வானத்தின் அடியில்
ஒழுகாததொரு கூரையும்
கம்பிகளூடே உலகம்
காட்டுகிற ஜன்னலும்
”லைலா” புயல்
கரை கடப்பதை
நேரடி செய்தியாக்கும்
தொலைக்காட்சியும்
அம்மா கொடுத்த
சூடான காபியும்...
குடிசை வாசிகளை,
வீடற்றவர்களை,
சாலையோரத்தின்
அனாதைச் சிறுவர்களை,
கடலுக்குள் தொலைந்த
மீனவத் தோழர்களை
அப்போதைக்கு மறக்க முடிகிற
சொற்ப நினைவாற்றலும்
இருப்பதால்
மழையை ரசிக்க
வாய்க்கிறது நமக்கு ...