Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

ரேசன் கடையில் ஒரு இஞ்சினியரிங் மாணவி ...

சாமானிய டைரி 5:

இஞ்சினியரிங் மாணவி ஒருத்தரின் அம்மா என்னிடம் தொலைபேசியை வாங்கி அழைத்தார் ... "சாமி, கடைலதான் இருக்கியா?.. இன்னைக்கு என்ன பொருள் போடறாங்க?" "கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், வாங்காம திரும்பிடாத"

ரேசன் கடையில், கூட்டத்தின் இடையே அந்தப் பெண் காத்திருந்தது சொல்லாமலே விளங்கியது. "பச்சரிசி போட்டா வாங்கிக்கோ" என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.

நியாயவிலைக் கடையில் குறைந்த விலையில் பொருட்கள் கொடுப்பதற்கு சில ஆயிரம் கோடிகளை அரசு செலவிடுகிறது. தமிழக மக்கள் அந்த சேவையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஓரளவு வருமானம் வரும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்களால், சேமிக்க வழி கிடைகிறது. ஏழைக் குடும்பங்களோ பசியிலிருந்து தப்பி, அவசியமான பிற செலவுகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த மாணவியின் கல்வி இஞ்சினியரிங் வரை தடையில்லாமல் தொடர்ந்ததற்கு - போசாக்கான உணவு கிடைக்கவும், பொருளாதாரம் காக்கப்படவும் வழிவகுக்கும் இப்படிப்பட்ட திட்டங்கள் ஒரு காரணம். அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியில்லாத நிலையில்தானே நம்மால் பிற செலவுகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மிகப்பெரும் நிறுவனங்களுக்கு சலுகையாக, வரித் தள்ளுபடியாக கொடுப்பதால் விளைந்த நன்மைகளை விட. சில 10 ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் விளைவித்த நன்மைகள் ஏராளம்.

அந்தப் பெண் குழந்தை காத்திருக்கிறாள். அவளுக்குத் தெரியும், தன் குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்குமான உழைப்பு இதுவென்று.

உயிர் இருப்பது வீழாது ...

சாமானிய டைரி 4:

திருமணமான அந்தத் தோழி பல மாதங்களுக்குப் பின் என்னை அழைத்தாள். "நேற்று எதிர்பாராத நேரத்தில், முன்பின் அறிமுகமில்லாதவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கிடைத்தது. இப்போதுவரை அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

சுய சிந்தனையுடைய பெண் அவள், அவளே தொடர்ந்தால் "சின்ன அங்கீகாரம் கூட இவ்ளோ சந்தோச்சம் கொடுக்குது ... ஏன் தெரியுமா?. நம்ம குடும்ப அமைப்பு, பாராட்டு நிறைந்ததாவும், மகிழ்ச்சி கொடுப்பதாவும் இல்ல."

பின் கொஞ்சம் புலம்பினாள், "நான் என் சுயத்தை இழக்காம இருப்பதே ஒரு போரட்டமா இருக்கு. 25 வயசுக்குள்ள நம்ம வாழ்க்கை முடிஞ்சிட்டா என்ன"

இந்தியக் குடும்பங்கள் அழியுதேனு பலரும் பேசராங்க. தினமும் எத்தனையோ செய்திகள் படிக்குறோம். "அதுக்குள்ள என்ன உயிர் இருக்கு? உயிர் இல்லாவிட்டால் அது அழியத்தான செய்யும்?"

சக மனிதர்கள், நேசத்தை பரஸ்பரம் வெளிப்படுத்தும் இடமாக இல்லாத குடும்பம், ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருப்பது அதன் பலவீனம்.

அவள் ஆதிக்கத்தின் பால் வெறுப்புற்றிருந்தாள், திணிக்கப்பட்ட கடமைகளை வெறுத்தாள், இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கைதான் அவளுக்கு உயிராக இருந்தது.

உயிர் இருக்கிற எதுவும் வீழாது ...

லாரியோடு வரும் குழாய்ச் சண்டை ...

சாமானிய டைரி 1:

குழாயில் குடிநீர் வரும் வசதியுள்ள எங்கள் பகுதியில் இன்று ஒரு லாரி வந்திருந்தது. "இப்பவே, லாரில தண்ணி பிடிக்க வேண்டிய நிலை ஆகிடுச்சே" என்ற புலம்பல்கள் கேட்டன.

அவசரம் எல்லோரது கண்களிலும். பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பனியன் கம்பனியில் வேலை செய்கிறவர்கள்.

நீலவண்ண தண்ணீர் தொட்டிக்கு முன் வரிசையில் நின்றபடி குடங்களோடு காத்திருந்தார்கள். தண்ணீர் விநியோகம் தொடங்கியதும், சலசலப்பு அடங்கியது. அவரவர் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, அடுத்த முறைக்காக மீண்டும் வரிசையில் நின்றார்கள்.எல்லோருக்கும் இரண்டு நடை தண்ணீர் கிடைக்கவிலை.

அவரவருக்கு கிடைத்த தண்ணீரோடு திருப்திப் பட்டுக்கொள்ள முடியாது. தண்ணீர் அத்தியாவிசயமாகிற்றே.

லாரி சிரியது, வரிசையில் நின்றவர்கள் அதிகம். ஏமாற்றத்தோடு திரும்பியவர்களில் சிலர் கவுன்சிலருக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், லாரி மீண்டும் வரவில்லை.

அடுத்தமுறை லாரியோடு வாய்ச் சண்டையும் வரலாம். பற்றாக்குறை அதைத்தான் உணர்த்தியது.

என்ன வகையான அமைதி இது?

இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் அவமானப் படுத்தப்பட்டுள்ளது. உரிமைகள் நசுக்கப்படுகின்றன. யாரும் கொதிப்படைந்ததாகத் தெரியவில்லை.

சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி கிராமத்தில் தலித் கிராமத்தினர் தங்கல் விருப்பப்படி வாக்களித்தனர். எங்கள் ஓட்டு யாருக்கு என தீர்மானிப்பது எங்கள் உரிமை என்று சொல்லிய குற்றத்துக்காக அவர்களின் சொத்துக்கள் சுரையாடப் பட்டுள்ளன. அடித்து நொறுக்கப்பட்ட மக்கள் கதறியபடி தெருவுக்கு வந்து போராடுகிறார்கள். தாக்கியவர்கள் சாதி வெறி ஊட்டப்பட்டவர்கள். நிதானித்து சிந்திக்கும் எந்த சாதி மனிதனும், இது மனித குலத்திலிருந்து ஒதுக்கப்படவேண்டிய மனநிலை என்று உரக்கப் பேசுவான். மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் உடனே அங்கு சென்று சேர்ந்தது ஆறுதல். ஆனால் இந்த சம்பவத்தைக் கண்டு தமிழகம் கொதித்தெழவில்லை. அமைதி நிலவுகிறது.

**

 25 ஆம் தேதிக்குள் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என நீதிபதி சதாசிவம் அறிவித்தார். உடனே குஜராத்திலிருந்து பிரவீன் தொகாடியா ஒரு சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டார். முஸ்லிம்களின் சொத்துக்களை சூரையாட வேண்டும் என அமைந்திருந்த அந்த பேச்சில் 'ராஜிவ் கொலையாளிகளே விடுதலை பெறப் போகிறார்கள்' என்ற வாசகம் இடம்பெற்றது தற்செயல் அல்ல.

மனிதநேயம் பேசி, மரண தண்டனைக்கு எதிராக இருப்பதாக காட்டிக் கொள்ளும் வைகோ போன்றோர் அந்த இந்துத்துவக் கூச்சலை மெளனமாகவே கடந்து சென்றனர். இப்போது, இந்த சாதி வெறித் தாண்டவம் குறித்தும் கள்ள மெளனம் நிலவுவது - என்னவகையான மனநிலை??

 **

 தமிழுணர்வாளர் என்ற போர்வையில், எத்தகைய அயோக்கியத்தனத்திற்கும் துணை போகிறவர்கள் ஒரு பக்கம் இருக்க. தந்தை பெரியார் பிறந்த இந்த மண்ணில் சாதி வெறி தாண்டவமாடுவதும். சுரணையற்றவர்களாக தமிழினம் மாற்றப்படுவதும் அனுமதிக்கக் கூடிய ஒன்றா?? ‪

#‎மனிதனே‬ விழித்தெழு...

 ‪#‎சாதி‬ I ‪#‎வன்முறை‬ I ‪#‎தலித்‬ I Sindhan Ra I ‪#‎Caste‬ I ‪#‎Dalith‬

நீர் நம் உயிர் ...

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்த முழக்கங்களில் ஒன்று குடிநீரை அரசாங்கம் விற்பனை செய்கிறது என்பதாகும்.

இன்று தோழர் லீலாவதி நினைவுதினம். தண்ணீர் வியாபாரிகளுக்கும் பிற சமூக விரோதிகளுக்கும் எதிராக களத்தில் போராடியவர். அவரை கொடூரமாக படுகொலை செய்த வழக்கில் கைதான திமுகவினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

குடிநீரை வியாபாரப் பொருளாக்குவது சர்வதேச நிதியத்தின் திட்டங்களில் ஒன்று. உலகமயக் கொள்கைகளை விசுவாசத்தோடு கடைபிடிக்கும் திமுக, அதிமுக ஆட்சிகளில் நமது நீராதாரங்கள் சீரழிக்கப்பட்டன.

 அதன் காரணமாக குடிநீர் ஒரு விற்பனைப் பொருளாக மாற்றப்பட்டது. இந்தியாவிலேயே "திருப்பூர் 3 வது குடிநீர் திட்டம்" மட்டும் தனியாரால் நிறைவேற்றப்படும் குடிநீர் திட்டம். குடிநீர் வடிகால் வாரியம் 4 ரூபாய்க்கு கொடுக்கும் தண்ணீரை இந்த நிறுவனம் 26 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை திமுகவும் ஊக்குவித்தது.

எல்லா மெட்ரோ நகரங்களிலும் குடிநீர் விற்பனை தொடர்கிறது. இது அதிகரித்தும் வருகிறது. இந்த நிலை மாற்ற வேண்டுமானால், நமது நீராதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், மணல் கொள்ளை உள்ளிட்ட கனிம சுரண்டல் தடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு சுற்றுச் சூழல் விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும். அரசு இலவசமாக வழங்கும் குடிநீரின் தரத்தை அதிகரிக்க வேண்டும். மாறாக, தண்ணீர் பாட்டில் விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல். அரசே குறைந்த விலை குடிநீரை கொடுப்பதென்பது தற்காலிக ஏற்பாடுதான்.

தேர்தலுக்கு பின்னர் குடிநீர் உரிமையை பாதுகாக்கவும், மக்களுக்கு இலவசமாக சுத்திகரித்த நீர் கிடைக்கவும் திமுக போராடுமா?. ஸ்டாலினுக்கு அப்படிப்பட்ட உறுதி இருக்கிறதா?. இல்லை என்றே படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் இதுவொரு தேர்தல் ஆயுதம். மக்களுக்கு வாழ்க்கைப் போராட்டம்.

#Stalin I #DMK I #Water I #LPG I Sindhan Ra I #Privatisation

நோட்டா: ஒரு அதிர்ச்சிகரமான தகவல் ...

Sindhan Ra

களத்தில் நிற்கும் எந்த வேட்பாளரும் இல்லை என்ற வாய்ப்பு இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கடைசியாக தேர்தல் நடைபெற்ற 5 மாநில சட்டசபைத் தேர்ல்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சதீஸ்கர், தில்லி, மிசோரம்) 'நோட்டா' பதிவான தொகுதிகள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கிரிமினல் வேட்பாளர்கள், வன்முறையாளர்களுக்கு எதிராக இந்த வசதி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.
ஆனால், நோட்டா - அதிகம் பயன்படுத்தப்பட்ட 25 தொகுதிகளில் 1 மட்டுமே பொது தொகுதியாக இருந்திருக்கிறது. 50இல் 5 தொகுதிகள் பொது தொகுதிகள். மற்ற தொகுதிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்.
வேட்பாளரை நிராகரித்தவர்கள் அதிகம் உள்ள 100 தொகுதிகளில் 3 இல் 2 பங்கு தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கான தொகுதிகள். சத்திஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இந்த நடைமுறை அதிகமாக இருந்திருக்கிறது (The Hinduசெய்தி: http://bit.ly/1fjmnWL )
நோட்டா வாய்ப்பும் தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை/தீண்டாமைக் கருவியாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
--
காங்கிரஸ், பாஜக மட்டுமே வலுவாக உள்ள இந்த மாநிலங்களில் சாதிப் பஞ்சாயத்துகளின் ஆதிக்கமும் அதிகம் என்பதை வைத்துப் பார்க்கும்போது நம்மால் சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் நிராகரிக்கப்படுவதன் அடிப்படையை புரிந்துகொள்ள முடிகிறது.
தமிழகம், கேரளம் மாநிலங்களில் என்ன போக்கு தென்படுகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க முடியும். ஆனால், நிச்சயம் இந்த விசயத்தில் தெற்கு தன்னை வேறு படுத்திக் காட்ட வேண்டும்.
I ‪#‎NOTA‬ I ‪#‎Election‬ I ‪#‎SocialJustice‬ I Sindhan Ra I ‪#‎BJP‬ I ‪#‎INC‬

Fixed Interview களும்: செய்தியாளர்களின் மனசாட்சியும் ...

நரேந்திர மோடிக்கு தோதான கேள்விகளை மட்டும் கேட்டு நடத்திய நேர்காணல் இந்தியா தொலைக்காட்சியில் வெளியானது மனம் ஒவ்வாத அந்த ஆசிரியர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

பொதுவாக எனது ஊடக நண்பர்கள் பலரும் தங்கள் நிர்வாகம் பாஜகவுக்கு ஆதரவாகவோ, குறைவாக விமர்சிக்கும்படியோ 'வழிகாட்டுதல்' கொடுப்பதை தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடகத்துக்கும், அதன் நிர்வாகம் சார்ந்து சில சார்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால் யாரும் வேலையை ராஜினாமா செய்ததில்லை. அது சாத்தியமும் இல்லை.

இந்திய ஊடகத் துறையில் மரியாதையான சம்பளமும், நிரந்தர வேலையும் எட்டாக் கனியாக உள்ள இந்த சூழலில், அவர்களால் எந்த எதிர்ப்பும் காட்ட முடியாதுதான்.

The Hindu அலுவலகத்தில் மாமிசம் சாப்பிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையையே எடுத்துக் கொள்வோமே. அங்கு ஒரு தொழிற்சங்கத்துக்கு வேறு அனுமதி இருக்கிறது. ஆனாலும், இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் உத்தரவுகளை எதிர்த்து என்ன குரல் எழுந்துவிட்டது??

ஒரு சாமானியனின் சிந்தனையில் செலுத்தப்படும் சுரண்டலானது, அவர் உடல் உழைப்பை திருடுவதை விடவும் கொடுமையானது. இந்த சுரண்டல்தான் ஆரோக்கியமான அறிவுச் சூழலை மாசுபடுத்தும் "முன் முடிவாக்கப்பட்ட செய்திகள்" "காசுக்கு எழுதப்படும் செய்திகள்" "மறைக்கப்படும், அல்லது கவனம் குறைக்கப்படும் செய்திகள்" உள்ளிட்டவைக்கு காரணமாக அமைகிறது.

ஊடகங்களிடமிருந்து கருத்து சுதந்திரத்தை மீட்க வேண்டியதன் தேவை அதிகரிக்கிறது. இப்போதைக்கு அந்த ஆசிரியரை வாழ்த்துவோம்.

பாஜகவின் அரசியல் - வளர்ச்சியா? பிரிவினையா?

பொதுவாக பாஜக வளர்ச்சி அரசியலுக்கு மாறிவிட்டது என்ற பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது. இது உண்மையாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கிளப்புவதையே அதிகாரத்தை பிடிப்பதற்கான தனது ஆயுதமாக பயன்படுத்துவதை பாஜக நிறுத்தவில்லை என்றே தெரிகிறது ...

உத்திரபிரதேசத்தின் "முசாபர் நகர்" பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் கலவரங்கள் தூண்டப்பட்டு, ஏராளமானோர் வீடுகளை இழந்து வெளியேறியதை அறிவோம். அதன் பின்னணியாக தவறான வீடியோக்களை திட்டமிட்டு பரப்பிய எம்.எல்.ஏக்கள் கைதாகினர். ஆனால், கிடைத்த சில நாட்களில் சாதிப் பஞ்சாயத்துகளின் வழியே தங்கள் விஷமப் பிரச்சாரத்தைக் கொண்டு சென்று கிராமங்களுக்கு இடையே மோதலை உண்டாக்கினார்கள்.

இந்த நிலையில், அந்த கலவரத்தை எப்படியும் - நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தி ஓட்டாக மாற்றிடிவ வேண்டும் என்ற வகையில் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. (http://www.ndtv.com/elections/article/election-2014/truth-vs-hype-the-rss-mission-modi-504888)

இந்த நிலையில், பாஜகவின் உத்திர பிரதேச மாநில தேர்தல் பொருப்பாளரும், மோடியின் வலதுகரமும், போலி என்கவுண்டர் மற்றும் அரசே கலவரங்களுக்கு துணைபோன வழக்குகளில் தொடர்புடையவருமான அமித் ஷா ... உ.பி மாநிலத்தின் அப்பாவி மக்களிடையே மேற்கொள்ளும் பிரச்சாரம் அம்பலத்துக்கு வந்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ள வீடியோ ஆதாரங்களில் - அவர் இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை விதைப்பது பதிவாகியுள்ளது. இந்துக்களிடையே அவர் பேசுகிறார் "மேற்கு உ.பியில் நடக்கும் இந்த தேர்தல் நமது கெளரவத்திற்கான தேர்தல், அவமானத்துக்கு பலிதீர்ப்பதற்கும், அநீதி இழைத்தோருக்கு பாடம் புகட்டுவதற்குமான தேர்தல்" "இது மற்றுமொரு தேர்தல் அல்ல. நமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அவமானத்துக்கு நாம் பலியெடுக்க வேண்டும்." என தொடர்ந்து பேசிவருகிறார்.

அப்பாவிகளை பலிகடாவாக்கும் அரசியல் ஒதுக்கப்பட வேண்டும்.

#ஒதுக்குவோம்!

கோப்ரா போஸ்ட் கிளப்புவது வன்முறையா???

பாபர் மசூதி இடிப்புக்கு பின்னணியில் உள்ள சதியை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. "இந்து முஸ்லிம் வன்முறையை" தேர்தல் நேரத்தில் தூண்டுவது கேவலமில்லையா? என சில பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பரிவாரங்கள் இணையத்தில் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தல் ஆதாயத்துக்காக கலவரத்தைத் தூண்டுவது கேவலமான விசயம். கோப்ரா போஸ்ட் இதழ், இந்தியர்களிடையே மதவெறியைத் தூண்டியவர்களை அம்பலப்படுத்தியிருக்கிறது. அழுகிய புண்ணில் வாழும் புழுக்களைப் போல, இந்திய சமூகத்தில் கலவரங்களைத் தூண்டி, அந்தப் புண்ணில் அதிகாரத்தைத் தேடும் பாஜக பரிவாரத்தையும், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளையும் - அவர்கள் வாயாலேயே அம்பலப்படுத்தியுள்ளது.

பாபர் மசூதியை இடிக்க 38 நாட்கள் பயிற்சி எடுத்து, திட்டமிட்டு சதி செய்தவர்கள் இந்துக்கள் அல்ல. அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டுமென உணர்ச்சிகளை உசுப்பி விட்டதும் இந்துக்கள் அல்ல. மாறாக, இந்து மதத்தை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் அயோக்கியர்கள்.

இப்போது, அந்த அயோக்கியர்களை இந்திய மக்கள் அறிந்துகொள்ளச் செய்திருக்கிறது "கோப்ரா போஸ்ட்" இணையதளம். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான அந்த அரசியல் வில்லத்தனம் வெளியே வந்திருக்கிறது.

இதனால் இந்து - முஸ்லிம் சகோதரர்களாக வாழும் "இந்தியர்கள்" உண்மையை உணர்ந்துகொள்வார்கள். எனவே, அந்த சதி அம்பலப்பட்டதால், மக்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும், பிரிவினையால் அரசியல் செய்ய நினைக்கும் பாஜக பரிவாரம் தனிமைப்படும்.

சூது கவ்வும் : கருணாநிதி அறிக்கை ...

கலைஞர் கருணாநிதி - அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்க தலைவரைப்போல சாணக்கியர் யாருமில்லை என்று திமுகவினரே பெருமைப்பட்டுக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.

அவர் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதில் "மத்திய அரசு கவிழ்ந்துவிடக் கூடாது" என்பதற்காகத்தான் - மசோதாவை திமுக ஆதரித்து வாக்களித்ததென குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது?

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் மட்டும்தான் அரசு கவிழும். அப்படி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென 'மம்தா பானர்ஜி' முயற்சி செய்தார்.

ஆனால், விழிப்புடன் செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் - 'சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா மீது மட்டும் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம்' நடத்தலாம் என்று கூறினர். இதன் பொருள், வாக்கெடுப்பில் அரசு தோல்வியடைந்தால், அந்த மசோதாவை மட்டும் நிறைவேற்ற முடியாது.

இதனால், மம்தா - காங்கிரசுக்கு உதவியாக செய்ய நினைத்த 'நம்பிக்கையில்லா தீர்மான' அறிவிப்பு நீர்த்துப் போனது.

ஆனால், திமுகவோ, அறிக்கையில் எல்லாம் அன்னிய முதலீட்டை எதிர்த்துவிட்டு - பாராளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது.

உண்மை இப்படியிருக்க - கருணாநிதி தனக்கு ஒன்றுமே தெரியாது என்பதுபோல வெளியிட்டுள்ள அறிக்கை - சில்லரை வியாபாரிகள் கண்ணை திறந்திருக்கும்போதே, மண்ணைத் தூவும் வேலையாகும்.

தேர்தல் அரசியல்வாதிகளின் - சாணக்கியத்தனமெல்லாம் - அப்பாவி மக்களை ஏமாற்றத்தான் பயன்படுமென்றால், அதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

#திமுக_தொண்டர்கள்தான்_சிந்திக்க_வேண்டும்...

40 லட்சம் ஆதரவு அழைப்புகள்: நாமும் இணைவோம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார வன்கொடுமையை வீழ்த்துவோம் என்ற தலைப்பில்#சத்யமேவஜெயதே நிகழ்ச்சியில் அழைப்பு விடப்பட்டது. 40 லட்சம் பேர் அந்த அழைப்புக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் இதனைச் செய்ய முடியுமென்றால், நாம் ஒவ்வொருவரும் முயன்றால் அதுவொரு சமூக இயக்கமாகவே ஆகாதா?!

- பெண்களுக்கான அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்போம்.
(33 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க குரல்கொடுப்போம்)

- சமநீதியுடன் அரசமைப்பை வளர்த்தெடுப்போம்
(காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாலின பேதமற்றதாக்குவோம். சட்டங்களை அமலாக்குவதில் முனைப்பாக்குவோம்)

- தகுதியான ஆண் பிள்ளைகளை வளர்த்தெடுப்போம்.
(பெண்களை சக மனிதர்களாக கருதும் - மனிதர்களாக, புத்தி புகட்டுவோம்)

- சமூக உணர்வுள்ள படைப்புக்களை ஆதரிப்போம்.
(பெண்களை - கவர்ச்சி உடலாக மட்டும் முன்நிறுத்தும் திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் கதையாடல்களை எதிர்ப்போம்.

#மகளிர்_தினத்தில் உறுதியெடுப்போம்!

நரேந்திர மோடியும் - கற்றல் திறன் மேம்பாட்டு அட்டவணையும் !

கல்வி கற்றல் மற்றும் கற்பித்தல் திறன் குறித்த தேசிய அட்டவணை வெளிவந்துள்ளது. இரண்டு நிறுவனங்கள். ஏ.எஸ்.இ.ஆர் - மற்றும் என்.ஏ.எஸ் நடத்திய இரண்டு வெவ்வேறு ஆய்வுகள் மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்களைக் காட்டுகின்றன. http://www.thehindu.com/news/national/learning-levels-better-than-thought/article5737894.ece?homepage=true#lb?ref=infograph/0/

நாடு முழுவதும் உள்ள குழந்தைகளில் 85 சதவீதம், சொற்களை சரியாக அடையாளம் காண்கின்றன. மஹாராஷ்ட்ரா, தெற்கின் 4 மாநிலங்கள் திரிபுரா, மிசோரம், மணிப்பூர் ஆகியவை தேசிய சராசரியை விட கூடுதலாக பெற்றுள்ளன.

மொழியறிவில் முதலிடம் திரிபுரா - இரண்டாமிடம் மிசோரம், மூன்றாம் இடத்தில் தமிழகம், கோவா, மே.வங்கம், சிக்கிம் ஆகியவை உள்ளன. (அதிக மக்கள் தொகை கொண்டிருந்தாலும் - தமிழகமும், மே.வங்கமும் இடம்பெற்றுள்ளது மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளினால் மக்கள் பலன் பெற்றுள்ளதைக் காட்டுகிறது)

கணித அறிவில் தமிழகம், கர்நாடகம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. சதவீத அடிப்படையில் வாசிப்புத் திறனில் தமிழகம் பின்தங்கியுள்ளது. கேரளம், மிசோரம் இமாச்சல் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

பொதுவாக நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை. மத்திய பிரதேசத்தில் பெண்கள் நிலை மிக மோசமாக உள்ளது. கேரளத்தில் பெண்கள் நிலை மிகச் சிறப்பாக உள்ளது. பிற மாநிலங்களில் ஆண், பெண் இடையே வித்தியாசமில்லை.

-------------------------

ஒட்டுமொத்த இந்தியாவில் ஒரு மாநிலம் மட்டும் வேறு விதமாக இருக்க முடியாது என்றாலும், ஓரளவு சிறந்த நிர்வாகத்தை மாநிலக் கட்சிகளும், இடதுசாரிகளும் கொடுத்துள்ளனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் இவ்வட்டவணையில் இடம்பெற்றிருக்க - எப்போதும்போல கற்றல் திறன் அட்டவணையில் குஜராத் இடம்பிடிக்கவில்லை. நரேந்திர மோடி ஒருவேளை மேற்கண்ட மாநிலங்களில் பிறந்திருந்தால் - வரலாறாவது படித்திருக்கலாம்.

ராகுல் - முத்தம் - ஒரு படுகொலை ...

ராகுலுக்கு முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை ...

சக மனிதனுக்கு முத்தம் கொடுப்பதால் 'கற்பு' ஒழுக்கம் மீறப்படுவதாகக் கருதும் அந்தக் கணவன் - இனி அந்தக் கரிக்கட்டையோடு மட்டுமே படுத்து தன் கற்பொழுக்கத்தைப் பராமரிப்பான் எனில் - தானும் ஒருமுறை தீக்குளித்து, தன் உதடுகளின் தூய்மையை நிரூபிப்பான் எனில் - இந்த சம்பவத்தை நாம் மன்னித்துவிடலாம்.

ஆனால், அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் என்ன செய்ய வேண்டுமென தீர்மானிப்பதற்கான உரிமை, சரியானதைச் செய்வதற்கு மட்டுமல்ல - தவறிழைத்தும் கற்றுக் கொள்வதற்கான உரிமை தரப்படாத சமூகம் - திறந்த வெளிச் சிறையாகவே இருக்கும்.

சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்படாமல், ஜனநாயகத்தின் பெருமையைப் பீற்றுவதில், பொருளேதுமில்லை.

அன்னா ஹசாரே தெளிவாகத்தான் இருக்கிறார் ...

அன்னா ஹசாரே குறித்து மறந்தே போய்விட்டோம். முதலில் அவர் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் இருந்தெல்லாம் விலகியிருந்தார். ஆம் ஆத்மி வெற்றிபெற்ற போதும் கூட - மெளனம் காத்தார், விலகியிருந்தார்.

 காங்கிரசை மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற அளவில்தான் அவரின் நோக்கம் செயல்பட்டது. பின்னர், அவர் அணியில் இருந்த 'பாபா ராம்தேவ்' தன் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது அன்னாவின் உதடுகள் பாஜகவின் ஊழல்கள் குறித்து அமைதிகாத்தன.

ஆம் ஆத்மிக்கு - அன்னா ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்பது அப்போது வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் 'காங்கிரஸ் - பாஜக' இடையிலான ஊழல் கூட்டணியை எதிர்த்தார்கள். எனவே ஹசாரேவுக்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை.

லோக்பால் மசோதாவுக்காக ஆம் ஆத்மி தனது ஆட்சியையே இழக்கத் துணிந்த போதும் அன்னா அப்படியே இருந்தார். பின் சில கண்டிப்பான கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இப்போது அவர் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியிருக்கிறார். முற்றிலும் புதிய திசையில். முற்றிலும் புதிய களத்தில்.

சாமானிய மக்களிடமிருந்து கோடிகளைச் சுறுட்டிய சஹாரா நிறுவனத்தின் ஆதரவாளரான மமதா அவரின் உற்ற நண்பராகியுள்ளார். சுதந்திர இந்தியாவில் மிக அதிக ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கம்யூனிஸ்டுகளை எதிர்த்து - அன்னா பிரச்சாரம் செய்யப் போகிறார்.

ஏனென்றால், வரக்கூடிய தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக சீட்டுகளை பெற்றுவிடக் கூடாது. அவர்கள் பலம்பெற்றால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வலியுறுத்துவார்கள். யுபிஏ 1 அரசாங்கத்தை ஆட்டுவித்தது போல - பெட்ரோல் விலை ஏறினாலும், பொதுத்துறைகளை விற்பனை செய்தாலும் தடுக்கப் பார்ப்பார்கள். கொள்கை அடிப்படையில் ஒரு மாற்றத்துக்காக போராடுவார்கள். அவர்கள் பலவீனப்பட வேண்டும்.

#அன்னா தெளிவாகத்தான் இருக்கிறார்.

அரசு திரையரங்கம் நடத்தலாமா? ...

அரசு திரையரங்கம் நடத்தலாமா? என்பது ஒரு விவாதமாகியுள்ளது

திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் பெற்றுள்ள சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாக மாற்றம் பெற்றுள்ள.

ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்) நூற்றுக்கணக்கான திரையரங்கங்களை ஆண்டுக்கணக்கில் ஒப்பந்தம் செய்து, ஒன்றுக்கும் ஆகாத திரைப்படங்களைக் கூட அதிக விளம்பரம் செய்து - நம் சட்டைப்பையைக் காலியாக்கிவிடுகின்றன.

சிறு திரைப்படங்களும், சுதந்திரமான படைப்பாளர்களும் - இதுபோன்ற சினிமா வியாபாரிகளின் தேவைக்காக 'கமர்சியல்' சமரசங்களுக்கும், பெண் உடல் வியாபாரத்திற்கும் அடிபணிவதற்கும் இத்தகைய ஏகபோகமும், கோடிகளை குவிக்கும் ஆசையும் காரணமாகிறது.

ஒரு துறையில் சிலரே (நடிகர்/நிறுவனம்) ஆதிக்கம் செலுத்துவது எப்போதும் ஆரோக்கியமான போட்டியை மறுத்து, குறுக்கு வழியில் லாபமீட்டவே வழிவகுக்கிறது.

இந்த சூழலில் அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - எடுத்த எடுப்பிலேயே, மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும்.திரையரங்கம் கிடைக்காத, நல்ல படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம்.

ஆனால், இவையெல்லாம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தும் விதத்தில்தான் உள்ளது.

மீண்டும் வருகிறது கம்யூனிசப் பேய் !

தினமலரின் இன்றைய தலைப்பும் செய்தியும் சிரிப்பை வரவழைத்தன. தமிழகம் ஆகிறது 'சோவியத் யூனியன்' என்று தலைப்பு போட்டிருந்தார்கள். அதோடு ஜெ யாரிடமோ தவறான யோசனை பெறுகிறார் - கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற கதைதான். இனி எல்லாம் முடிந்தது என்கிற போக்கில் எழுதியிருந்தார்கள்.

இந்தியா, உலகமயக் கொள்கையிடம் தன்னை அடகுவைத்து, மீளமுடியாத நெருக்கடிகளை வரவழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் - ஒரு மாநிலத்தில் மட்டும் பொருளாதாரக் கொள்கையை மாற்றிவிட முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க. இவர்கள் ஏன் குதிக்கிறார்கள்? எது அவர்களை உண்மையில் பயப்படுத்துகிறது? என்பது முக்கியமான கேள்வி.

நலத்திட்ட அரசு:
உணவகம், மருந்தகம், காய்கறிச் சந்தை, பாட்டில் குடிநீர், கேபிள் இணைப்பு - என்ற வரிசையில் திரையரங்கம் ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பல முன்னேறிய நாடுகளில் உள்ளதுபோல இவைகள் அனைத்தும் நலத்திட்ட நடவடிக்கைகள்தான்.

குறிப்பாக திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாகவே நீடித்திருக்கிறது. ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்)

அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - அவர்களின் மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம். அதுவும் நடைமுறைப் படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
---
இந்தியாவில் பெரும் தொழில்களை தொடங்க சோவியத் உதவி பெறப்பட்டுள்ளது. கலப்பு பொருளாதாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுவரையில் சோசலிசப் பொருளாதாரம் அமலில் இருந்ததில்லை.

தினமலர் ஒரு போலி அச்சத்தைக் கிளப்புவதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. அவர்களின் விருப்ப நாயகனும், இந்திய பெரும் முதலாளிகளின் அன்பு வேட்பாளருமான நரேந்திர மோடியை அதிமுக ஆதரிக்கவில்லை என்பதே அது.
---
எது கம்யூனிசம் என்கிற விளக்கத்தைக் கூட - முதலாளிகளே கொடுப்பதும். 'மனைவியை' பொதுவுடைமை ஆக்கிடுவார்கள். இரண்டு சைக்கிள் இருந்தால் ஒன்றை பிடுங்கிக் கொள்வார்கள். என்றெல்லாம் தவறான விளக்கங்களைக் கொடுத்து அச்சப்படுத்துவது இன்றைக்கு மட்டும் நடப்பதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே "கம்யூனிச பூதம்" என்ற முதலாளிகளின் பிரச்சாரத்துக்கு பதில் கொடுத்துத்தான் தொடங்கும் என்பதிலிருந்து பார்ததால் - தொடக்கத்திலிருந்தே அவர்கள் இதைத்தான் செய்துவந்திருக்கிறார்கள்.

அம்பானி, அடானி வகையராக்களும், அவர்களின் கதா நாயகர்களும் அச்சமடையத் தொடங்கியுள்ளார்கள்.

#இது_நல்லதுதான்!

மூவர் தூக்கு தீர்ப்பு - பாஜகவை தோற்கடிக்குமா?

"கொடூரமான அரசியல் படு கொலைகள் .. தண்டனை பெற்ற குற்றவாளிகள் , மன்னிக்கப் படவேண்டியவர்களா ?"

"தமிழக மக்களின் மனிதாபிமானம் குற்றவாளிகளின் சார்பாக ஒரு நாளும் திரும்புவதும் இல்லை." - 'இதனால் பாஜக கூட்டணி தோல்வியடையும்' என்றெல்லாம் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் Banu Gomes.
---

ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவருக்கும் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்க முடியாது என்ற நிலையிலேயே இதைச் செய்துள்ளார்களே அல்லாமல் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்பதல்ல நீதிமன்றத்தின் நிலைப்பாடு.

கொலைக்கு மற்றொரு கொலை சமனாகிவிட முடியாது என்கிற நிலையில் இருந்தும் - தண்டனையின் நோக்கம் 'பலிக்கு பலி' அல்ல என்கிற உயந்த நிலையிலிருந்துமே நீதித்துறை செயல்பட வேண்டும். இந்த வகையில்தான், தமிழக மக்களின் மனிதாபிமான உணர்வு மரண தண்டனையை எதிர்க்கிறதே அன்றி - குற்றங்களுக்கு ஆதரவான மனநிலை அல்ல.

மேலும், தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்படப் போவது - நிச்சயம் நடக்கப் போவதுதான். அவர்கள் அரசியல் படுகொலைகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதுடன், படுகொலை அரசியலில் திளைத்தவர்கள் என்பதாலுமே மக்கள் அவர்களை நிராகரிப்பார்களே அன்றி. மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பினால் அல்ல.

உண்மையைச் சொல்லப்போனால், இந்த தீர்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்த மதிமுகவும், அந்த அணியோடு சேர்ந்து வீழப்போகிறது என்பதே நிதர்சனம்.

கெஜ்ரிவால் ராஜினாமாவும் - அம்பலமான கூட்டணியும்....

அரவிந் கெஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு சரியானதே.

இதுதான் நடக்குமென்பது நமக்கு முன்னமே தெரியும். மத்திய ஆட்சியில் காங்கிரஸ் - பாஜக அல்லாத சக்திகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் - அவர்களை ஆட்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன், சரியான சமயத்தில் கவிழ்த்துவிடுவதிலும் காங்கிரஸ், பாஜக வெட்கமின்றி கைகோர்த்துள்ளனர்.

விவாதிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகளின்போதும், மக்கள் விரோத மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்போதும் - வெற்றுக் கூச்சல்களினிடையே - ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் பணியிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டை அம்பலப்படுத்தியது வரவேற்புக்கு உரியது.

நேற்றையை தில்லி சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும் எவரும் - ஊழலுக்கு எதிரான எந்த விவாதத்தையும், உறுதியான நடவடிக்கையையும் கண்டு காங்கிரசும் பாஜகவும் எத்தனை அச்சமடைகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்க முடியும்.

நிர்வாக அனுபவமற்ற, இன்னும் தங்களை முழுமையாக வெளிப்படுத்தியிராத புதிய சக்திகள் என்றாலும், ஆம் ஆத்மி இந்த சூழலில் சரியான முடிவையே எடுத்துள்ளது. அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - பெறு நிறுவனங்களின் கூட்டணியை முடிந்த அளவு அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மி தொடர்பான விமர்சனங்கள் என்ன இருந்தாலும் - தில்லி மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு என்ற முறையில் அவர்கள் வரவேற்புக்கு உரியவர்கள். - அரசியலற்ற பொதுமக்களை களத்திற்கு இழுத்துவந்து, சில உண்மை அனுபவங்களைக் கொடுத்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் Gnani Sankaran சொல்வதைப் போல, 'ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தாக்கம்'. அது நமக்கு கொடுத்துள்ள அனுபவங்கள் முக்கியமானவை.

#எல்லாவற்றையும்_மக்கள்_பார்க்க_வேண்டும்...

அய்யா ராமதாசின் காதல் ...

செவிலியரோடு மருத்துவர் ராமதாசுக்கு பழக்கம் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நாம் விமர்சனத்தோடு பார்க்க வேண்டியதில்லை. இந்த வயதில்தான் சரியான நட்பு கிடைத்திருக்கிறதென அவரின் மனம் உணர்ந்திருக்கலாம். அவருக்கான வாழ்க்கையை, தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவருக்கு இருக்கிறது.

சட்டப்படி இது தவறென்று கருதப்படலாம், எனவே அவரின் குடும்பத்தாருக்கு உரிய நீதியை அவர் வழங்க வேண்டும்.

சாதிய விசமப் பிரச்சாரத்துக்கு பலியாகி - காதல் திருமணங்களை எதிர்த்து துவேசம் கொண்டு - ஊரையே எரித்த தொண்டர்கள் - இப்போதாவது மன விருப்பத்தின் வலிமையை புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.

காதலிப்பது குற்றமில்லை. காதலித்த பெண்/ஆண் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்வது குற்றமில்லை. சுய மரியாதையுடன் வாழ்வது குற்றமில்லை.

மனைவி இருக்கும்போதே, மன விருப்பம் இன்னொருவரிடம் இருந்தால் - விவாகரத்து செய்யாமல் உறவு தொடர்வது சட்டப்படி குற்றம். ஆனால், இந்தக் குற்றத்துக்காகவும் கூட எந்த கிராமத்தையும் எரிக்க வேண்டியதில்லை.

‪#‎வாழ்த்துகள்‬!

நிர்வாண விளம்பர உத்தி - ஒரு உண்மை !

இந்தி நடிகை மேக்னா நிர்வாணமாக நின்றபடி பாஜகவுக்கு வாக்குக் கேட்கிறார்.

மோடிமீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 'தன் கலாப்பூர்வமான' பங்களிப்பை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இணையதளத்தில், சீனாவின் நகரத்தை 'அகமதாபாத்' என்று மாற்றியது போலவோ. பாகிஸ்தான் வீடியோவை பயன்படுத்தி முசாபர் நகரில் கலவரத்தை தூண்டியது போலவோ, மோடியின் பேச்சை ஒபாமா கேட்பதாக மாற்றி, பின் அது ஒரு ஒட்டுவேலை என்ற செய்தி பிபிசி உலக தளத்தில் வெளியாகி தலைகுனிவை ஏற்படுத்தியது போலவோ அல்ல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்பது பாஜகவுக்கு ஆறுதல்.

இந்த அரை நிர்வாணப் படங்கள் இளைஞர்களை ஈர்க்கும் என மேக்னா நினைத்திருக்கலாம். முதல் முறை வாக்காளர்களிடம் கொள்கைகளைப் பேசுவதை விட, இந்த வழிமுறை 'கவர்ச்சியாக' இருக்கும் என அவர் முடிவு செய்திருக்கலாம். சட்டசபையிலேயே நீலப்படம் பார்க்கும் பாஜகவின் அமைச்சர்களும், அவர்களை பின்பற்றுவோரும் மகிழ்ந்திருப்பார்கள்.

'மார்க்கெட்டிங்' தெரிந்த அவர்களின் தலைவர்கள். எதிர்மறை விமர்சனமானாலும் 'அது ஒரு விளம்பரம்' என்று சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருப்பார்கள்.

நமக்கு இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெரிகிறது.

தங்கள் கொள்கைகளை மறைத்துக் கொண்டு, கவர்ச்சி வார்த்தைகளில், வாக்குகளை வாங்க நினைக்கும் இந்தக் கூட்டம், அதிகாரத்திற்கு வருமானால். தேசம் இப்படித்தான் அரை நிர்வாணத்தோடு நிற்க நேரிடும்.

Labels