கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் தகுமோ! - சில விவாதங்கள்

"அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் முதலீடு செய்தார்கள். சுதந்திரத்திற்கு பின் சம்பாதித்துக் கொள்வார்கள்" டாட்டா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளிடம் காங்கிரசும், பாஜகவும் நிதி பெறுவது தொடர்பாக காங்கிரஸ் காரர் சொன்ன விளக்கம். அதுவும் தொலைக்காட்சியில்.

மேலும், எங்களுக்கு கட்சி நடத்த யார் பணம் கொடுப்பார்கள்? இவர்கள் கொடுப்பார்களா? எங்களுக்கு பணம் கொடுத்தவன் சம்பாதிப்பதை எப்படி தடுக்க முடியும்? அது அவனவன் திறமை. எனக்கு டீ வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்த ஒருவன் திடீரென கோடீஸ்வரன் ஆகிவிட்டான் - ஒரே ஒரு லைன்சென்ஸ் வாங்கு 800 கோடிக்கு விற்பனை செய்தானாம். இதையெல்லாம் எப்படி தடுப்பது? - ஒரு பொது தொலைக்காட்சியில் - மக்கள் முன்னே அவர் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நாடு கொள்ளைபோவது தொடர்பாக அவர்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.

அதே நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஆறுமுக நயினார் பேசிய போது - பெரு முதலாளிகள் கொடுத்த காசோலையை - பகிரங்கமாக திருப்பி அனுப்பியதையும். உண்டியல் குழுக்கி சேர்த்த பணத்திலேயே தங்கள் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதையும் சொல்லக் கேட்க ஆறுதலாய் இருந்தது.

அந்த மார்க்சிஸ்டுகளை ஆதரிக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், உண்மையைச் சொல்கிறேன் அந்த ஆறுதல் உணர்வில் பெருமிதம் ஒன்றுமில்லை.

அரசியலை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களே - லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து பெற்ற சுதந்திரத்தின் மேல் - சூதாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நாம் நமது அரசியலை இழந்துகொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தின் மாண்புகள் விலைபோவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குதல் தகுமோ!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels