Showing posts with label சிந்தனை. Show all posts
Showing posts with label சிந்தனை. Show all posts

தேசியவாத வெற்றுக் கூச்சல்கள் ஒதுக்கி, போற்றுவோம் குடியரசை !

குடியரசு தின வாழ்த்துகள் ...

ஆனால், இந்த தினம் கொண்டாட்டத்துக்கு மட்டும் உரியதில்லை. நாம் ஒரு முழுமையான குடியரசில் வாழவில்லை, எனவே, இந்த தேசத்தை முழுமையாக்கும் கடமைகள் மிச்சமிருக்கின்றன, என்று உணர்ந்து - உறுதியேற்பதற்கான தினமாகும்.

அண்ணல் அம்பேத்கர் - அரசியல் அமைப்பு சட்ட வரைவை தாக்கல் செய்து முன்வைத்து பேசிய வார்த்தைகள் இன்னும் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன.

"முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமின்மையைப் பெற்றிருப்போம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒருமனிதனுக்கு ஒரு வாக்கு என்னும் விதியை அளித்திட மறுப்பது தொடரும்.

இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப் போகிறோம்? மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறோம்?

இவ்வாறு நாம் நீண்ட காலத்திற்கு மறுப்பது தொடருமானால், நம் அரசியல் ஜனநாயகமே பேரிடர்க்கு உள்ளாகும் நிலை உருவாகும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இம்முரண்பாட்டை நாம் ஒழித்திட வேண்டும். இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசியல் நிர்ணயசபை கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்."

நமது போராட்டம் மிச்சமிருப்பதை மறந்து, வெற்று தேசியவாதக் கூச்சல்களுக்கு இறையாகாமல், போற்றுவோம், குடியரசை.

‪#‎வாழ்த்துகள்‬

be ஆப்பி, make everyone ஆப்பி ...

தை? சித்திரை? அல்லது ஜனவரி? - என சர்ச்சை எழுப்புவோர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். மக்கள் எல்லா பிரசங்கங்களையும் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் கொண்டாட்டங்களை அவர்கள் விடுவதேயில்லை.

கொண்டாட்டங்கள் - உலக இயல்பு. குழந்தை பிறப்பா, சாவுச் சடங்கா, திருமணமா? அட ஒன்றுமேயில்லையானால் நீ காதலிக்கிறாயா? காதலில் வெற்றியா? தோல்வியா? - எதேனும் ஒரு பதில் சொல் - சிரித்துக் கொண்டோ, அழுதுகொண்டோ கொண்டாடலாம்.

கொண்டாட்டங்களில் இருந்து பிரிக்கமுடியாத மனிதர்களை நான் தெருவெங்கும் பார்க்கிறேன். விழிம்பு நிலையில், தன் வாழ்க்கையைத் தொலைத்து தெருவெங்கும் எதிர்காலத்தின் அவநம்பிக்கையாக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்களிடம் கூட கொண்டாட்டங்களுக்கு இடமிருக்கிறது.

சிலருக்கு சோறு, சிலருக்கு மதுபானம், சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு காதல், சிலறுக்கு உறவின் கூட்டம் - ஏதேனுமொருவிதத்தில் தன்னைப் மறுவுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கிறது மனித இனம்.

சிரிப்பதிலும், ஒன்றுகூடலிலும் மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் தனிமையும், ஒதுக்குதலும் நம்மை வாட்டுகிறது. உயிர்ப்பின் உன்னதம் காரணமாகத்தான், மரணம் அச்சமுட்டுகிறது.

அன்பர்களே, பெருங்கூட்டமாக சேர்ந்துகொள்ளுங்கள், எல்லாக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் - மொத்தத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடட்டும். ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமே நமது இலக்கு.

be happy, make everyone happy ...

ரஞ்சிதா - சந்நியாசியாவது குறித்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்??

சந்நியாசி நிலை குறித்து அவர்கள்தான் சில இலக்கணங்கள் வகுத்தார்கள், மனித இயல்பைத் தாண்டிய விதிகளை வைத்து, அவற்றை ஒருவன் பின்பற்றி, தெய்வ சக்தியை எய்துவதாகச் சொன்னார்கள். தெய்வ பக்தி இல்லாதவர்கள்தான் 'ஒழுக்கமற்றவர்கள்' என்று ஏசினார்கள்.

அப்போதெல்லாம் நாம் தெளிவாகச் சொன்னோம், சாமானிய மக்களின் வாழ்க்கை விடியல் குறித்து சிந்திப்பதை விட உயர்ந்த ஆன்மீகமில்லை என்று. ஏழைகளோடு சேர்ந்து உழைத்து, அவர்களின் விழிப்புக்காக நம்மை அர்ப்பணம் செய்துகொள்வதை விட உயர்ந்த 'யோகமில்லை' என்றே சொன்னோம்.

சொர்க லோகத்தில் 'ரம்பையும், ஊர்வசியும்' நடன மங்கையராக இருப்பார்கள் என்று மதங்கள் சொல்லின. சோமபானமும், சுராபானமும் நொருங்கக் கிடைக்குமென அவர்களே எழுதிவைத்தார்கள்.

சக மனிதனை சமமாக நேசிக்கும் சமூகமே சொர்கம் - அதுவே எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும் மாமருந்தென்று சொன்னோம். அறியாமையெனும் போதை தெளிய, எல்லோரும் மனிதராக வேண்டுமென நாம் இலக்கு நிர்ணயித்தோம்.

நித்யானந்தா இன்றுவரை மரியாதைக்குறியவராக, மடாதிபதியாகத் தொடர்கிறார். தன் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, மடத்திலுள்ள பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியதை நாம் கண்டித்தோம், கண்டிக்கிறோம்.

மற்றபடி ஏமாற்றுக்காரர்களும், கொலைகாரர்களும் சந்நியாசிகளாக சுகபோகம் அனுபவிக்கும் நிகழ்காலத்தில் ரஞ்சிதா சந்நியாசியாகியிருப்பது நமக்கு வருத்தமளிக்கும் நிகழ்வல்ல.

தனிப்பட்ட முறையில் - ஒரு நடிகையாகவும், சாமியார் அடியாராகவும் ஒரு பாலியல் பண்டமாக மட்டும் பார்க்கப்பட்டு வந்த ரஞ்சிதாவுக்கு இது ஒரு வெற்றி. இனி அவர் சிலராலேனும் சந்நியாசியாகக் கருதப்படுவார். அம்மாவென்றழைக்கப்படுவார்.

#வாழ்த்துவோம்!

Labels