Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

திமுக தன்னை நியாயப்படுத்த முடியுமா??

திமுகவின் ஊழல் அரசியல் குறித்து சிபிஐ(எம்) தோழர் வரதராஜன் பேசியிருந்ததில் சிறு பகுதியை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.

(CPIM Tamilnadu கம்யூனிஸ்ட்டுகள் உண்டியல் கண்டுபிடித்ததால் தான் இன்றுமக்கள் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கிறோம். திமுக சூட்கேசைக் கண்டுபிடித்ததால் தான் 5 ஆண்டு பதவியிலும், 5 ஆண்டு ஜெயிலிலும் இருக்கிறார்கள்.  -தோழர் கே. வரதராசன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.)

அதில் வந்த திமுக நண்பர்கள் கொதிப்படைந்துவிட்டார்கள். அதிமுக விடம் கூட்டணிக்காக காத்திருந்து ஏமாந்தவர்கள்தானே கம்யூனிஸ்டுகள் ... என ஆரம்பித்து தங்கள் மார்க்சிய பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதிமுகவோடு கம்யூனிஸ்டுகள் கூட்டணி ஏற்படுத்த விரும்பியது உண்மை. அதிமுகவும் கம்யூனிஸ்டுகள் நடத்திய வகுப்புவாத எதிர்ப்பு மாநாடு உள்ளிட்டு பல நிகழ்வுகளுக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள் என்பதும் உண்மை. இந்திய தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் மற்றவரை விட அதிகம் பெற்றால்தான்தான் வெல்ல முடியும். எனவே, அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி தேவைப்படுகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பரவலாக இருப்பதால் தொகுதி உடன்பாடு செய்தால், நாடாளுமன்றத்தில் தங்கள் போராட்டக் குரலை ஒலிக்க முடியும் எனக் கருதி தொகுதி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொள்கை சமரசம் செய்துகொண்டதால சொல்ல முடியுமா?

சென்ற 3 ஆண்டுகளில் - கம்யூனிஸ்டுகள் நடத்திய முத்தாய்ப்பான போராட்டங்களையும், சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தது கம்யூனிஸ்டுகள் என வெளிப்படையாகச் சொல்ல முடியும். ஆனால், மத்திய ஆட்சியில் 'கூட்டணியாக' தேவையான அமைச்சர்களை கேட்டுப் பெற்ற திமுக - மத்திய ஆட்சியின் பொருளாதார நடவடிக்கைகளை வன்மையாக எதிர்த்ததுண்டா?.. மாநிலங்களின் சுயாட்சி விசயத்தில் என்ன சாதித்தது? ... சில்லரை வர்த்தகத்தின் அந்நிய முதலீட்டையேனும் தடுக்க முடிந்ததா?

அவற்றை விடலாம் ... இன்றைக்கு மின்வெட்டு தலைவிரித்து ஆடுவதற்கு காரணம் மின்சார சட்டம் 2003. இந்தச் சட்டம் மத்தியில் முன்வைக்கப்பட்டபோது திமுகவும், அதிமுகவும் இணைந்தே ஆதரித்ததுதானே உண்மை? ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா விசயத்தில் திமுகவின் 5 ஆண்டு மாநில ஆட்சிக் காலத்தில் நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகள் அளவுக்கு போராடாவிட்டாலும், ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்களா? தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களில் திமுக களம் கண்டதுண்டா??

அதிமுகவை வாய்தா ராணி என வசைபாடிக் கொண்டே, தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்ற படிக்கட்டுகளில் எறிக் கொண்டிருக்கும் பணியைத்தானே செய்து வருகின்றனர்? திமுகவினர் ஆத்திரமடையலாம், ஆனால் தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கப் பாரம்பரியத்தை சிதைத்து ... அவர் முகத்திலேயே கரிபூசிய செயல்பாடுகளை நியாயப்படுத்திவிட முடியாது.

ஏனிந்த சரணாகதி Mr. கெஜ்ரிவால்??

ஒருபக்கம் அம்பானியை விமர்சித்துவிட்டு - இந்திய முதலாளிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கெஜ்ரிவால். முதலாளிகள் அமைப்பான சிஐஐ நடத்திய சந்திப்பில் அவர் கொடுத்த விளக்கத்தில் 'அரசாங்கம் தொழில் நடத்தக் கூடாது' என பொதுத்துறைகளை அரசு கைவிடும் நடவடிக்கை உட்பட பல தாராளமய பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் கொள்கைகள் என்ன? என்று பலதரப்பு கேள்வி எழுப்பியபோதும் வாய் திறக்காதவர்கள் - அம்பானி எதிர்ப்பால் தொழிலதிபர்களின் பகைமைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அவசரத்தில் இதைச் செய்துள்ளது வெளிப்படை.

ஒவ்வொரு, பட்ஜெட் உரை தயாரிப்பின்போதும் - பெரிய முதலாளிகளைச் சந்திப்பதும், கோரிக்கைகளைக் கேட்பதும் காங்கிரஸ், பாஜகவின் வழக்கம். 'ஏன் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்திப்பதில்லை' என்ற கேள்வியை இடதுசாரிகள் முன்வைப்பார்கள்.

ஆனால், அரசு இதுவரையிலும் தன் நிதிநிலை அறிக்கை மீதான சாமானியர்களின் எதிர்பார்ப்பை கேட்டதில்லை. 'சாமானியர்களின்' கட்சியான ஆம் ஆத்மியும், தற்போது அதைத்தான் செய்திருக்கிறது.

உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் என்ன? என பலமுறை கேட்டும் விளக்கம் கொடுக்க முன்வராதவர்கள். தற்போது பெரிய நிறுவனங்களிடம் போய் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். கெஜ்ரிவாலின் விளக்கங்களில் பல அபத்தமானவை. அப்பட்டமாக, தொழிலதிபர்களின் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவை.

இந்த விருப்பத்தில் அவர்கள் வெற்றியடையலாம். ஆனால், அந்த வெற்றி, சாமானியர்களின் வெற்றியாக இருக்கப்போவதில்லை.

அய்யா ராமதாசின் காதல் ...

செவிலியரோடு மருத்துவர் ராமதாசுக்கு பழக்கம் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நாம் விமர்சனத்தோடு பார்க்க வேண்டியதில்லை. இந்த வயதில்தான் சரியான நட்பு கிடைத்திருக்கிறதென அவரின் மனம் உணர்ந்திருக்கலாம். அவருக்கான வாழ்க்கையை, தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவருக்கு இருக்கிறது.

சட்டப்படி இது தவறென்று கருதப்படலாம், எனவே அவரின் குடும்பத்தாருக்கு உரிய நீதியை அவர் வழங்க வேண்டும்.

சாதிய விசமப் பிரச்சாரத்துக்கு பலியாகி - காதல் திருமணங்களை எதிர்த்து துவேசம் கொண்டு - ஊரையே எரித்த தொண்டர்கள் - இப்போதாவது மன விருப்பத்தின் வலிமையை புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.

காதலிப்பது குற்றமில்லை. காதலித்த பெண்/ஆண் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்வது குற்றமில்லை. சுய மரியாதையுடன் வாழ்வது குற்றமில்லை.

மனைவி இருக்கும்போதே, மன விருப்பம் இன்னொருவரிடம் இருந்தால் - விவாகரத்து செய்யாமல் உறவு தொடர்வது சட்டப்படி குற்றம். ஆனால், இந்தக் குற்றத்துக்காகவும் கூட எந்த கிராமத்தையும் எரிக்க வேண்டியதில்லை.

‪#‎வாழ்த்துகள்‬!

நிர்வாண விளம்பர உத்தி - ஒரு உண்மை !

இந்தி நடிகை மேக்னா நிர்வாணமாக நின்றபடி பாஜகவுக்கு வாக்குக் கேட்கிறார்.

மோடிமீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 'தன் கலாப்பூர்வமான' பங்களிப்பை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இணையதளத்தில், சீனாவின் நகரத்தை 'அகமதாபாத்' என்று மாற்றியது போலவோ. பாகிஸ்தான் வீடியோவை பயன்படுத்தி முசாபர் நகரில் கலவரத்தை தூண்டியது போலவோ, மோடியின் பேச்சை ஒபாமா கேட்பதாக மாற்றி, பின் அது ஒரு ஒட்டுவேலை என்ற செய்தி பிபிசி உலக தளத்தில் வெளியாகி தலைகுனிவை ஏற்படுத்தியது போலவோ அல்ல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்பது பாஜகவுக்கு ஆறுதல்.

இந்த அரை நிர்வாணப் படங்கள் இளைஞர்களை ஈர்க்கும் என மேக்னா நினைத்திருக்கலாம். முதல் முறை வாக்காளர்களிடம் கொள்கைகளைப் பேசுவதை விட, இந்த வழிமுறை 'கவர்ச்சியாக' இருக்கும் என அவர் முடிவு செய்திருக்கலாம். சட்டசபையிலேயே நீலப்படம் பார்க்கும் பாஜகவின் அமைச்சர்களும், அவர்களை பின்பற்றுவோரும் மகிழ்ந்திருப்பார்கள்.

'மார்க்கெட்டிங்' தெரிந்த அவர்களின் தலைவர்கள். எதிர்மறை விமர்சனமானாலும் 'அது ஒரு விளம்பரம்' என்று சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருப்பார்கள்.

நமக்கு இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெரிகிறது.

தங்கள் கொள்கைகளை மறைத்துக் கொண்டு, கவர்ச்சி வார்த்தைகளில், வாக்குகளை வாங்க நினைக்கும் இந்தக் கூட்டம், அதிகாரத்திற்கு வருமானால். தேசம் இப்படித்தான் அரை நிர்வாணத்தோடு நிற்க நேரிடும்.

யுவன் - இளையராஜா: போற்றுதலுக்குரியது என்ன?

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியுள்ளது விவாதப் பொருளாகிறது. யுவன் மனதுக்கு நெருக்கமான கடவுள் யார்? என்பதையும், கடவுளே வேண்டாமென்றும் முடிவு செய்வது அவரின் தனிப்பட்ட உரிமை.

ஆனால் அவர் மதம் மாறிய செய்தி வந்தவுடன் - இதை அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் செய்கிறார் என்ற கொச்சையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா டுவிட்டர் தளத்தில் கொடுத்துள்ள விளக்கம்: " நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை"

அவர் எந்தப் பெண்ணோடு தன் உடலையும், சொத்துக்களையும் பகிர்ந்துகொள்கிறார் என்பது நம்மைக் கேட்டு எடுக்க வேண்டிய முடிவல்ல.

என்னைப் பொருத்தமட்டில், அவரது குடும்பத்தினர் யாரும் மதம் மாறாமல் தொடர, யுவனின் சொந்த முடிவை ஆதரித்திருப்பதுதான் இங்கே கவனித்து, பாராட்ட வேண்டியதும், பொது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியதுமான விசயமாகும்.

ஒரு குடும்பத்தில், பல மத நம்பிக்கையுள்ளவர்கள் தொடர முடியும் என்பது பெருமைக்குறிய உதாரணம். இளையராஜா, யுவன் என்ற இருவரின் பக்குவமான ஆளுமை இங்கே வெளிப்படுகிறது.

அவர்களுக்காக பெருமிதம் கொள்வோம் ...

திமுக ஆதரவாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் ...

திமுக - அழகிரியை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. தற்காலிகம்தான் என்றாலும் இதுவொரு நல்ல முடிவு. காலதாமதமே என்றாலும், எடுக்க வேண்டிய முடிவு.

அதிகாரப் போட்டிக்காக த.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டபோதும், தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்கள் கருகிச் செத்தபோதும் அவர்களுக்கு இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் நெருக்குதல் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, அழகிரிக்கு கட்சிப் பொருப்புகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டன.

உரத்துரை மந்திரியாக அவர் இருந்தபோதுதான், உர மானியங்கள் வெட்டப்பட்டன. விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏன் எடுத்தோம்? என்ற விளக்கக் கூட சொல்லத் தெரியாத, நிர்வாகியாக இருந்தார். ஆனாலும், அவர் அமைச்சராக நீடித்தார்.

திருமங்கலம் பார்முலாவை மட்டும் நம்பிய அழகிரி, அரசியலை எத்தனை எளிமையான விளக்கத்திற்குள் கொண்டு சென்றார்? என்பதும் இடைத்தேர்தல்களில் ஒரு விதமாகவும், பொதுத்தேர்தலில் வேறொரு விதமாகவும் மக்கள் பதிலடி கொடுத்ததும் மறக்க முடியாது.

ஆனால் அப்போதெல்லாம், கோபம் கொள்ளாத திமுக இப்போது 'தற்காலிக நீக்கத்தை' அறிவித்திருப்பதும். அதுவே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியென அய்யா வீரமணி சான்றிதழ் கொடுத்திருப்பதும். இதுவெல்லாம் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவை தாஜா செய்யும் வேலை மட்டும்தானோ? என்ற ஊகத்துக்கு இட்டுச் செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சுனந்தா புஸ்கர் - படுகொலை ...

சுனந்தா புஷ்கர் உடல் கைப்பற்றப்பட்ட அடுத்த நொடியிலிருந்து, அவர் மரணத்திற்கு வருத்தப்படுகின்றன ஆங்கில தொலைக்காட்சிகள். முந்தா நாள் இரவு வரை, ஹெட்லைன்ஸ் டுடே ராகுலுக்கு அவர் மெசேஜ் செய்திருக்கிறார். சசி தரூருடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த பத்திரிக்கையாளர், தொலைபேசியில் அழைத்து அழுகிறார்.

அந்த 5 நட்சத்திர விடுதிக்குள், மறைத்துவைக்கப்பட்ட மொபைல் காமிராவில் வீடியோ எடுத்து காட்டுகிறார்கள். 'கொலையா?' மர்ம மரணமா?", "தற்கொலையா" என பதறுகிறார்கள்.

சசி தரூருக்கு - சுனந்தா 3 வது மனைவி, அவருக்கு இன்னொரு பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டதாக டுவிட்டரில் சில நாட்களுக்கு முன் சுனந்தா எழுதியிருந்தார். சசி தரூர் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், அவரது அந்தரங்கத்தை செய்தியாக்கி, விவாதப் பொருளாக்கியது நியாயமில்லை.

இப்போது ஏற்பட்டுள்ள சுனந்தாவின் மரணம் - மன அழுத்தத்தால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். அப்படியிருப்பின், ஊடகங்களே உண்மையான கொலைகாரர்கள். சசி தரூரைத் தாண்டி - அவருக்கென ஒரு வாழ்க்கை இருந்தது.

ஆனால், அந்தரங்கத்துக்கு இங்கே என்ன மரியாதை இருக்கிறது??

வீரம் - மூன்று செய்திகள் ...

திரைப்படங்களை வணிக திரைப்படம், கலைத் திரைப்படம் என்று பிரிப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. ஒரு ரசிகனாக தன்னிடம் வரும் மனிதனுக்கு, திரைப்படம் எதைக் கொடுக்கிறது? என்பதுதான் மையமான கேள்வி. அந்த வகையில் 'வீரத்தை' மூன்று காரணங்களுக்காக கொண்டாடலாம்.

'நான் உழைக்கிற சாதிடா' - படத்திற்கு இந்த வசனம் தேவையா? என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய சூழலில் சுரண்டுபவனை எதிர்க்க, நீ உழைக்கும் சாதியாய் இருந்தால் போதுமென்கிறது வீரம்.

படத்தின் வில்லங்களை இன்ன சாதி, இன்ன மதம் என்று அடையாளப்படுத்துவதிலிருந்து மாறுபட்டு - கந்துவட்டிக் கும்பலையும், பட்டாசு ஆலைகளின் ஒட்டச் சுரண்டும் கூட்டத்தையும் நிறுத்தியிருப்பது - சமகாலத்தின் தேவை.

இறுதியாக - நாம் என்னதான் நியாயத்தின் பக்கம் நின்றாலும், நம்மால் தனது சொகுசு வாழ்க்கையை இழக்க நேறும் வெறியர்களும்/ எதிர்வர்க்கமும் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் உழைக்கிறவனை உரசி, வன்முறைக்குத் தூண்டுவார்கள் ... ஆனால், இறுதியில் உழைக்கிறவன் வெல்வான்.

இந்த இடத்தில் உழைக்கும் சாதியின் பிரதிநிதியாக, அஜித் நிற்கிறார். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் நின்ற்க வேண்டும்.

# kudos man ... fight united :)

Labels