Showing posts with label விவாதங்கள். Show all posts
Showing posts with label விவாதங்கள். Show all posts

கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் தகுமோ 2 : சில விவாதங்கள்

பெரும்பாலும் விளைவுகளின் மீது விவாதம் நடத்தும் நாம், அடிப்படைக் காரணங்களை நோக்கிச் செல்வது குறைவு. நேற்று வாரிசு அரசியல் தொடர்பாக ஒரு விவாதம் நடந்துகொண்டிருந்தது.

அய்யா பழ.கருப்பய்யா - இந்தியா முழுவதும் எல்லாக் கட்சிகளும் இப்படி மாறிவிட்டன. இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதது என்று பொதுப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார். தொடர்ந்து பேசிய பத்திரிக்கை ஆசிரியர் Vijayasankar Ramachandran அரசியலில் தகுதியற்ற வாரிசுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் - இப்படியான குற்றச்சாட்டு இடதுசாரிகள் மீது இல்லை என்பதைச் சொல்லி - அடுத்ததாக எதையோ சொல்ல எத்தனிக்க ...

விவாதத்தை ஒருங்கிணைத்த Gunaa Gunasekaran (அவர்களிடம் இப்படிப்பட்ட நல்ல பண்புகள் இருந்தால் என்ன?) 'அவர்கள் வெற்றிகரமாக இல்லையே' என்று கேள்வியெழுப்பினார். அவ்வளவுதான் விவாதம் முழுக்க திசை மாறிவிட்டது.

இதில் எனது கருத்து "அரசியல் கட்சிகள் கொள்கை சாராம்சத்தை இழந்து, சிலரின் கைப்பாவைகளாக மாறிவிடும்போது, தகுதியற்ற வாரிசுகள் முன்னுக்கு வருகிறார்கள்." என்பதாகும். பொதுவாக தேர்தல் 'வெற்றி'யை மட்டுமே மையப்படுத்தி அரசியலை மதிப்பிடுவதுதான் இந்த சருக்கலுக்கு முதல் அடிப்படையாக அமைகிறது.

நாம் கொண்ட கொள்கையில் சறுக்காமல் - ஒரே ஒரு அடி முன்னேற முடிந்தாலும் அதுதான் வெற்றி. கொள்கையை இழந்ததால் நமக்கு அகிலமே கிடைத்தாலும், அதுதான் மிகப்பெரும் தோல்வி.

தமிழகத்தில் பண்பாட்டுத் தளத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அய்யா பெரியாரும், ஜீவானந்தமும், சீனிவாசராவும் எத்தனை தேர்தல்களின் வெற்றிபெற்றார்கள்? ... ஆனால், இன்றைக்கு வெற்றியை மட்டுமே மையமாகக் கொண்டு சிந்திக்கும் அரசியல் இயக்கங்கள் - கொள்கைகளின் எத்தனை நீர்த்துப் போயிருக்கின்றன.

சிலருக்கு இடதுசாரிகளின் அரசியலில் மாறுபாடு இருக்கலாம், சிற்சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து - பொது நோக்கத்தை முன்நிறுத்திய மெய்யான கூட்டணிகள், இடதுசாரிகள் வலுப்பெரும்போதுதான் நடக்கிறது என்பதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்தியவர்களும், அதன் மூலம் கூட்டாட்சிக்கு புதிய பொருள் கொடுத்தவர்களும் இடதுசாரிகள். சொந்தக் கட்சிக்குள் மாநாடு, நிர்வாகிகள் தேர்வு, கொள்கை அறிக்கை மீதான விவாதம் போன்ற சமயங்களில் அதிகபட்ச ஜனநாயகமும், பிற சமயங்களில் நேர்த்தியான கட்டுப்பாடும் கொண்டு செயல்படுகிறார்கள்.

அரசியலில் இருந்து கொள்கைகள் தனிமைப்படுவது மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்தை உணர்ந்த எதிர்வினைகள் தேவைப்படுகின்றன.

கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் தகுமோ 2

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் தகுமோ! - சில விவாதங்கள்

"அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் முதலீடு செய்தார்கள். சுதந்திரத்திற்கு பின் சம்பாதித்துக் கொள்வார்கள்" டாட்டா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளிடம் காங்கிரசும், பாஜகவும் நிதி பெறுவது தொடர்பாக காங்கிரஸ் காரர் சொன்ன விளக்கம். அதுவும் தொலைக்காட்சியில்.

மேலும், எங்களுக்கு கட்சி நடத்த யார் பணம் கொடுப்பார்கள்? இவர்கள் கொடுப்பார்களா? எங்களுக்கு பணம் கொடுத்தவன் சம்பாதிப்பதை எப்படி தடுக்க முடியும்? அது அவனவன் திறமை. எனக்கு டீ வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென கோடீஸ்வரன் ஆகிவிட்டான் - ஒரே ஒரு லைன்சென்ஸ் வாங்கு 800 கோடிக்கு விற்பனை செய்தானாம். இதையெல்லாம் எப்படி தடுப்பது? - ஒரு பொது தொலைக்காட்சியில் - மக்கள் முன்னே அவர் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நாடு கொள்ளைபோவது தொடர்பாக அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

அதே நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஆறுமுக நயினார் பேசிய போது - பெரு முதலாளிகள் கொடுத்த காசோலையை - பகிரங்கமாக திருப்பி அனுப்பியதையும். உண்டியல் குழுக்கி சேர்த்த பணத்திலேயே தங்கள் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதையும் சொல்லக் கேட்க ஆறுதலாய் இருந்தது.

அந்த மார்க்சிஸ்டுகளை ஆதரிக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், உண்மையைச் சொல்கிறேன் அந்த ஆறுதல் உணர்வில் பெருமிதம் ஒன்றுமில்லை.

அரசியலை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களே - லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பெற்ற சுதந்திரத்தின் மேல் - சூதாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நமது அரசியலை இழந்துகொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் மாண்புகள் விலைபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் தகுமோ!

Labels