ரேசன் கடையில் ஒரு இஞ்சினியரிங் மாணவி ...

சாமானிய டைரி 5:

இஞ்சினியரிங் மாணவி ஒருத்தரின் அம்மா என்னிடம் தொலைபேசியை வாங்கி அழைத்தார் ... "சாமி, கடைலதான் இருக்கியா?.. இன்னைக்கு என்ன பொருள் போடறாங்க?" "கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், வாங்காம திரும்பிடாத"

ரேசன் கடையில், கூட்டத்தின் இடையே அந்தப் பெண் காத்திருந்தது சொல்லாமலே விளங்கியது. "பச்சரிசி போட்டா வாங்கிக்கோ" என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.

நியாயவிலைக் கடையில் குறைந்த விலையில் பொருட்கள் கொடுப்பதற்கு சில ஆயிரம் கோடிகளை அரசு செலவிடுகிறது. தமிழக மக்கள் அந்த சேவையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஓரளவு வருமானம் வரும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்களால், சேமிக்க வழி கிடைகிறது. ஏழைக் குடும்பங்களோ பசியிலிருந்து தப்பி, அவசியமான பிற செலவுகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த மாணவியின் கல்வி இஞ்சினியரிங் வரை தடையில்லாமல் தொடர்ந்ததற்கு - போசாக்கான உணவு கிடைக்கவும், பொருளாதாரம் காக்கப்படவும் வழிவகுக்கும் இப்படிப்பட்ட திட்டங்கள் ஒரு காரணம். அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியில்லாத நிலையில்தானே நம்மால் பிற செலவுகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மிகப்பெரும் நிறுவனங்களுக்கு சலுகையாக, வரித் தள்ளுபடியாக கொடுப்பதால் விளைந்த நன்மைகளை விட. சில 10 ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் விளைவித்த நன்மைகள் ஏராளம்.

அந்தப் பெண் குழந்தை காத்திருக்கிறாள். அவளுக்குத் தெரியும், தன் குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்குமான உழைப்பு இதுவென்று.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels