Showing posts with label தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label தொலைக்காட்சி. Show all posts

'தேசிய' தொலைக்காட்சிகளின் வீழ்ச்சி ...!

மத்திய ஆட்சியில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டால் இப்படித்தான் - ஒவ்வொரு மாநில மக்களின் நலன்களுக்காகவும் தேசம் வளைந்து கொடுக்க நேரிடும். - இது ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியின் புலம்பல்.

மக்கள் இல்லையேல் ஏது தேசம்? மக்களுக்காக அரசுகள் சிந்தித்து, அவர்களின் உணர்வுகளை மதித்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது?? இதுவரை மதிக்கப்படாத மாநிலங்களின் உணர்வுகளுக்கு இனியேனும் மதிப்புக் கிடைத்தால் என்ன நடந்துவிடும்? நாங்களன்றி ஏதடா தேசம்??? ...

இதுவெல்லாம் அவர்களுக்கு புரியாது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்  நம் தேசிய சேனல்கள் எல்லாம் தில்லி மாநகரத்தின்  மெட்ரோ சானல்களாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி, வளர்ச்சிபெற்ற மாநிலங்களில் ஒன்றான தமிழகம், கல்வியறிவு பெற்ற கேரளா, திரிபுரா என எதுவும் அவர்களுக்கு நிர்வாக உதாரணங்கள் அல்ல. ஏனென்றால், இவர்களுக்கெல்லாம் தில்லியில் செல்வாக்கில்லை.

தில்லியில் ஒரு சிறுபான்மை அரசமைத்ததும், 'ஆம் ஆத்மி' கட்சியின் தலைவரை அவர்கள் பிரதமர் வேட்பாளர் வரிசையில் வைக்கத் தொடங்கிவிட்டனர். இந்த லட்சணத்தில் தாங்களே இந்தியாவைப் பாதுகாப்பதுபோன்ற தோரணை வேறு.

அவர்கள் கவலையெல்லாம், இந்த அறியாமைக் குட்டு வெளிப்பட்டுவிடுமே. அரைவேக்காட்டு புரிதலோடு நிகழ்ச்சிகளை ஓட்டிக்கொண்டிருக்க முடியாதே என்பதுதான்.

ஒன்று உறுதி ... அதிகபட்ச உரிமைகள் பெற்ற உண்மையான கூட்டாட்சி பெற்ற நாடாக இந்தியா மாறும்போது, இவர்கள் காணாமல் அடிக்கப்படுவார்கள்.

நேர்படப் பேசு - ஏன் ஒரு பக்க சார்பாகிறது?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப் படும் ஒன்றாக இருக்கும் விவாத நிகழ்ச்சி நேர்படப் பேசு. ஆனால் கடந்த சில தினங்களாக 'நாற்பதின் நாடித் துடிப்பு' என அவர்கள் மேற்கொள்ளும் கருத்துக் கணிப்புகள் பரவலான விமர்சனத்திற்கு உள்ளாகின்றன.

தேர்தலுக்கான களமே தயாராகாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் என்பதால் இப்பிரச்சனை இருக்கலாம் என்பது ஒரு பக்கம் இருக்க - மேற்கு மண்டம் குறித்த கணிப்புகள் வெளியானபோது மேலும் சில அபத்தங்கள் புரிபட்டன.
---

1) 'மேற்கு மண்டல மக்களால் அதிகம் விரும்பப் படும் அணியாக பாஜக அணி உள்ளது. ஆனால், அந்த அணியின் தலைவர் பிரதமராக மாட்டார்' என்ற கணிப்பு முடிவைப் பார்த்து அந்த விவாத அரங்கமே வியந்தது.

2) ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் வந்த முடிவுகளை கணிப்பு நடத்திய நிறுவனம் மட்டுமே நம்பியது.

3) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு சாதியக் கட்சி அல்ல என்றும் அரசியல் முடிவுகளை தீர்மானிக்கும் வாக்குகள் தங்களிடம் இருப்பதாகவும் ஈஸ்வரன் தனது பிரச்சாரத்தை நடத்திக் கொண்டபோது பத்திரிக்கையாளர் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். (அவர்கள் மாநாட்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் போடப்பட்டது குறித்தும். சென்ற தேர்தலில் திமுகவுடன் அணி அமைத்தும் கொமும வெற்றி பெற முடியாதது குறித்தும் யாரும் சுட்டிக்காட்டவில்லை.)

4) அதே போல அந்தந்த மண்டலங்களில் வசிக்கும் - அரசியல் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் தேர்வும் இல்லை.

5) இப்போதுள்ள எம்பி-யை மீண்டும் தேர்ந்தெடுப்பீர்களா என்ற கேள்விக்கு தொகுதி வாரியாகத்தான் பதில் கண்டரிய முடியும். (உதாரணமாக திருப்பூர் எம்.பி சிவசாமி அதிமுக கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். ஈரோடு மதிமுக எம்பி தற்போது அவர் இருந்த அணியில் இல்லை.) ஆனால் மண்டலம் முழுமைக்கும் ஒரே முடிவை வைத்துக் கொண்டிருந்தனர்.

6) பாஜகவுக்கு கோவை, திருப்பூரில் கட்சி உள்ளது. ஆனால் மண்டலம் முழுமைக்கும் 40 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு உள்ளதாகவும், ஆனால் வெற்றிபெறப் போவது அதிமுக என்றும் குழப்பமான முடிவுகள் முன்வைக்கப்பட்டன.

7) இவை எல்லாவற்றிற்கும் கருத்துக் கணிப்பை அறிவியல் பூர்வமாக நடத்தியதாகச் சொல்லிக் கொள்ளும் நிறுவனத்தின் தலைவர் - 'வலுவான மத்திய அரசு' வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நேரடியாக பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்றி பேசிக் கொண்டிருந்தார்.

Gunaa Gunasekaran உள்ளிட்டு, மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய செய்தியாளர்களுக்கு திமுகவுக்கு என்னதான் சரிவு ஏற்பட்டாலும், அது பாஜகவின் வாக்கு வங்கியாக மாறாது என்ற உண்மை தெரியும்.

கணிப்பு நடத்தியவர்கள் ஒரு நோக்கத்தோடு செய்ததால்தான், அது உண்மையை நெருங்கவில்லை என்றே தோன்றுகிறது. To: PuthiyaThalaimurai TV

Labels