சாக்கடையில் விழுகும் பந்துகள் ...

சாமானிய டைரி 3:

ஒரு பிராமண நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். ஆம் நான் பேசும்போது அவர் பிராமணராக நான் என்னை உயர்வாக நினைத்துக் கொள்வதில் என்ன தவறு ? என்ற எண்ணத்தில்தான் இருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நடுத்தர வர்கம், ஒரு நிர்வாகத்துக்கு பணிந்து வேலை செய்பவரும் கூட.

நான் சாதிப் படிநிலைகள், படிநிலைகளைப் பாதுகாக்கும் தீட்டு, தீண்டாமை, அகமண முறை உள்ளிட்ட கற்பிதங்களை விளக்கினேன். அப்போது அவர் எனக்கு ஒரு உதாரணம் சொன்னார். "சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாடுவேன். பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால், நான் ஒதுங்கி நின்றுகொண்டு, என் நண்பனை எடுக்கச் சொல்வேன். என் கை அழுக்காகாமல், விளையாட்டும் தொடரும்... இது என் இயல்பு." என்று சொன்னவர் - அந்த சாமர்த்தியத்தில் என்ன தவறு என்று கேட்டார்.

நான் என் கிரிக்கெட் விளையாட்டு அனுபவத்தைச் சொன்னேன், "நாங்கள் ஆளுக்கு ஒரு குச்சியை எடுப்போம். பந்துக்கு முட்டுக் கொடுத்து, மெதுவாக சாக்கடையிலிருந்து வெளியே எடுப்போம். புல் மேட்டில் உருட்டி அதன் சகதியை அகற்றுவோம். பின் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பந்தை சுத்தமாக்கி எல்லோரும் விளையாடுவோம். கூட்டு உழைப்பின் மகத்துவத்தால் எங்கள் பிரச்சனை தீர்ந்தது. யாரும் அங்கே ஏமாளியில்லை" என்று சொன்னேன்.

சுயநல சிந்தனையின் அடிப்படையில் தீர்வுகளை அணுகும்போது, அல்பமான தீர்வுகளே கிடைக்கின்றன. அதுவே தனித் தனித் தீவுகளாக மனிதர்களை மாற்றுகிறது. இன்றைக்கு நாம் பின்தங்கியதொரு சமூகமாக இருக்கிறோம்.

இணைந்த கரங்களின் வலுவே, உலகத்தின் உன்னதம் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels