Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

ராகுல் - முத்தம் - ஒரு படுகொலை ...

ராகுலுக்கு முத்தமிட்ட பெண் எரித்துக் கொலை ...

சக மனிதனுக்கு முத்தம் கொடுப்பதால் 'கற்பு' ஒழுக்கம் மீறப்படுவதாகக் கருதும் அந்தக் கணவன் - இனி அந்தக் கரிக்கட்டையோடு மட்டுமே படுத்து தன் கற்பொழுக்கத்தைப் பராமரிப்பான் எனில் - தானும் ஒருமுறை தீக்குளித்து, தன் உதடுகளின் தூய்மையை நிரூபிப்பான் எனில் - இந்த சம்பவத்தை நாம் மன்னித்துவிடலாம்.

ஆனால், அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் என்ன செய்ய வேண்டுமென தீர்மானிப்பதற்கான உரிமை, சரியானதைச் செய்வதற்கு மட்டுமல்ல - தவறிழைத்தும் கற்றுக் கொள்வதற்கான உரிமை தரப்படாத சமூகம் - திறந்த வெளிச் சிறையாகவே இருக்கும்.

சிறைச்சாலையின் கதவுகள் திறக்கப்படாமல், ஜனநாயகத்தின் பெருமையைப் பீற்றுவதில், பொருளேதுமில்லை.

அரசு திரையரங்கம் நடத்தலாமா? ...

அரசு திரையரங்கம் நடத்தலாமா? என்பது ஒரு விவாதமாகியுள்ளது

திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் பெற்றுள்ள சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாக மாற்றம் பெற்றுள்ள.

ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்) நூற்றுக்கணக்கான திரையரங்கங்களை ஆண்டுக்கணக்கில் ஒப்பந்தம் செய்து, ஒன்றுக்கும் ஆகாத திரைப்படங்களைக் கூட அதிக விளம்பரம் செய்து - நம் சட்டைப்பையைக் காலியாக்கிவிடுகின்றன.

சிறு திரைப்படங்களும், சுதந்திரமான படைப்பாளர்களும் - இதுபோன்ற சினிமா வியாபாரிகளின் தேவைக்காக 'கமர்சியல்' சமரசங்களுக்கும், பெண் உடல் வியாபாரத்திற்கும் அடிபணிவதற்கும் இத்தகைய ஏகபோகமும், கோடிகளை குவிக்கும் ஆசையும் காரணமாகிறது.

ஒரு துறையில் சிலரே (நடிகர்/நிறுவனம்) ஆதிக்கம் செலுத்துவது எப்போதும் ஆரோக்கியமான போட்டியை மறுத்து, குறுக்கு வழியில் லாபமீட்டவே வழிவகுக்கிறது.

இந்த சூழலில் அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - எடுத்த எடுப்பிலேயே, மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றாலும்.திரையரங்கம் கிடைக்காத, நல்ல படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம்.

ஆனால், இவையெல்லாம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தும் விதத்தில்தான் உள்ளது.

திமுக ஆதரவாளர்கள்தான் பதில் சொல்ல வேண்டும் ...

திமுக - அழகிரியை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. தற்காலிகம்தான் என்றாலும் இதுவொரு நல்ல முடிவு. காலதாமதமே என்றாலும், எடுக்க வேண்டிய முடிவு.

அதிகாரப் போட்டிக்காக த.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டபோதும், தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்கள் கருகிச் செத்தபோதும் அவர்களுக்கு இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் நெருக்குதல் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, அழகிரிக்கு கட்சிப் பொருப்புகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டன.

உரத்துரை மந்திரியாக அவர் இருந்தபோதுதான், உர மானியங்கள் வெட்டப்பட்டன. விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏன் எடுத்தோம்? என்ற விளக்கக் கூட சொல்லத் தெரியாத, நிர்வாகியாக இருந்தார். ஆனாலும், அவர் அமைச்சராக நீடித்தார்.

திருமங்கலம் பார்முலாவை மட்டும் நம்பிய அழகிரி, அரசியலை எத்தனை எளிமையான விளக்கத்திற்குள் கொண்டு சென்றார்? என்பதும் இடைத்தேர்தல்களில் ஒரு விதமாகவும், பொதுத்தேர்தலில் வேறொரு விதமாகவும் மக்கள் பதிலடி கொடுத்ததும் மறக்க முடியாது.

ஆனால் அப்போதெல்லாம், கோபம் கொள்ளாத திமுக இப்போது 'தற்காலிக நீக்கத்தை' அறிவித்திருப்பதும். அதுவே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியென அய்யா வீரமணி சான்றிதழ் கொடுத்திருப்பதும். இதுவெல்லாம் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிகவை தாஜா செய்யும் வேலை மட்டும்தானோ? என்ற ஊகத்துக்கு இட்டுச் செல்வதை தவிர்க்க முடியவில்லை.

மீண்டுமொரு வல்லுறவு ...

இந்த முறை நான் மிகுந்த சோர்வோடே இதனை எழுதுகிறேன். ஏற்கனவே, நான் சோர்வடைந்துவிட்டேன். ஆனாலும், இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுவதற்கான தேவை குறையுமென்று தோன்றவில்லை.

மேற்கு வங்கத்தில், பீம்புர் மாவட்டம் லாப்பூர் கிராமத்தில், ஒரு பழங்குடியினப் பெண் வேறு சாதி இளைஞரோடு பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அவர்கள் காதலித்துள்ளனர்.

இதில் தலையிட்ட சாதிப் பஞ்சாயத்தினர், அந்த பெண்ணிடம், ரூ.50 ஆயிரமும், இளைஞரிடம் ரூ.25 ஆயிரமும் அபராதம் செலுத்து, இல்லையெனில், கிராமத்து இளைஞர்கள் அப்பெண்ணை சீரழித்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார். இதைச் செய்தவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்.

ஏழைப் பெண்ணால் அந்த தொகையை செலுத்த முடியாத நிலையில் - 13 பேர் கூட்டாக அவளை வல்லுறவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட வக்கிர மிருகங்கள் நாடு முழுவதும் மனிதர்களை தலைகுனிவுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.

1) பெண்ணுக்கான சம அதிகாரம் (குடும்பம் தொடங்கி, பாராளுமன்றம் வரை ...)
2) இளைத்த அழகிய பெண்களை விட - வலுவான உதைக்கத் தெரிந்த மகளிரை வளர்த்தெடுப்பது
3) வல்லுறவு குற்றவாளிக்கு உடனடி தண்டனை - நடப்பிலுள்ள சட்டங்களை அமலாக்குவது ...
4) சாதி, பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான மெளனம் கலைப்பது ...
5) பாலியல் பண்டமாக மட்டும் பெண்ணைப் பார்க்கும் ஆண்களின் காட்டுமிராண்டிச் சிந்தனையை மேம்படுத்துவது ...

என எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நாம் காலம் கடத்துகிறோம். நாம் என்றால் நாம் ஒவ்வொருவரும்தான்.

#இன்றே_தொடங்குவோம்...

அதிமுகவுக்குள் தீண்டாமைக் கொடுமை?!!!

சாதி பார்த்து புறக்கணிக்கப்படுவதாக, ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏ புலம்ப நேர்ந்திருக்கிறது. அவரை தற்போது கட்சியில் இருந்து விடுவித்திருக்கிறார்கள்.

முதல் நாள் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தேன் - மைக்கின் முன் எம்.எல்.ஏ நிற்கிறார், அவருடன் கடுமையான முகத்தைக் காட்டியபடி அதிகாரி வாக்குவாதம் செய்கிறார். பிரச்சனை, 'அதிகாரிகள் அரசு விழாக்கள் குறித்து முறைப்படி தகவல் கொடுப்பதில்லை. பத்திரிக்கைகளில் பெயர் போடுவதில்லை' என்பது.

அடுத்த நாள் பத்திரிக்கை செய்தி வருகிறது. அதில் அமைச்சர் எம்.எல்.ஏவை மேடையிலேயே கடிந்துகொண்டதாக இருந்தது.

பொதுவாக, கொடநாடு செல்லும் வழியில் எப்போதும் நிரைந்திருக்கும் விளம்பர பலகைகளை கவனித்திருக்கிறேன். அவற்றில் தனித் தொகுதி எம்.எல்.ஏக்கள் பெயர் பாரபட்சத்திற்கு ஆளானதில்லை.

இந்த சூழலில் ஒரு எம்.எல்.ஏ தான் சாதியால் ஒதுக்கப்படுவதாகவும், தள்ளிவைக்கப்படுவதாகவும் உணர்வதும் - அதை வெளியே சொல்லியிருப்பதும் அதிமுக கவனித்து சரி செய்துகொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சனை.

ஆனால், இப்படியொருத்தர் பொதுவில் பேசியதால் அவரே தண்டிக்கப்பட நேர்வது ஆரோக்கியமானதா? ஏன் நிதானித்து, உரிய விசாரணைக்கு பின் நடவடிக்கைக்கு போயிருக்கக் கூடாது?

எம்.எல்.ஏ குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின். அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மட்டுமல்ல.

ஆம் ஆத்மி - எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

ஆம் ஆத்மி - விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியல்ல. ஆனால் எந்த நடவடிக்கையை விமர்சிக்கிறோம் என்பதில், விமர்சகளின் சாயம் வெளிப்படுகிறது.

மின் கட்டணக் குறைப்பு, தண்ணீர் வியாபாரத்திற்கு கடிவாளம், அந்நிய மூலதனத்திற்கு அனுமதி மறுப்பு, ஊழல் எதிர்ப்பாளர்களை பாதுகாத்தல், வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கைகளை, ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் புதிய அந்தக் கட்சி செய்துள்ளதை வரவேற்க வேண்டும்.

ஆனால், மக்களுக்கு சுமை குறைப்பதை ஊடகங்கள் சாடியதும், சில அமைச்சர்கள் - ஊடகங்களுக்கு பணிந்து போயினர். தனக்கு இதுதான் கொள்கை என்று திடமாகச் சொல்லாத அவர்களின் இந்தப் போக்கு சரியானதில்லை.

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மத்தியிலும் களம் காண நினைப்பது தவறில்லை. அதற்காக 'சாதிப் பஞ்சாயத்துகள்' சரியாக நடக்கின்றன என்ற ரீதியில் கருத்து சொல்வது சந்தர்ப்பவாதமே அன்றி அறிவுடைமை அல்ல.

அடுத்தது - இன்றைக்கு தில்லி காவல்துறை கண்டித்து கெஜ்ரிவால் தர்ணாவில் இறங்கியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மறுப்பது மத்திய ஆட்சியாளர்களின் தவறான போக்காகும். தில்லி அரசின் கையில் காவல்துறை இல்லை என்ற நிலை சரியில்லை. இதற்கு எதிரான போராடுவது கூட்டாட்சிக்கு அவசியமானது.

ஆனால், எந்த வழக்கும் பதியாமல், நள்ளிரவில் திடீர் சோதனை, அமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக யாரையும் விசாரிப்பதென்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடைமுறை அல்ல. மேலும், கருப்பர்கள், ஆப்ரிக்கர்கள் என்றாலே போதை வியாபாரிகள் என்கிற பொதுப்புத்திக்கு ஆட்படுவதெல்லாம், ஏற்க முடியாதது.

தத்தி தத்தி நடக்கும் ஆம் ஆத்மியில் நேர்மையாளர்களும் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகளும் உள்ளனர். நல்ல விமர்சனங்கள், பக்குவப்படுத்தலாம். பாஜகவோ, காங்கிரசோ அந்த நோக்கத்தில் தங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில்லை.

# எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

உடலைவிற்க தயாராகும் மாணவர்கள் ...

சொல்லுங்க அண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சி - ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. நேற்று மாலை அதில் கல்லூரி மாணவர்களை கலாய்த்துக் கொண்டிருந்தனர். கேள்வி இதுதான் ...

"எதிர்கால மனைவிக்கான தகுதிகள் என்ன?" "கணவனுக்கான தகுதிகள் என்ன?"

"ஒரு மாணவர் - 1000 பவுன் நகை போடவேண்டும்" என்றார். எல்லோரும் சிரித்தார்கள். "ஏன் கேட்கக் கூடாதா?" என்றபடி, 1000 பவுன் போட்டா திருமணம் செய்துகொள்ளலாம் என்று மறுபடியும் சொன்னார். அடுத்தவர், 'நிறைய சொத்து இருக்கணும்' என்றார், அடுத்தவர் 'பெரிய பணக்கார குடும்பமா இருக்கணும்' என்றார்.

அதுவொரு பொறியியல் கல்லூரி, எல்லா மாணவர்களின் விருப்பமும் ஒன்றாக இருந்தது.

பெண்களில் - ஒருத்தர் மட்டும், 'அவன் பெரிய பணக்காரணாக இருக்க வேண்டும்' என்றார். மற்றவர்களெல்லாம், "வீட்டு வேலைகளை கூச்சமின்றி செய்ய வேண்டும்" என்ற பதிலையே வெவ்வேறு விதங்களில் தெரிவித்தனர்.

பெருமைப்பட எந்தத் தகுதியுமற்ற அந்த பையன்களை நினைத்து வெட்கமாய் இருந்தது. பெண்களை அசிங்கப்படுத்துவதற்காக இந்த பசங்களெல்லாம் 'வேசி' என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு. வெட்கமின்றி, இவர்களெல்லாம் அதையே பெருமையுடன், தொலைக்காட்சி முன் சொல்லிக் கொண்டிருந்தனர்.

மனிதர்களை உருவாக்க நாமெல்லாம் ஏதாவது செய்கிறோமா? ...

மாற்றுத் திறன் X ஊனம் ?

ஊனமுற்றோரை, மாற்றுத்திறனாளி என்று அழைக்க நாம் பழக்கப்பட்டு வருகிறோம். குருடர், செவிடர் என்பதை விட - மாற்றுத் திறனாளி என்ற வார்த்தை நேர்மறையாக இருக்கிறது.

அதே நேரம், வார்த்தையை மட்டும் நேர்மறையாக மாற்றிவிட்டு, அவர்களின் உரிமைகளை காற்றில் விடும் போக்கும் இல்லாமலில்லை.

எத்தனை பொது கட்டடங்களில் சறுக்குப் பாதைகள் உள்ளன? எத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காதுகேளாதோர் புரிந்துகொள்ள வழிவகை உண்டு? எத்தனை சாலைகளில் பார்வையற்றோர் நடந்து செல்லும் விதத்தில் நடைபாதைகள் பராமரிக்கப்படுகின்றன? எத்தனை கழிப்பிடங்களில் ஊனமுற்றோருக்காக சிறப்பு வசதிக இருக்கின்றன??

ஒருவர் ஊனமடைவதை இயற்கை தேர்வு செய்கிறது. அல்லது அவசர வாழ்க்கை ஏற்படுத்தியுள்ள சூழல் மாசுபாடுகள் முடிவு செய்கின்றன. மனித சமூகம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், ஊனமுற்ற ஒரு பகுதியினர் உருவாவது இயற்கை என்கின்ற நிலையில் - அவர்களுக்கான சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

இனி ஒரு ஊனமுற்றோரை சந்திக்க நேர்ந்தால் - அவரின் மாற்றுத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள ஏதாவது செய்தோமா? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே - மாற்றுத் திறனாளி என்று அழைக்க முற்படுவோம்.

தவறுதலாக வாயில் துப்பாக்கி!

சென்ற வாரத்தில் ஒரு செய்தி, "தவறுதலாக சிறுவனின் வாயில் துப்பாக்கி வைத்து சுட்ட போலீஸ்" என தலைப்பிட்டிருந்தார்கள். அதெப்படி? தவறுதலாக துப்பாக்கியை வாயில் வைப்பார்கள்?

உண்மையில், தவறு தலைப்பில்தான் இருக்கிறது. போலீஸ்காரனின் துப்பாக்கியென்பதால், கொலை முயற்சி வழக்கு 'விபத்தாக' மாற்றப்பட்டது. குழந்தை ஒரு ஏழை முஸ்லிம் குடும்பக் குழந்தை என்பதால், மனித உரிமைக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

துப்பாக்கியையும், லத்திக்கம்பையும் வைத்து ஒரு உயர்ந்த சமூகத்தை படைக்க முடியும் என்பது - காட்டுமிராண்டிச் சிந்தனையாகும். இந்த சமூகம், ஒரு நாளும் வன்முறையால் 'பண்பட்டதில்லை'.

அதுவும் அவன் ஒரு ஏழைக் குழந்தை - அவனொரு முஸ்லிம் - அவனுக்கென்று ஆதரவுக்கு அரசியல் பின்புலமில்லை - அதனால் அவனொரு குற்றவாளி - அவன்மீது எந்த அராஜகத்தையும் நிகழ்த்தலாம் என்ற பார்வைதான் இந்த வன்முறைக்கு தூண்டுகோல் என்பது பட்டவர்த்தனம்.

ஆனால், மேற்கண்ட படி செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் இந்த தவறை மறைப்பதில் துணை போயின என்பதும் எதேச்சையானதல்ல.

இது மாற்றப்பட வேண்டியதும், கண்டிக்கப்படவேண்டியதுமான கூட்டணியாகும். #கண்டிக்கிறேன்

ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கல் ...

மிஸ்ட் கால் குடுத்தாலே போதும், மெம்பர் ஆகிடலாம் என்பதை விட அரசியலை யாராவது கேலி செய்துவிட முடியுமா??

ஆம் ஆத்மி புதிய கட்சி, அரசியலில் புதுமைகளை செய்ய நினைக்கின்றனர். ஆனால், இப்படிப் போய், பழைய குட்டையில் மூழ்கிவிட்டு, என்ன புதுமையை படைக்க முடியும்??

இப்போது செயல்படும் கட்சிகளை உற்று கவனித்தால், அவற்றின் உறுப்பினர்கள் 'ரசிகர்' பட்டாளமாக மாற்றப்பட்டிருப்பது தெரியும். கட்சியின் தலைவர்கள் மீதான விருப்பத்தை தவிர எதையும் தங்கள் அரசியலாக அறிந்திருக்காத உறுப்பினர்கள் இருப்பதால்தான், கட்சிகள் எத்தகைய துரோகத்தையும் துணிந்து செய்கின்றன.

ஆம் ஆத்மியும் உறுப்பினருக்கான அடிப்படைத் தகுதிகளையெல்லாம் நீக்கிவிட்டு, மிஸ்ட் கால் கொடுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். கெஜ்ரிவால் ரசிகர்கள், அல்லது அரசியலற்ற ஏராளமானோரை இது ஈர்க்கலாம். ஆனால், இதனால் ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத்த முடியுமா??

ஒரு மெய்யான மாற்று அரசியல் - அரசியல் உணர்வுபெற்ற இளைஞர் பட்டாளத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு உறுதியான கொள்கைப் பரப்புரையே இப்போதைய அவசியமாகும்.

ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கொள்கை, கொள்கை உணர்ந்த உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கென தகுதி, அவர்களின் பணி, அர்ப்பணிப்புக்கு ஏற்ற வகையில் பதவிகள், கட்சியின் முடிவுகளை எடுப்பதிலும், அவற்றை விமர்சிப்பதிலும் உரிமைகள் என்ற அடிப்படையில் ஒரு கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இருப்பதுதான், ஒரு கட்சியை ஜனநாயகத் தன்மையோடும், கொள்கையிலிருந்து மாறாமலும் நீடிக்கச் செய்யும்.

# ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கலாகும் ...

be ஆப்பி, make everyone ஆப்பி ...

தை? சித்திரை? அல்லது ஜனவரி? - என சர்ச்சை எழுப்புவோர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். மக்கள் எல்லா பிரசங்கங்களையும் கேட்டுக்கொள்வார்கள். ஆனால் கொண்டாட்டங்களை அவர்கள் விடுவதேயில்லை.

கொண்டாட்டங்கள் - உலக இயல்பு. குழந்தை பிறப்பா, சாவுச் சடங்கா, திருமணமா? அட ஒன்றுமேயில்லையானால் நீ காதலிக்கிறாயா? காதலில் வெற்றியா? தோல்வியா? - எதேனும் ஒரு பதில் சொல் - சிரித்துக் கொண்டோ, அழுதுகொண்டோ கொண்டாடலாம்.

கொண்டாட்டங்களில் இருந்து பிரிக்கமுடியாத மனிதர்களை நான் தெருவெங்கும் பார்க்கிறேன். விழிம்பு நிலையில், தன் வாழ்க்கையைத் தொலைத்து தெருவெங்கும் எதிர்காலத்தின் அவநம்பிக்கையாக அலைந்துகொண்டிருக்கும் பிச்சைக்காரர்களிடம் கூட கொண்டாட்டங்களுக்கு இடமிருக்கிறது.

சிலருக்கு சோறு, சிலருக்கு மதுபானம், சிலருக்கு நண்பர்கள், சிலருக்கு காதல், சிலறுக்கு உறவின் கூட்டம் - ஏதேனுமொருவிதத்தில் தன்னைப் மறுவுருவாக்கம் செய்துகொண்டேயிருக்கிறது மனித இனம்.

சிரிப்பதிலும், ஒன்றுகூடலிலும் மகிழ்ச்சி இருக்கிறது. அதனால்தான் தனிமையும், ஒதுக்குதலும் நம்மை வாட்டுகிறது. உயிர்ப்பின் உன்னதம் காரணமாகத்தான், மரணம் அச்சமுட்டுகிறது.

அன்பர்களே, பெருங்கூட்டமாக சேர்ந்துகொள்ளுங்கள், எல்லாக் காரணங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் - மொத்தத்தில் மகிழ்ச்சித் தாண்டவமாடட்டும். ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சியும், கொண்டாட்டமுமே நமது இலக்கு.

be happy, make everyone happy ...

ரஞ்சிதா - சந்நியாசியாவது குறித்து நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்??

சந்நியாசி நிலை குறித்து அவர்கள்தான் சில இலக்கணங்கள் வகுத்தார்கள், மனித இயல்பைத் தாண்டிய விதிகளை வைத்து, அவற்றை ஒருவன் பின்பற்றி, தெய்வ சக்தியை எய்துவதாகச் சொன்னார்கள். தெய்வ பக்தி இல்லாதவர்கள்தான் 'ஒழுக்கமற்றவர்கள்' என்று ஏசினார்கள்.

அப்போதெல்லாம் நாம் தெளிவாகச் சொன்னோம், சாமானிய மக்களின் வாழ்க்கை விடியல் குறித்து சிந்திப்பதை விட உயர்ந்த ஆன்மீகமில்லை என்று. ஏழைகளோடு சேர்ந்து உழைத்து, அவர்களின் விழிப்புக்காக நம்மை அர்ப்பணம் செய்துகொள்வதை விட உயர்ந்த 'யோகமில்லை' என்றே சொன்னோம்.

சொர்க லோகத்தில் 'ரம்பையும், ஊர்வசியும்' நடன மங்கையராக இருப்பார்கள் என்று மதங்கள் சொல்லின. சோமபானமும், சுராபானமும் நொருங்கக் கிடைக்குமென அவர்களே எழுதிவைத்தார்கள்.

சக மனிதனை சமமாக நேசிக்கும் சமூகமே சொர்கம் - அதுவே எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும் மாமருந்தென்று சொன்னோம். அறியாமையெனும் போதை தெளிய, எல்லோரும் மனிதராக வேண்டுமென நாம் இலக்கு நிர்ணயித்தோம்.

நித்யானந்தா இன்றுவரை மரியாதைக்குறியவராக, மடாதிபதியாகத் தொடர்கிறார். தன் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி, மடத்திலுள்ள பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியதை நாம் கண்டித்தோம், கண்டிக்கிறோம்.

மற்றபடி ஏமாற்றுக்காரர்களும், கொலைகாரர்களும் சந்நியாசிகளாக சுகபோகம் அனுபவிக்கும் நிகழ்காலத்தில் ரஞ்சிதா சந்நியாசியாகியிருப்பது நமக்கு வருத்தமளிக்கும் நிகழ்வல்ல.

தனிப்பட்ட முறையில் - ஒரு நடிகையாகவும், சாமியார் அடியாராகவும் ஒரு பாலியல் பண்டமாக மட்டும் பார்க்கப்பட்டு வந்த ரஞ்சிதாவுக்கு இது ஒரு வெற்றி. இனி அவர் சிலராலேனும் சந்நியாசியாகக் கருதப்படுவார். அம்மாவென்றழைக்கப்படுவார்.

#வாழ்த்துவோம்!

தொப்பை - சில சிந்தனைகள் ...

தொப்பையில் இரண்டு விதங்கள் உண்டு... 1) தொள தொளவென தொங்கும் தொப்பை. 2) வெந்தயம் போட்ட இட்டிலி போல கடினமான தொப்பை.

முதல் வகை தொப்பைகள் மறைக்க ஏதுவானவை. சற்று பெரிய சட்டை, பேண்ட் பட்டனை போடாமல் விட்டு சமாளித்துவிடலாம். இரண்டாவது வகையை மறைத்து வைப்பது கடினம்.

தொப்பைகள் உறுவாக காரணம் பல சொல்கிறார்கள். அதிகமாக சாப்பிட்டு, அலுங்காம வேலை செய்வதுதான் அதில் அடிப்படை. ஆனால், என்ன விதமான உணவு, தொப்பையில் இரண்டு வகைகளை தோற்றுவிக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்பது தொப்பை உருவாக காரணமல்ல என்றாலும், இன்றைய சமூகத்தில் தொப்பை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பாக இணைய சமூகத்தில் ஒருமித்த பிரச்சனையே இதுதான்.

சாப்பாட்டை குறைக்காமலே, உழைக்காமலே எப்படி தொப்பை குறைப்பது, வீட்டை விட்டு வெளியே தலை காட்டாமலே எப்படி உடற்பயிற்சி செய்வது - ஒரே சைக்கிளில் 9 வித எக்சைஸ்கள் - என ஏகப்பட்ட டெலி மார்க்கெட்டிங் விளம்பரங்கள் வந்துகொண்டிருப்பது அதன் வெளிப்பாடுதான்.

இந்த சமூகத்தை மாற்றுவதென்றால் - அதன் போக்கிலேயே பொழுதுபோக்கிக் கொண்டிருப்பதில் ஒரு நன்மையும் இல்லை.

”முடியை வெட்டாமலே எப்படி மொட்டை போடுவது?” என்பது போன்ற ஆராய்ச்சிகள் அதிகரிக்க காரணமாக உள்ள இந்த சமூக சிக்கலை - உழைப்பு மட்டும்தான் தீர்க்கும். கம்ப்யூட்டர் முன்னாடி கடினமா உழைப்பவர்கள் உடல் உழைப்பு குறைந்து வருகிறதென்பது யதார்த்தம்.

வீட்டுல தண்ணி வந்தா பிடிச்சு ஊத்துங்க, துணி தொவைப்பது போன்ற கடினமான வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்க... அப்பா, அம்மாவோட காலையில கொஞ்சம் காலார நடங்க ... சமூகத்துல உள்ள மனுசங்களோட பழகுங்க ... சமூகம் மாறணும், நாம மாறணும்.

இழிவைச் சுமக்கும் இந்தியப் பண்பாடு !

தன் மனக் குறைகளை பிறரின் இழிவாகப் பார்க்கும் நோய்தான் இங்கே வியாபித்திருக்கிறது.

#அரவாணி அல்லது திரு நங்கை - என்ற பிறப்பை ஒரு மனிதன் தானாக தேர்வு செய்வதில்லை. அரவாணியாக ஒருத்தருக்குள் ஏற்படும் மாற்றம் எந்த வகையிலும் பிறருக்கு துன்பம் செய்வது அல்ல. ஆனாலும், காரணமேயின்றி அவர்களை இழிவாகக் கருதும் குற்றத்தை பலரும் செய்துதான் வருகிறோம்.

அரசு கொடுக்கும் படிவத்தில், அநாகரிகமான திருநங்கைகள் ஏற்க மறுக்கும் குறியீட்டை பயன்படுத்தியிருப்பதை - என்னவென்று சொல்ல?

நேற்றுமுந்தினம் மதியம் பெண் சிசுக் கொலை தொடர்பான தொலைக்காட்சி விவாதம் நடந்தது, தஞ்சாவூரில் இருந்து ஒரு நண்பர் பேசினார், “என்ன இருந்தாலும் பெண்கள் நடந்துகொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் ஆண்களை ஈர்க்கும் விதத்தில் உடை, நடைகளை அமைத்துக் கொள்ளும்போது. அவர்கள் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது” என்றார்.

இந்த இரண்டு சம்பவங்களுக்கும் - ஆதிக்க மனோபாவம்தான் காரணம் என்றுபடுகிறது. - ஆணுக்குள், பெண்ணின் கூறுகள் வந்தாலே அவர்களை இழிவாகக் கருதுவதும். இயல்பான ஆண், பெண் இனக் கவர்ச்சிக்கு கூட ’#பெண் உடலை’ குறையாகச் சொல்வதும்...

நம்மிடம் சரியான புரிதலும் கட்டுப்பாடும் இல்லாத போது - பிறர் மீது குற்றத்தை தள்ளிவிடுகிறோம். ‘முள் குத்தியது’ என்ற சொற்றொடரில் - முள்ளை மிதித்த உண்மை மறைந்துபோகிறது என்று சொல்வார்கள்.

# எத்தனை ஆண்டுகளாக - இந்த #இழிவுகளை நம் பண்பாடு சுமந்துகொண்டிருக்கப் போகிறது??

உத்தர் கண்ட் - உதவி செய்ய கரம் நீட்டுவோம் ...

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கும் உத்தர்க்கண்ட் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எனது அனுதாபங்கள் ...

காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தோடும் நதியின் சீற்றத்தில், சீட்டுக்கட்டு போல வீடுகள் சரிந்து விழுகின்றன. சிறுகச் சிறுகச் சேர்த்த செல்வங்களை கரைந்து செல்ல - கரகிறார்கள் ஒவ்வொரு மனிதஹும்.

2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவிலிருந்து, கடலூர் புயல் வரைக்கும் மனதில் வந்து அகல்கிறது. ஒரே ஒரு வீடு, எனக்கென ஒரு உலகம் - என்று வாழ்ந்துகொண்டிருந்த எத்தனை மனிதர்கள் - இந்தப் பேரழிவில் சிதைந்து போயிருப்பார்கள்.

சுனாமி பாதிப்பிலிருந்து மக்களை மீட்க - மத்திய அரசு ராஜிவ்காந்தி மறுவாழ்வு நிதியத்திலிருந்து ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியது. மேலும் பல தன்னார்வ உதவிகள் வந்தன. கரையெல்லாம் பிணங்களாய் ஒதுங்கி நிற்க - பாதுகாப்பாய் இருந்த கோவை, ஈரோடு, திருப்பூரின் வாலிபர் சங்கத் தோழர்கள் அவைகளை அகற்றிக் கொடுக்க ஓடிச் சென்றார்கள்.

அதே நேரத்தில், சிமெண்ட் மீதான பங்குகளை விலையேற்றியது பங்குச் சந்தைகள். என்.ஜி.ஓக்கள் பலவும் - உதவி நிதியில் ஊழல் செய்ததும் நடந்தது.

பேரழிவுகளின் போது. மனிதன் விழித்துக் கொள்கிறான். பிணந்திண்ணிகளும் கூடுகின்றன.

உத்தர்கண்ட் - பலிகள் நம்மில் பலரை உலுக்கியிருக்கலாம். இடந்த அழிவுகளை - இயற்கை மட்டும் தீர்மானிப்பதில்லை.

உலகின் 99 சதவீத கனிமச் சுரங்கங்கள் - வெறும் 2 சதவீத மக்களின் தேவைகளுக்காக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. - நமக்கு வசதிகள் தேவை - ஆனால், அதில் ஒரு திட்டமிடல் வேண்டும். லாபத்தை மட்டும் நோக்கமாய்க் கொண்ட இன்றைய சமூக அமைப்பால் - அந்த நிதானமான சிந்தனையை மேற்கொள்ள முடிவதில்லை.

”இமயச் சாரலில் ஒருவன் இறுமினால்
குமரி வாழ்பவன் மருந்து கொண்டோடுவான்”
-என்றார் பாரதிதாசன்

#சிந்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள். - முடிந்தவர்கள் மீட்பு உதவிகளுக்கும் கரம் நீட்டுங்கள்.

உலகின் மிகப்பெரிய அந்தரங்க வியாபாரம் ... !

கிட்டத்தட்ட எல்லா இணைய
தளங்களும்...
உங்கள் அந்தரங்கம் – ஒரு நிறுவனத்தின் சொத்தாக மாறும்போது  அதன் மீதான வணிகம் தவிர்க்க முடியாததாகிறது. ’மாற்று’ தனது இதழியல் சேவையை தொடங்கியபோது, அது ஒத்த சிந்தனை கொண்ட எழுத்தாளர்களின் கூட்டமைப்பாகத்தான் இருந்தது. ஆனால், இணையம் வெறும் எழுத்துக்களால் ஆன ஊடகம் மட்டுமல்ல. இங்கே பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப பணியாளர்களின் உழைப்பும் சேர்ந்தே நமக்கு சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.

மாற்றுவில் எழுதும் தொடர் கட்டுரையை வாசிக்க ... இங்கே சுட்டுங்கள்

Thanthi dead. Come Immediately!

தந்தி அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்தேன் - வரும் 17 ஆம் தேதியோடு இந்த உறவு முடிந்ததா? - ஆம் ! தந்தி வழக்கு ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற பதில் கிடைத்தது.

அழுத்தமான உணர்வுகளைத் தாங்கி இரகசியங்களோடு நம் காத்திருப்புக்கு சுவை சேர்த்ததும் - தபால்காரரோடு ஸ்னேகிதம் வளர்க்கச் செய்ததுமான தபாலின் நிலை இன்று - நோட்டீஸ் விநியோகம் போல ஆகிவிட்டது.

மாதம் முதல் தேதி தவறாமல் வந்துவிடுகிறது - தொலைபேசிக் கட்டணப் பட்டியல், பிறந்த நாளுக்கு துணியெடுக்கவும், திருமண நாளுக்கு நகை வாங்கவும் மறக்காமல் நினைவூட்டுகின்றன - வணிக நிறுவனங்கள்.

தந்தி - அவசரச் செய்திகளைத் தாங்கியபடி நம் கிராமங்களை வலம்வந்துகொண்டிருந்தது. காற்புள்ளியை இடம் மாற்றிவைத்தால் - பொருள் மாறிவிடும் என்றெல்லாம் எச்சரிக்கை உணர்வோடு கையாளப்பட்டது தந்தி.

இயக்கத்தின் பணத்தை சிக்கனமாக செலவளிப்பதில் கவனமாக இருக்கும் தந்தை பெரியார் - 'tolded' என்ற வார்த்தையை உருவாக்க தந்தி காரணமாக இருந்தது.

தந்தி - இனி கதைகளில் புழங்கப்படும். - தந்தி இனி தொலைத்தொடர்பு மாணவர்களுக்கு புத்தகங்களில் ஒரு கேள்விக்கு பதிலாக மாறிப் போகலாம்.

அன்பெனும் அடக்குமுறைக் கருவி ? (சாதி கொடுக்கும் விநோத விளக்கம்)

”தருமபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடிகள்” - என்று குறிப்பிட்டு ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. கலவரத்துக்குக் காரணமாக அமைந்தவர்கள் - மனித மாண்புகளை அறுத்த சாதி வெறியர்களா? அல்லது காதலா?சமூகத்தில் ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துதான் வருகின்றன. ஆனால், தருமபுரி சம்பவத்தில் - சாதி மாறிய திருமணத்தை செய்ததற்காக - ஒரு கிராமத்தையே அழித்து நிர்மூலமாக்கிய அநீதி வெளிப்பட்டது.மேற்கண்ட தலைப்பை பயன்படுத்திய பல செய்திகளும் - கலவரத்துக்கு காரணமான காட்டுமிராண்டித்தனத்தை குற்றம் சொல்லவில்லை. மாறாக, அந்தக் காதலர்கள் இதையெல்லாம் சிந்திக்காமல் திருமணம் செய்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறது.
---

சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.

விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.

அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---
சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.

விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.

அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார்.

பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.

நீதிபதி ‘இளவரசனைப் பிரிகிறீர்களா?’ என்று கேட்டதற்கு திவ்யா..’பிரியவில்லை. ஒரு மாத காலத்துக்கு தாயுடன் வாழ விரும்புகிறேன். ’’ என்று குறிப்பிட்டார். (தகவல்: செய்தியாளர் கவின்மலர்) ஆனால், உடனே அந்த காதலர்கள் பிரிந்துவிட்டதாக சிலர் பறைசாற்றி - காதலைச் சாடி எழுதத் தொடங்கிவிட்டனர். தந்தையை இழந்துள்ள அந்தத் தாயின் மீதான அன்பும், கணவனின் மீதான அன்பும் ஒரு பெண்ணை என்ன சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நாமறிவோம்.

ஆனால், சாதியை அல்லாது அன்பையே வன்முறைக் கருவியாகப் பார்க்கும் சில நபர்கள் இந்தப் பிரிவை பொதுத் தளத்தில் விவாதப் பொருளாக்கி மகிழ்ந்து குதிக்கிறார்கள். அவர்களின் அடிப்படை குறித்து ஆராயத் தேவையில்லை.

#காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !

கெளரவம் - நல்ல சினிமா ...

சண்முகத்தின் பிணமும், ராஜேஷ்வரியின் எழும்புக் கூடும் நடத்தும் திருமண வாழ்க்கைதான் கதை ... ஒரு காதல் கதையென்று இந்தப் படத்தை எடுத்துக் கொண்டால் - இப்படித்தான் சொல்ல முடியும். ஆனால், இதுவொரு காதல் கதை மட்டுமல்ல - சமூகத்தின் கெளரவம் சாதியில் இல்லை, சாதி எதிர்ப்பில் இருக்கிறது என உரக்கச் சொல்லியிருக்கிறது இந்தப் படம் ...

பார்க்க வேண்டிய படம். இதுபோன்ற முயற்சிகள் தமிழகத்தில் மிகக் குறைவு - ஒருவேளை இந்தப் படம் தோற்றுவிட்டால் - மண்டையில் சிந்தனையில்லாத இயக்குனர்கள் சிலர் மசாலா படங்களை எடுத்து விட்டு “தமிழக மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்” என்று கூச்சமின்றி அறிவிக்கும் ஆபத்து இருப்பதால் - படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நல்ல சினிமா பார்க்கிறவர்களின் கடமை.

சரி இனி விமர்சனத்துக்கு செல்லலாம்.

கதை: தொலைந்து போன நண்பனைத் தேடும் அர்ஜுன் - இந்தியாவின் நரம்புகளெங்கும் பீடித்திருக்கும் சாதியெணும் புற்று நோயின் கொடூரத்தை உணர்கிறான். மனிதநேயம் உந்தித்தள்ள உண்மையைத் தேடும் பயணத்தை தொடங்குகிறான். இது கதைதான் என்றாலும், ஒரு இளைஞனாக பெருமையாய் உணரச் செய்கிறது. ஆம், நாங்கள் இந்த இந்தியாவை வடிவமைக்கப் பிறந்தவர்கள் என்று உரக்கச் சொல்ல வைக்கிறது.

தனக்கு மட்டும் விளக்கேற்றிக் கொள்வது இரவிலிருந்து முழு விடுதலையைக் கொடுத்துவிடாது. விடியல் தாமதமானால், சூரியனைக் கண்டறியவேண்டியதும் நம்முடைய வேலைதான்.

கிராமமாகவும், சேரியாகவும் இரு வேறு வாழ்க்கைகள் - ”ஒரு கிராமம் கெடக்கு ... பச்சையுடுத்தி வயலுக, அச்சமுடுத்தி பயலுக ...” என்ற பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. சுடுகாட்டு அமைதியை எப்படி அமைதியென்று சொல்லுவது?

பிராமண இளைஞராக வரும் நாயகனின் தோழனும், வக்கீலாக வரும் நாயகியும் நல்ல பதிவுகள்.

கெளரவத்துடன் சாதி பிணைக்கப்பட்டு ஒரு சமூக அழுத்தமாக மாற்றப்பட்டிருப்பதைக் காட்டுகிறார்கள். தனக்காக இல்லையென்றாலும், தன் சாதி சனத்துக்கு முன் தன் கெளரவத்தை நிலைநாட்டவே மனிதத்தை இழந்து - பின் உள்ளுக்குள் அழுது சாகும் பசுபதியின் பாத்திரமும் நல்ல விதத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

நகரங்களில் சாதி இல்லையா? - இந்தக் கேள்விக்கு பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் பதில் சொன்னார் - “சினிமாத் துறையிலும் கூட சாதி இருக்கிறது” என்று ... படத்தில் அந்தப் பதிவு இல்லையென்பது குறை.

தலித்துகளும் - பிற்படுத்தப்பட்டவர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சித்தரிப்பதை தவிர்க்க பல காட்சிகள் வசனத்தில் மட்டும் சித்தரிக்கப்படுகின்றன. (இதையே காரணமாக வைத்து படத்தில் நாடகத் தன்மை மிகுந்திருப்பதாக சிலர் சொன்னாலும்) இயக்குநர் ராதா மோகன், அறிந்தேதான் இதைச் செய்திருக்கிறார். - மனசுகள் திருந்த வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.

கொல்லப்பட்ட பெண்ணின் அண்ணி, அம்மா - என சாதியின் முதல் இலக்குகளாகும் பெண்களின் - சாதி எதிர்ப்பு நிலைப்பாடுகள் யதார்த்தம். பக்குவமான பதிவு.

படம் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. “எது கெளரவம்? வாழ்வதால் வருவதா? பிறப்பால் வருவதா?. அது எப்படி வருகிறதென்பதை நாம் அறிவோம். ஆனால், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களுக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும்.


சாதி ஒரு பிரச்சனைதான், தீண்டாமை ஒரு குற்றம்தான் அதை எப்படி ஒழிப்பது என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் சாதி ஒரு பிரச்சனை என்பதைப் பேசத் தொடங்குங்கள் - சமூகத்தில் ஒரு மாற்றத்தை சாத்தியப்பட வைக்க - மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைப்பது மிக முக்கியம் என்று பதில் சொல்வேன்.

பல ஆண்டுகளாக செய்துவந்த விவாதத்தின் பலன் இப்போது தெரிகிறது. சினிமாவில், சமூகத்தில் பல சாதி எதிர்ப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். நல்ல தொடக்கம் ...

சேர்மன் மாவோ - நாம் விழித்தெழுந்து விட்டோம்!


சீனாவின் புரட்சி நாயகர் மாவோவின் வரலாற்றுப் புத்தகம் படிக்கக் கிடைத்தது. 1919 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையிலிருந்து சிறு பகுதியை இங்கே தருகிறேன் ...
  • ----
  • நாம் விழித்தெழுந்து விட்டோம்! உலகம் நம்முடையது, அரசு நம்முடையது, சமூகம் நம்முடையது. நாம் பேசாவிட்டால் வேறு யார் பேசுவார்கள்? நாம் செயல்படாவிட்டால் வேறு யார் செயல்படுவார்கள்?...
  • கருத்தியல் ரீதியிலான விடுதலை, அரசியல் ரீதியிலான விடுதலை, பொருளாதார விடுதலை அனைத்தும் எந்த நரகத்தின் அடியாழத்தில் இதுவரையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவோ. அந்த நரகத்தின் அடியாழத்திலிருந்து வெடித்துக் கிளம்பி நீல வானத்தைக் காண துடித்துக் கொண்டிருக்கிறன.
  • நமது மக்கள் மிகப்பெரிய உள்ளாற்றலைக் கொண்டவர்கள். ஒடுக்குமுறைகள் மிகவும் தீவிரமாக இருக்கிறது. அதற்கான எதிர்வினையும் மிகப்பெரிய ஆற்றல் மிக்கதாக இருக்கிறது. நீண்ட நாட்களாக இவை தொடர்ந்துகொண்டேயிருப்பதால் - விரைவிலேயே ஒரு வெடிப்பு நிகழத்தான் போகிறது. 
  • ஒன்றைமட்டும் என்னா துணிந்து சொல்ல முடியும். ஒருநாள் மற்றெந்த மக்களைக் காட்டிலும், முழுமையான மாற்றத்தை நமது மக்கள் துணிந்து செய்யப் போகிறார்கள். மற்றெந்த மக்களின் சமூகத்தைக் காட்டிலும் நமது சமூகம் பிரகாசமானதாக இருக்கப் போகிறது. 
  • முழு வலிமையுடன் நாம் அனைவரும் முன்னேற வேண்டும். நமக்கான பொற்காலம், கீர்த்தியுடன் சிறப்பு வாய்ந்த காலம் நமக்கு முன்னால் இருக்கிறது.

இதனை ஒரு தீர்க்க தரிசனமாக நினைத்து இங்கே பதியவில்லை. மாறாக, இந்தியாவைப் போலவே ஒரு மாபெரும் தேசத்தின் புரட்சியை சாதித்துக் காட்டிய இயக்கம் - ’அரசியல்’, ‘கருத்தியல் (மதம், இனம் உள்ளிட்டு பிற பிரிவினை/ஆதிக்க சிந்தனைகள்)’, ‘பொருளாதார’ அடிமைத்தனங்களை ஒரே நோக்கோடு எதிர்த்தென்பதை இந்தக் கூற்று வெளிப்படுத்துகிறது.

மேலும், மக்கள் மீது அசராத நம்பிக்கை கொண்டிருந்த சீன கம்யூனிச இயக்கம் - மேற்கண்ட மாவோவின் மேற்கோள் எழுதப்பட்டு 30 ஆண்டுகளில் புரட்சி விடியலை (1949) எழுதியது. - 30 ஆண்டுகள் ஒரே நோக்கோடு நடைபெற்ற மக்கள் இயக்கம் அது...

# இந்தியாவைக் கட்டமைக்கும் விவசாயிகளின் குடிசைகளிலும், தொழிலாளர்களின் குடியிருப்புகளிலும் - புரட்சிக்கான அக்கினி விதை கனன்றுகொண்டுதான் இருக்கிறது. ஒரு நாள் நம் தேசத்தின் எழுச்சியை அது சாதிக்கும். மேன்மையுற்ற இந்தியாவை நாமும் பெற்றெடுப்போம் !

Labels