ஆம் ஆத்மி - எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

ஆம் ஆத்மி - விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியல்ல. ஆனால் எந்த நடவடிக்கையை விமர்சிக்கிறோம் என்பதில், விமர்சகளின் சாயம் வெளிப்படுகிறது.

மின் கட்டணக் குறைப்பு, தண்ணீர் வியாபாரத்திற்கு கடிவாளம், அந்நிய மூலதனத்திற்கு அனுமதி மறுப்பு, ஊழல் எதிர்ப்பாளர்களை பாதுகாத்தல், வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கைகளை, ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் புதிய அந்தக் கட்சி செய்துள்ளதை வரவேற்க வேண்டும்.

ஆனால், மக்களுக்கு சுமை குறைப்பதை ஊடகங்கள் சாடியதும், சில அமைச்சர்கள் - ஊடகங்களுக்கு பணிந்து போயினர். தனக்கு இதுதான் கொள்கை என்று திடமாகச் சொல்லாத அவர்களின் இந்தப் போக்கு சரியானதில்லை.

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மத்தியிலும் களம் காண நினைப்பது தவறில்லை. அதற்காக 'சாதிப் பஞ்சாயத்துகள்' சரியாக நடக்கின்றன என்ற ரீதியில் கருத்து சொல்வது சந்தர்ப்பவாதமே அன்றி அறிவுடைமை அல்ல.

அடுத்தது - இன்றைக்கு தில்லி காவல்துறை கண்டித்து கெஜ்ரிவால் தர்ணாவில் இறங்கியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மறுப்பது மத்திய ஆட்சியாளர்களின் தவறான போக்காகும். தில்லி அரசின் கையில் காவல்துறை இல்லை என்ற நிலை சரியில்லை. இதற்கு எதிரான போராடுவது கூட்டாட்சிக்கு அவசியமானது.

ஆனால், எந்த வழக்கும் பதியாமல், நள்ளிரவில் திடீர் சோதனை, அமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக யாரையும் விசாரிப்பதென்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடைமுறை அல்ல. மேலும், கருப்பர்கள், ஆப்ரிக்கர்கள் என்றாலே போதை வியாபாரிகள் என்கிற பொதுப்புத்திக்கு ஆட்படுவதெல்லாம், ஏற்க முடியாதது.

தத்தி தத்தி நடக்கும் ஆம் ஆத்மியில் நேர்மையாளர்களும் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகளும் உள்ளனர். நல்ல விமர்சனங்கள், பக்குவப்படுத்தலாம். பாஜகவோ, காங்கிரசோ அந்த நோக்கத்தில் தங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில்லை.

# எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels