Showing posts with label ஆயிரத்தில் ஒருவன். Show all posts
Showing posts with label ஆயிரத்தில் ஒருவன். Show all posts

இன்றும் மறையாத பிம்பம்: 'ஆயிரத்தில் ஒருவன்'

“ஆட்சியாளர்களை மாற் றுவதல்ல, அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என்று புரட்சியாளர்களிடம் வாதம் செய்கிறார் எம்ஜிஆர். ஆனால் அந்த நாட்டின் சர்வாதிகார அரசு அவரையும் புரட்சியாள ரென்று முத்திரையிட்டு, அடிமையாக விற்க உத்தரவிடுகிறது. கன்னித் தீவுக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில், தானும் புரட்சிப் படையில் சேர்வதென எம்.ஜி.ஆர். முடிவு செய்கிறார்.

அடிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள முன் வரும் எல்லா ஆட்சியாளர்களும் இறுதியில் துரோக முடிவையே எடுக்கிறார்கள். ஆனால், இந்த சூழல்களையெல்லாம் வீரத்தோடும், விவேகத்தோடும் சந்தித்து வெற்றி மகுடம் சூடுபவர்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.

1965ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீழ்த்தச் சிறந்த பாதை வன்முறையா, மன மாற்றமா என்ற விவாதத்தை வசனங்களின் வழியே நடத்து கிறது. அரசியல் விவாதம் தவிர்த்துப் பிற சமூகப் பிரச்சனைகளையும் படத்தில் காண முடிகிறது. ஆனால் அவை விவாதிக்கப்படுவதில்லை என்பது முக்கியக் குறைதான்.

தன் சொந்த மகள் கடத்தப்பட்ட பிறகும், செங்கப்பன் எந்த எதிர்வினையும் செய்யாதது தொடங்கி திரைக்கதையிலும் குறைகள் உண்டு. காட்சியமைப்புகளை உற்று கவனித்தால் தான் தள்ளிவிட்ட மரத்துக்கு முன்பாகவே ஓடிச் சென்று, மரத்தை முதுகில் தாங்கி, இளவரசி யைக் காப்பாற்றுவதில் தொடங்கி, விஷக் கத்தியால் குத்துப்பட்ட முதுகில் வாய் வைத்து உறிஞ்சுவது வரை பட்டியலிடப் பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், வரலாறாகிவிட்ட அந்தக் காட்சிகள் நமக்குள் ரசனை உணர்வைத்தான் ஏற்படுத்துகின்றன.

50 ஆண்டுகள் கடந்துவிட்டன, தொழில் நுட்பம் எவ்வளவோ மாறிவிட்டது, ரசனையும் மாறியிருக்கிறது. இரவுக் காட்சியில் முதல் வகுப்பு இருக்கைகளில் கூட்டமில்லை, ஆனால் முன் இருக்கையில் அமர்ந்தபடி, அடுத் தடுத்த காட்சிகளை சத்தமாக விவரிக்கும் மனிதர்களுக்குப் பஞ்சமில்லை. இதுதான் எம்.ஜி.ஆரின் வெற்றி. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் ஆற்றா மைக்குக் கொடுக்கப்பட்ட உள்மனப் பிம்பமாகத் தெரிகிறார் அவர். அந்த மக்களே வரலாற்றின் உண்மையான நாயகர்களாக உருவெடுக்கும்வரை, எம்ஜிஆர் பிம்பம், உயிர்ப்புடன் இருக்கும்.

நன்றி தி இந்து 16.03.2014

Labels