Showing posts with label கூட்டாட்சி தத்துவம். Show all posts
Showing posts with label கூட்டாட்சி தத்துவம். Show all posts

'தேசிய' தொலைக்காட்சிகளின் வீழ்ச்சி ...!

மத்திய ஆட்சியில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டால் இப்படித்தான் - ஒவ்வொரு மாநில மக்களின் நலன்களுக்காகவும் தேசம் வளைந்து கொடுக்க நேரிடும். - இது ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியின் புலம்பல்.

மக்கள் இல்லையேல் ஏது தேசம்? மக்களுக்காக அரசுகள் சிந்தித்து, அவர்களின் உணர்வுகளை மதித்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது?? இதுவரை மதிக்கப்படாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு இனியேனும் மதிப்புக் கிடைத்தால் என்ன நடந்துவிடும்? நாங்களன்றி ஏதடா தேசம்??? ...

இதுவெல்லாம் அவர்களுக்கு புரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்  நம் தேசிய சேனல்கள் எல்லாம் தில்லி மாநகரத்தின்  மெட்ரோ சானல்களாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி, வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் ஒன்றான தமிழகம், கல்வியறிவு பெற்ற கேரளா, திரிபுரா என எதுவும் அவர்களுக்கு நிர்வாக உதாரணங்கள் அல்ல. ஏனென்றால், இவர்களுக்கெல்லாம் தில்லியில் செல்வாக்கில்லை.

தில்லியில் ஒரு சிறுபான்மை அரசமைத்ததும், 'ஆம் ஆத்மி' கட்சியின் தலைவரை அவர்கள் பிரதமர் வேட்பாளர் வரிசையில் வைக்கத் தொடங்கிவிட்டனர். இந்த லட்சணத்தில் தாங்களே இந்தியாவைப் பாதுகாப்பதுபோன்ற தோரணை வேறு.

அவர்கள் கவலையெல்லாம், இந்த அறியாமைக் குட்டு வெளிப்பட்டுவிடுமே. அரைவேக்காட்டு புரிதலோடு நிகழ்ச்சிகளை ஓட்டிக்கொண்டிருக்க முடியாதே என்பதுதான்.

ஒன்று உறுதி ... அதிகபட்ச உரிமைகள் பெற்ற உண்மையான கூட்டாட்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்போது, இவர்கள் காணாமல் அடிக்கப்படுவார்கள்.

Labels