

ரேசன் கடையில் ஒரு இஞ்சினியரிங் மாணவி ...

சாமானிய டைரி 5:

இஞ்சினியரிங் மாணவி ஒருத்தரின் அம்மா என்னிடம் தொலைபேசியை வாங்கி அழைத்தார் ... "சாமி, கடைலதான் இருக்கியா?.. இன்னைக்கு என்ன பொருள் போடறாங்க?" "கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், வாங்காம திரும்பிடாத"

ரேசன் கடையில், கூட்டத்தின் இடையே அந்தப் பெண் காத்திருந்தது சொல்லாமலே விளங்கியது. "பச்சரிசி போட்டா வாங்கிக்கோ" என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.

நியாயவிலைக் கடையில் குறைந்த விலையில் பொருட்கள் கொடுப்பதற்கு சில ஆயிரம் கோடிகளை அரசு செலவிடுகிறது. தமிழக மக்கள் அந்த சேவையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஓரளவு வருமானம் வரும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்களால், சேமிக்க வழி கிடைகிறது. ஏழைக் குடும்பங்களோ பசியிலிருந்து தப்பி, அவசியமான பிற செலவுகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த மாணவியின் கல்வி இஞ்சினியரிங் வரை தடையில்லாமல் தொடர்ந்ததற்கு - போசாக்கான உணவு கிடைக்கவும், பொருளாதாரம் காக்கப்படவும் வழிவகுக்கும் இப்படிப்பட்ட திட்டங்கள் ஒரு காரணம். அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியில்லாத நிலையில்தானே நம்மால் பிற செலவுகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மிகப்பெரும் நிறுவனங்களுக்கு சலுகையாக, வரித் தள்ளுபடியாக கொடுப்பதால் விளைந்த நன்மைகளை விட. சில 10 ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் விளைவித்த நன்மைகள் ஏராளம்.

அந்தப் பெண் குழந்தை காத்திருக்கிறாள். அவளுக்குத் தெரியும், தன் குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்குமான உழைப்பு இதுவென்று.

உயிர் இருப்பது வீழாது ...

சாமானிய டைரி 4:

திருமணமான அந்தத் தோழி பல மாதங்களுக்குப் பின் என்னை அழைத்தாள். "நேற்று எதிர்பாராத நேரத்தில், முன்பின் அறிமுகமில்லாதவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கிடைத்தது. இப்போதுவரை அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

சுய சிந்தனையுடைய பெண் அவள், அவளே தொடர்ந்தால் "சின்ன அங்கீகாரம் கூட இவ்ளோ சந்தோச்சம் கொடுக்குது ... ஏன் தெரியுமா?. நம்ம குடும்ப அமைப்பு, பாராட்டு நிறைந்ததாவும், மகிழ்ச்சி கொடுப்பதாவும் இல்ல."

பின் கொஞ்சம் புலம்பினாள், "நான் என் சுயத்தை இழக்காம இருப்பதே ஒரு போரட்டமா இருக்கு. 25 வயசுக்குள்ள நம்ம வாழ்க்கை முடிஞ்சிட்டா என்ன"

இந்தியக் குடும்பங்கள் அழியுதேனு பலரும் பேசராங்க. தினமும் எத்தனையோ செய்திகள் படிக்குறோம். "அதுக்குள்ள என்ன உயிர் இருக்கு? உயிர் இல்லாவிட்டால் அது அழியத்தான செய்யும்?"

சக மனிதர்கள், நேசத்தை பரஸ்பரம் வெளிப்படுத்தும் இடமாக இல்லாத குடும்பம், ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருப்பது அதன் பலவீனம்.

அவள் ஆதிக்கத்தின் பால் வெறுப்புற்றிருந்தாள், திணிக்கப்பட்ட கடமைகளை வெறுத்தாள், இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கைதான் அவளுக்கு உயிராக இருந்தது.

உயிர் இருக்கிற எதுவும் வீழாது ...

சாக்கடையில் விழுகும் பந்துகள் ...

சாமானிய டைரி 3:

ஒரு பிராமண நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். ஆம் நான் பேசும்போது அவர் பிராமணராக நான் என்னை உயர்வாக நினைத்துக் கொள்வதில் என்ன தவறு ? என்ற எண்ணத்தில்தான் இருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நடுத்தர வர்கம், ஒரு நிர்வாகத்துக்கு பணிந்து வேலை செய்பவரும் கூட.

நான் சாதிப் படிநிலைகள், படிநிலைகளைப் பாதுகாக்கும் தீட்டு, தீண்டாமை, அகமண முறை உள்ளிட்ட கற்பிதங்களை விளக்கினேன். அப்போது அவர் எனக்கு ஒரு உதாரணம் சொன்னார். "சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாடுவேன். பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால், நான் ஒதுங்கி நின்றுகொண்டு, என் நண்பனை எடுக்கச் சொல்வேன். என் கை அழுக்காகாமல், விளையாட்டும் தொடரும்... இது என் இயல்பு." என்று சொன்னவர் - அந்த சாமர்த்தியத்தில் என்ன தவறு என்று கேட்டார்.

நான் என் கிரிக்கெட் விளையாட்டு அனுபவத்தைச் சொன்னேன், "நாங்கள் ஆளுக்கு ஒரு குச்சியை எடுப்போம். பந்துக்கு முட்டுக் கொடுத்து, மெதுவாக சாக்கடையிலிருந்து வெளியே எடுப்போம். புல் மேட்டில் உருட்டி அதன் சகதியை அகற்றுவோம். பின் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பந்தை சுத்தமாக்கி எல்லோரும் விளையாடுவோம். கூட்டு உழைப்பின் மகத்துவத்தால் எங்கள் பிரச்சனை தீர்ந்தது. யாரும் அங்கே ஏமாளியில்லை" என்று சொன்னேன்.

சுயநல சிந்தனையின் அடிப்படையில் தீர்வுகளை அணுகும்போது, அல்பமான தீர்வுகளே கிடைக்கின்றன. அதுவே தனித் தனித் தீவுகளாக மனிதர்களை மாற்றுகிறது. இன்றைக்கு நாம் பின்தங்கியதொரு சமூகமாக இருக்கிறோம்.

இணைந்த கரங்களின் வலுவே, உலகத்தின் உன்னதம் ...

இது குடும்பங்களின் பிரச்சனை ...

சாமானிய டைரி 2:

நேற்று Dhamayanthi பகிர்ந்திருந்த ஒரு சம்பவம் மனதை பாதித்தது ...

ஈக்காட்டுத்தாங்கல், ஆம்வே பக்கம் ஒரு பெண் ஸ்கூட்டியில் அவளோடு ஒரு ஆண் பேசியபடி இருந்தான். சடாரென, அந்தப் பெண்ணை அவன் வாகனத்திலிருந்து இழுத்து கீழே எறிந்தான். பக்கத்தில் மெட்ரோ வேலைக்காக தோண்டப்பட்ட கல்/ மண் குவிந்த இடத்தில் ஒரு பந்து மாதிரி தெறித்து விழுந்தாள்.

உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் என்னவென்று அவனை நெருங்க ...
"Family பிரச்னை..நீங்க போங்க ..."
அந்தப் பெண் நெஞ்சைப் பிடித்தபடி வண்டியில் அமர்ந்து
“என் Husband தான்... ஷாப்பிங் போலாம்னு கூப்பிட்டேன். அவர் ப்ரெண்டோடப் போயிட்டு இப்ப தான் வந்தார். ஏன்னு கேட்டேன்... அதனால சண்டை" என்றபடி அவர் கண்களில் நீர் ததும்பியது.

இதைப் பார்த்த அவன் மமதையுடன் “என்ன சீன் போடுற என்று முறைத்தான்." தமயந்தி அவனை திட்ட தொடங்கியதும், அந்தப் பெண் “வுட்டுருங்க... அவர் இன்னும் அடிப்பார்”என்று தணிந்த குரலில் சொன்னது.
----

இந்த ஒரு சம்பவத்தில் பின்னணியை ஆராய்ந்து தீர்ப்புச் சொல்வது நம் வேலையல்ல. ஆனால், சக மனிதர்களுக்குள்ளான பிணக்குகளை தீர்க்கும் ஜனநாயக வழிமுறைகளில் எதுவும், தன் மனைவிக்கு பொருந்தாது என்ற மனநிலையை அந்த ஆணிடம் காண முடிந்தது.

ஆளுமை நிறைந்தவர் என்பதை, உடல் வலிமையும், ஆதிக்கமும் முடிவு செய்வதில்லை. மாறாக நமக்காக கவலைகொள்ள எத்தனை மனிதர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதுதான் நம் ஆளுமையை உருவாக்குகிறது.

சிறியோரை இகழ்தல் இலம் என்ற புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது. சக மனிதனின் சுய உணர்வுகளை எத்தனை காயப்படுத்துகிறோமோ, அத்தனை கீழான நிலைக்கு நாம் நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். உயர்வு நம்மிலிருந்து தொடங்கட்டும்.

லாரியோடு வரும் குழாய்ச் சண்டை ...

சாமானிய டைரி 1:

குழாயில் குடிநீர் வரும் வசதியுள்ள எங்கள் பகுதியில் இன்று ஒரு லாரி வந்திருந்தது. "இப்பவே, லாரில தண்ணி பிடிக்க வேண்டிய நிலை ஆகிடுச்சே" என்ற புலம்பல்கள் கேட்டன.

அவசரம் எல்லோரது கண்களிலும். பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பனியன் கம்பனியில் வேலை செய்கிறவர்கள்.

நீலவண்ண தண்ணீர் தொட்டிக்கு முன் வரிசையில் நின்றபடி குடங்களோடு காத்திருந்தார்கள். தண்ணீர் விநியோகம் தொடங்கியதும், சலசலப்பு அடங்கியது. அவரவர் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, அடுத்த முறைக்காக மீண்டும் வரிசையில் நின்றார்கள்.எல்லோருக்கும் இரண்டு நடை தண்ணீர் கிடைக்கவிலை.

அவரவருக்கு கிடைத்த தண்ணீரோடு திருப்திப் பட்டுக்கொள்ள முடியாது. தண்ணீர் அத்தியாவிசயமாகிற்றே.

லாரி சிரியது, வரிசையில் நின்றவர்கள் அதிகம். ஏமாற்றத்தோடு திரும்பியவர்களில் சிலர் கவுன்சிலருக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், லாரி மீண்டும் வரவில்லை.

அடுத்தமுறை லாரியோடு வாய்ச் சண்டையும் வரலாம். பற்றாக்குறை அதைத்தான் உணர்த்தியது.

நீர் நம் உயிர் ...

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த முழக்கங்களில் ஒன்று குடிநீரை அரசாங்கம் விற்பனை செய்கிறது என்பதாகும்.

இன்று தோழர் லீலாவதி நினைவுதினம். தண்ணீர் வியாபாரிகளுக்கும் பிற சமூக விரோதிகளுக்கும் எதிராக களத்தில் போராடியவர். அவரை கொடூரமாக படுகொலை செய்த வழக்கில் கைதான திமுகவினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

குடிநீரை வியாபாரப் பொருளாக்குவது சர்வதேச நிதியத்தின் திட்டங்களில் ஒன்று. உலகமயக் கொள்கைகளை விசுவாசத்தோடு கடைபிடிக்கும் திமுக, அதிமுக ஆட்சிகளில் நமது நீராதாரங்கள் சீரழிக்கப்பட்டன.

 அதன் காரணமாக குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே "திருப்பூர் 3 வது குடிநீர் திட்டம்" மட்டும் தனியாரால் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டம். குடிநீர் வடிகால் வாரியம் 4 ரூபாய்க்கு கொடுக்கும் தண்ணீரை இந்த நிறுவனம் 26 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் ஊக்குவித்தது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் குடிநீர் விற்பனை தொடர்கிறது. இது அதிகரித்தும் வருகிறது. இந்த நிலை மாற்ற வேண்டுமானால், நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் குடிநீரின் தரத்தை அதிகரிக்க வேண்டும். மாறாக, தண்ணீர் பாட்டில் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல். அரசே குறைந்த விலை குடிநீரை கொடுப்பதென்பது தற்காலிக ஏற்பாடுதான்.

தேர்தலுக்கு பின்னர் குடிநீர் உரிமையை பாதுகாக்கவும், மக்களுக்கு இலவசமாக சுத்திகரித்த நீர் கிடைக்கவும் திமுக போராடுமா?. ஸ்டாலினுக்கு அப்படிப்பட்ட உறுதி இருக்கிறதா?. இல்லை என்றே படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் இதுவொரு தேர்தல் ஆயுதம். மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டம்.

#Stalin I #DMK I #Water I #LPG I Sindhan Ra I #Privatisation

நோட்டா: ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ...

Sindhan Ra

களத்தில் நிற்கும் எந்த வேட்பாளரும் இல்லை என்ற வாய்ப்பு இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கடைசியாக தேர்தல் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்ல்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஸ்கர், தில்லி, மிசோரம்) 'நோட்டா' பதிவான தொகுதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கிரிமினல் வேட்பாளர்கள், வன்முறையாளர்களுக்கு எதிராக இந்த வசதி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
ஆனால், நோட்டா - அதிகம் பயன்படுத்தப்பட்ட 25 தொகுதிகளில் 1 மட்டுமே பொது தொகுதியாக இருந்திருக்கிறது. 50இல் 5 தொகுதிகள் பொது தொகுதிகள். மற்ற தொகுதிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்.
வேட்பாளரை நிராகரித்தவர்கள் அதிகம் உள்ள 100 தொகுதிகளில் 3 இல் 2 பங்கு தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கான தொகுதிகள். சத்திஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இந்த நடைமுறை அதிகமாக இருந்திருக்கிறது (The Hinduசெய்தி: http://bit.ly/1fjmnWL )
நோட்டா வாய்ப்பும் தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை/தீண்டாமைக் கருவியாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
--
காங்கிரஸ், பாஜக மட்டுமே வலுவாக உள்ள இந்த மாநிலங்களில் சாதிப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கமும் அதிகம் என்பதை வைத்துப் பார்க்கும்போது நம்மால் சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படுவதன் அடிப்படையை புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகம், கேரளம் மாநிலங்களில் என்ன போக்கு தென்படுகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க முடியும். ஆனால், நிச்சயம் இந்த விசயத்தில் தெற்கு தன்னை வேறு படுத்திக் காட்ட வேண்டும்.
I ‪#‎NOTA‬ I ‪#‎Election‬ I ‪#‎SocialJustice‬ I Sindhan Ra I ‪#‎BJP‬ I ‪#‎INC‬

முழுமையற்ற ஜனநாயகமும், மக்களும் ...

நேற்று சாலையோரக் கடை ஒன்றில், நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரரின் நண்பர் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்ற கடைக்காரர், மறக்காம 'கதிர் அரிவாளுக்கு' ஓட்டுப்போட்டுடுங்க என்று கேட்டுவிட்டு, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்.

காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது "நமது வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன். நமது சின்னம் கை. காங்கிரசுக்கு வாக்களிப்பீர்" என்று கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தால் "ஆம் ஆத்மி" கட்சியின் வண்டி துடைப்பத்தோடு வந்தது. வெள்ளைக் குள்ளா அணிந்தவருடன் ஒரு டிப்டாப் இளைஞர் குலைந்து குலைந்து பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக ஆம் ஆத்மி மீது ஈர்ப்படைந்தவராக இருக்க வேண்டும். தொலைபேசியில் அவர்களின் எண்களைக் குறித்தபடி நகர்ந்தார்.

பிரச்சார வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட குரல் என்னை கடந்து சென்றது. "முரசு முரசு" என்ற பாடல் ஒலிக்க, "குஜராத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றிய மகான் மோடியின் தலைமையில் இந்தியா" என அது உச்ச குரலில் வாக்குக்களைக் கேட்டது.

திமுகவினரும், அதிமுகவினரும் கிராமப்புறங்களில் தங்கள் கவனத்தை குவித்திருக்கிறார்கள். நகர மையத்தில் குஷ்புவும் வந்துவிட்டார். பாத்திமாபாபுவும் வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் 'சீமான்' வேறு 2016 இல் நாங்கள் சட்டமன்றத்தில் போட்டியிடுவோம், இப்பொது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசிச் சென்றிருக்கிறார். இன்னும் சுயேட்சைகள், வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கையில்தான் களம் காண்கிறார்கள்.

சூரியன் சுட்டெரிக்க, நிற்காமல் ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். திடீர் மவுசு மக்களுக்கு புதிதில்லை. மெளனம் பழகுகிறார்கள். அன்றாட வேலைகளில் எதுவும் நிற்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல், திரும்பப் பெரும் உரிமை இல்லாத ஜனநாயகம்! நம்முடையது. குறைகள் நிறைந்த நம் தேர்தல் முறையை தெளிவாகவே கையாள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மான் கராத்தே - கல் நீக்கி கடிக்க !

"10 திருக்குறள் கூட மனப்பாடம் செய்ய முடியாதவர்களால் - காதலிக்கப்படும் பெண்களுக்கான ஒரே தகுதி 'வெள்ளையாய் இருப்பது'.பெண்ணைப் பெற்ற தமிழ் வாத்தியார்கள் அரை முட்டாள்கள்."

"வாழ்க்கையில் வெற்றியடைய எந்த திறமையும் தேவையில்லை. மக்களை குஷிப்படுத்த ஒரே வழி - ஓபன் தி டாஸ்மாக் ..." 'மான் கரேத்தே' திரைப்படத்தின் வழியாக எதையாவது நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இப்படித்தான் ஆகும்.

சினிமாவில் எப்போதும் யதார்த்தமான கதைகளைத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை, ஆனால்  ஒரு கதைக்கு வியாபாரத்தைத் தாண்டி சில நோக்கங்கள் இருக்க வேண்டும்.

'IT' ஊழியர்களெல்லாம் நிறைய சம்பாதித்து - கூத்தும் கும்மாளமுமாக வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பது நமது பொதுப்புத்தி. ஆனால், எத்தனையோ உமாமகேஸ்வரிகளும் 'ஐடி' தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அப்பாவை, குடும்பத்தை, குழந்தையைப் பிரிந்து - வாழ்க்கைப் பாட்டுக்காக கசக்கிப் பிழியப்படுகிறார்கள் - என்ற உண்மை நமக்கு எப்போதாவதுதான் தெரிகிறது.

காதலைத் தாண்டி - காதலில் நிறைய இருக்கிறது. பொருளற்ற உரையாடல்களுக்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது. உங்கள் பெரிய மூக்கோ, அகண்ட கன்னங்களோ, அசிங்கமான மூக்கோ இன்னொருவரால் எள்ளப்படும்போது - வாய்விட்டுச் சிரிப்பது மனிதத் தன்மையற்ற கேவலம். இதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், ஒரு படைப்பாளனுக்கு அக்கறையில்லை.

நாம் வாழ்க்கையை சற்றும் பிரதிபளிக்காத, தகுதியற்ற படங்களை - கல் நீக்கி, கடித்துச் சாப்பிட பழகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதீத சகிப்புத் தன்மை - தமிழனின் பொது குணமாகிவருகிறது. விஜயகாந்த்துகள் அரசியல்வாதிகளாக இருக்கும் தமிழகத்தில் மான் கராத்தேவுக்கு மார்க்கெட் இருப்பது அதிசயமில்லை.

தெகிடி - தொடங்கிவைக்கும் சில தேடல்கள் !

'ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களை திரட்டி என்ன செய்துவிட முடியும்??' ... 'எந்தக் குற்றமும் செய்யாத போது உங்களுக்கு ஏன் அச்சம்?' அரசாங்கங்கள் ஒவ்வொரு குடிமகனின் தகவல்களையும் எந்த கட்டுப்பாடுமில்லாமல் திரட்டுவது குறித்த தகவலை எழுதியபோது வந்த கேள்விகள் இவை.

அமெரிக்கா, பிரிட்டன் வரிசையில் இந்தியாவும் உலகம் முழுவதுமுள்ள/தங்கள் சொந்த குடிமக்களதும் தனிநபர் தகவல்களை திரட்டுகின்றன. தொலைபேசி உரையாடல்கள், சேட்டிங் தகவல்கள், இ-மெயில்கள் என எல்லாமும் சேகரமாகின்றன. (இவை அரசுகளின் கைக்கு மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்களின் கைகளுக்கும் செல்கின்றன)

இப்படிப்பட்ட தகவல்களை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காட்டிக் கொடுக்கிறது 'தெகிடி'. படத்தின் நாயகன் ஒரு துப்பறியும் நிபுணர். அவர் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறார் என்பதுதான் கதை.
----
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகவும் படம் பேசுகிறது.

ஆனால், ஏதோ சில தனி நபர்கள் அல்ல - நிறுவனங்களே தங்கள் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள். குரூப் இன்சூரன்ஸ் பலன்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன என்பதையெல்லாம் 'சிக்கோ' என்ற ஆவணப்படம் இன்னும் தெளிவாகக் காட்டும். 

'தெகிடி' ஒரு சுவாரிசியமான கதைப் போக்கில், இப்படியான நல்ல தகவல்களை அறிந்துகொள்ளும் முயற்சியை தொடங்கி வைக்கிறது.

‪#‎A_feel_good_movie‬ ...

இழிவைச் சுமக்கும் இந்தியப் பண்பாடு !

தன் மனக் குறைகளை பிறரின் இழிவாகப் பார்க்கும் நோய்தான் இங்கே வியாபித்திருக்கிறது.

#அரவாணி அல்லது திரு நங்கை - என்ற பிறப்பை ஒரு மனிதன் தானாக தேர்வு செய்வதில்லை. அரவாணியாக ஒருத்தருக்குள் ஏற்படும் மாற்றம் எந்த வகையிலும் பிறருக்கு துன்பம் செய்வது அல்ல. ஆனாலும், காரணமேயின்றி அவர்களை இழிவாகக் கருதும் குற்றத்தை பலரும் செய்துதான் வருகிறோம்.

அரசு கொடுக்கும் படிவத்தில், அநாகரிகமான திருநங்கைகள் ஏற்க மறுக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை - என்னவென்று சொல்ல?

நேற்றுமுந்தினம் மதியம் பெண் சிசுக் கொலை தொடர்பான தொலைக்காட்சி விவாதம் நடந்தது, தஞ்சாவூரில் இருந்து ஒரு நண்பர் பேசினார், “என்ன இருந்தாலும் பெண்கள் நடந்துகொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்களை ஈர்க்கும் விதத்தில் உடை, நடைகளை அமைத்துக் கொள்ளும்போது. அவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது” என்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் - ஆதிக்க மனோபாவம்தான் காரணம் என்றுபடுகிறது. - ஆணுக்குள், பெண்ணின் கூறுகள் வந்தாலே அவர்களை இழிவாகக் கருதுவதும். இயல்பான ஆண், பெண் இனக் கவர்ச்சிக்கு கூட ’#பெண் உடலை’ குறையாகச் சொல்வதும்...

நம்மிடம் சரியான புரிதலும் கட்டுப்பாடும் இல்லாத போது - பிறர் மீது குற்றத்தை தள்ளிவிடுகிறோம். ‘முள் குத்தியது’ என்ற சொற்றொடரில் - முள்ளை மிதித்த உண்மை மறைந்துபோகிறது என்று சொல்வார்கள்.

# எத்தனை ஆண்டுகளாக - இந்த #இழிவுகளை நம் பண்பாடு சுமந்துகொண்டிருக்கப் போகிறது??

உத்தர் கண்ட் - உதவி செய்ய கரம் நீட்டுவோம் ...

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கும் உத்தர்க்கண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது அனுதாபங்கள் ...

காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தோடும் நதியின் சீற்றத்தில், சீட்டுக்கட்டு போல வீடுகள் சரிந்து விழுகின்றன. சிறுகச் சிறுகச் சேர்த்த செல்வங்களை கரைந்து செல்ல - கரகிறார்கள் ஒவ்வொரு மனிதஹும்.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவிலிருந்து, கடலூர் புயல் வரைக்கும் மனதில் வந்து அகல்கிறது. ஒரே ஒரு வீடு, எனக்கென ஒரு உலகம் - என்று வாழ்ந்துகொண்டிருந்த எத்தனை மனிதர்கள் - இந்தப் பேரழிவில் சிதைந்து போயிருப்பார்கள்.

சுனாமி பாதிப்பிலிருந்து மக்களை மீட்க - மத்திய அரசு ராஜிவ்காந்தி மறுவாழ்வு நிதியத்திலிருந்து ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியது. மேலும் பல தன்னார்வ உதவிகள் வந்தன. கரையெல்லாம் பிணங்களாய் ஒதுங்கி நிற்க - பாதுகாப்பாய் இருந்த கோவை, ஈரோடு, திருப்பூரின் வாலிபர் சங்கத் தோழர்கள் அவைகளை அகற்றிக் கொடுக்க ஓடிச் சென்றார்கள்.

அதே நேரத்தில், சிமெண்ட் மீதான பங்குகளை விலையேற்றியது பங்குச் சந்தைகள். என்.ஜி.ஓக்கள் பலவும் - உதவி நிதியில் ஊழல் செய்ததும் நடந்தது.

பேரழிவுகளின் போது. மனிதன் விழித்துக் கொள்கிறான். பிணந்திண்ணிகளும் கூடுகின்றன.

உத்தர்கண்ட் - பலிகள் நம்மில் பலரை உலுக்கியிருக்கலாம். இடந்த அழிவுகளை - இயற்கை மட்டும் தீர்மானிப்பதில்லை.

உலகின் 99 சதவீத கனிமச் சுரங்கங்கள் - வெறும் 2 சதவீத மக்களின் தேவைகளுக்காக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. - நமக்கு வசதிகள் தேவை - ஆனால், அதில் ஒரு திட்டமிடல் வேண்டும். லாபத்தை மட்டும் நோக்கமாய்க் கொண்ட இன்றைய சமூக அமைப்பால் - அந்த நிதானமான சிந்தனையை மேற்கொள்ள முடிவதில்லை.

”இமயச் சாரலில் ஒருவன் இறுமினால்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்”
-என்றார் பாரதிதாசன்

#சிந்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். - முடிந்தவர்கள் மீட்பு உதவிகளுக்கும் கரம் நீட்டுங்கள்.

முடக்கப்பட்ட முதல் சினிமாவில், கண் தெரியாத பாடகியின் இசை ...

இந்திய வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு சினிமா, முடக்கப்பட்ட கதையைச் சொல்லும் ”செல்லுலாய்ட் டிரீம்ஸ்” திரைப்பட அறிமுகத்தை மாற்று-வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். தமிழில் அந்தப்படம், ஜே.சி.டேனியல் என்ற பெயரில் வருகிறது.

இந்தப் படத்தில் வெளியாகவுள்ள பாடலை அறிமுகம் செய்த எனது பதிவு மாற்றுவில் வெளியாகியுள்ளது - இசையைப் பார்க்க முடிந்தவர் ’வைக்கம் விஜயலட்சுமி’ 

தாலி குறித்து மனுஷ்யபுத்திரனும் - உள்நோக்கம் கொண்ட விமர்சனங்களும் ...

தாலி குறித்து Manushya Puthiran தெரிவித்துள்ள கருத்தை - மதத்தோடு தொடர்புபடுத்தி, அவரை இழிவுபடுத்தும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

தீர விசாரிக்காமல் எழுந்துள்ள இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருவது என்னுடைய வேலை இல்லை. எனினும், ஒரு கருத்து எந்த சூழலில், என்ன நோக்கத்தில் சொல்லப்பட்டது என்பதை பார்ப்பதுதான் முக்கியமே அன்றி. சொன்னவரின் மதம் என்ன, சாதி என்ன என்று ஆராய்வது அறிவுடைமை அல்ல என்பதை அழுத்தமாக பதிய விரும்புகிறேன்.

மனுஷ்யபுத்திரன் ஒரு கேள்வி பதில் பகுதியில் இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். 

கேள்வி: ஒரு பெண் தாலியை கழற்றி எறிவது ஆணவத்தின் அடையாளமா? ஆத்திரத்தின் அடையாளமா? வெறுப்பின் அடையாளமா?

தாலியைக் கழற்றி எரிவது ஆணவம், ஆத்திரம், வெறுப்பு என 3 இல் ஏதோ ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என அமைக்கப்பட்டுள்ள இந்தக் கேள்வி - நாசூக்கான முறையில் தாலி ஒரு பெண்ணுக்கு மிக அவசியமான அடையாளம் என முன் நிறுத்துகிறது.

பிற மதங்களைப் போல - இந்து மதத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமாக அணியப்படும் தாலி வெறும் மணமானதைக் குறிக்கும் அடையாளமல்ல. மாறாக, அது கணவனை சார்ந்து அடிமைச் சேவகம் செய்வதை - நியாயப்படுத்தும் அடையாளமாகும்.

எனவேதான் தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள், தமிழர்கள் தலையில் வைத்து போற்றத்தகுந்த சீர்த்திருத்தவாதிகள் - தாலியை வெறுத்தொதுக்கச் சொன்னார்கள். - தாலியை பலவந்தமாக அகற்றவேண்டியதில்லை. ஆனால், அது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உட்பொருளை பகுத்தறிவால் ஆராய ஒரு பெண் தொடங்கும்போது, அதனை கழற்றி எரியவும் அந்தப் பெண் தயங்க மாட்டாள்.

எனவே, தாலியை முட்டுக் கொட்டுக்கும் விதமாக கேட்கப்பட்ட கேள்விக்கு - மனுஷ்யபுத்திரன் - பெண்களின் நியாமான கோபத்தை பிரதிபளிக்கும் விதமாக பதில் கொடுத்திருக்கிறார்.

பதிலை மடும் வைத்து, ஒருதலையாக எழுப்பப்பட்ட சர்ச்சை - உள்நோக்கம் கொண்டதாகும்.

அறிவாளியாகக் காட்டுதல் ... நேற்றைய நீயா நானா? !

அறிவாளியாகக் காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?? என்ற விவாதத்தில் - பலர் உண்மையைப் பேசினார்கள்.

உதவி இயக்குனராக உள்ள ஒரு பெண் ’எனக்கு கரகாட்டக்காரன் படம் பிடிக்கும். ஆனால் அதைச் சொன்னதும் கிண்டல் செய்தார்கள்’ என்று சொன்னார். - ஆம், தமிழக பண்பாட்டின் வேர்களை மறந்துவிட்டு ‘வித்தியாசமான’ படங்கள் வந்தால் - அதனை சிலாகிக்கும் ஒரு பகுதியினரும் உண்டு.

கரகாட்டக்காரனைப் பிடித்த இயக்குநர். தன் தொழில் சார்ந்த சில நுட்பங்களை கற்பதற்கான பல மொழிப் படங்களையும் நாடலாம். - ஆனால், அதன் பொருள் - என் உள்நாட்டு தொழில்நுணுக்கங்கள் கீழானவை என்பதல்ல.

அந்த விவாதம் - கொஞ்சம் அதிகமாகப் பொய் சொல்லவும் அறிவுருத்தல்களைக் கொடுத்தது.

என் பெயர் சிவப்பு - என்றொரு புத்தகம் குறித்து சொன்னார்கள். நான் இதுவரைக்கும் அதன் அட்டையைக் கூட பார்த்ததில்லை. பீத்தோவனின் இசையோ அல்லது ஏதோ போர்ச்சுக்கீசியரின் இசையோ - கேட்பதாகச் சொல்லிக் கொள்வதை பெருமையாகக் கருதுவதற்கும் ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கத்தான் செய்கிறதோ. தகுதிக்கு மீறிய பொய்களைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதே சமயம் பொய்களை - ஒரு இமேஜ் உருவாக்கத்துக்காக நாம் சொல்வதும் உண்மைதான். அந்தப் பொய்களைச் சொல்வதன் மூலம், அந்த உயரத்தை எட்டியாக வேண்டிய உளவியல் நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படியான பொய்கள் நல்லவை.

#பி குட் ...

அப்பாவைப் பிடித்தவர்களுக்காக ...


எல்லோரும் தந்தையர் தின வாழ்த்துச் சொல்கிறார்கள்...

அப்பா இருந்த வரைக்கும் இப்படியொரு தினத்தை கொண்டாடியதில்லை. அப்பா, இல்லாதபோது ... சுற்றிச் சுற்றி - எத்தனை அப்பாக்கள் தென்படுகிறார்கள். தினமும் சாலையில், நிறைய முதியவர்களை பார்ப்பதுண்டு. உடல் தளர்ந்தாலும், 8 மணிப் பேருந்தின் கதவருகே தொங்கிக் கொண்டு பணிக்குச் செல்லும் அப்பாக்களை என்னவென்று சொல்வது??

பெற்ற மக்களுக்கு அன்னியமாகும் உளவியலின் வலி கொடிது. அந்தக் கண்ணீர்தான் அதிகம் காயப்படுத்துகிறது. மகன்கள் உணர்ந்திடாத, ஒருதலைக் காதலனாய் வெந்து மடிகிறான் அப்பன்.

எல்லா அப்பன்களுக்கும் முதுமை உண்டு. முதுமை - நமது வாழ்க்கையின் மற்றொரு முகம். 
குழந்தையாய்ப் பிறந்து, குழந்தையாகவே இளைஞனாகி, பின் தலை நரைத்து - திடீரென செத்துப்போகும் சாதாரண வாழ்வில். அப்பனாவது, ஒரு பரிணாம வளர்ச்சி.

குழந்தை, காதலனாகி, கணவனாய்ச் சறுக்கி பின் - ஒரு குழந்தையின் மெல்லிய தீண்டலையும், வலிய நிராகரிப்பையும் தாண்டி அப்பனாய் பிறத்தல் ஒரு தவம். 


என் அப்பா - தி.மு.ராசாமணி, தனது மரணப் படுக்கையில்
வாழ்நாள் உழைப்புக்கான விருதைப் பெற்றபடி ...


-

Labels