உலகளாவிய உரிமைக்குரல் - 2

Download pdf : - Go to page:  I 1 I I 2 I I 3 I

பிரஞ்சு புரட்சியை சித்தரிக்கும் ஓவியம்
இரண்டாவதாக, இந்த மூன்றுபுத்தகங்களிலும் நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மனதை நெருடும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.  மன்னர்களையும் மகாராஜாக்களையும் துதிபாடி மக்களாட்சியின் மகத்துவர்களாக சிததரிக்க முயலும் இந்தக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் கோரமுகங்களை நினைகூர்வது நமது கடமை.
பிரஞ்சுப்புரட்சி புத்தகத்தில், நீதிபதிகளுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 400 வகையான சட்டங்கள, சட்டத்திற்கு மேலே ஆளும் வர்க்கம் இருந்தது. அனைத்து சட்டங்களும்  மூன்றாவது எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட 92 சதமான மக்கள் மீதான அடக்குமுறைக்கே பயன்பட்டது. சிறிய குற்றங்கள் அல்ல தவறுகளுக்குகூட சக்கரத்தை ஏற்றி எலும்பை முறிப்பது, கையை நறுக்குவது, காதுகளை அறுப்பது, என கொடிய தண்டனைகள் சாதாரணமாக நிறைவேற்றப் பட்டது.

தவளைகள் கத்துவதால் நிலபிரபுக்களின் தூக்கம் கெடுகிறது.விவசாயிகள் இரவெல்லாம் தவளைகளை விரட்டிட வேண்டும். மீறி தவளைசத்தம் கேட்டால் விவசாயிகள் காது அறுக்கப்படும். கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள். பட்டினியில் மடிந்து கொண்டிருந்த மக்கள் ஊர்வலமாக சென்று உணவுகேட்டபோதுஇதோஇங்கே இருக்கிற புல்லைத் திண்ணுங்கள் என்று கூறிய நிலபிரபுத்துவ அதிகாரிகள். இந்தியாவில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், எலி திண்ணாலும் திண்ணட்டும, அழுகி வீணாகினாலும் ஆகட்டும் ஏழைகளுக்கு உணவளிப்பது என் வேலை அல்ல என்று மன்மோகன் சிங் அடம்பிடித்தது  லூயி மனனனை நமக்கு நினைவூட்டுகிறது,
இங்கிலாந்தில் கிராமங்களில் கோட்டை போன்ற இடங்களை உருவாக்கி விவசாயிகளை அதற்குள் வசிக்கவும் கட்டாயப்படுத்தினர்.வேலைசெய்யும் இடத்தை   உருவாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து கல்உடைத்தல், எலும்புகளை பொடியாக்குதல், போன்ற கடின வேலைகளை கொடுத்தனர். கால்வயிறு உணவளிததனர். பட்டினி தாளாமல் அவர்கள் எலும்புளில் இருந்த மஜ்ஜைகளை நக்கித்தின்றனர். பட்டினியால் மடிந்தனர். ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் அடிமைகள் மற்றும் சார்மன்னனின் அடக்குமுறைகள் தொழிற்கூடத் திலும் கல்லூரிகளிலும் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது. தூக்குமேடைகள், நாடுகடத்தல் என்பது சாதாரணமாக நிறை வேற்றப்பட்டுள்ளது.
அயர்லாந்து  விடுதலைப்போராட்ட புத்தகத்தில்  நிலபிரபுத்துவ கொடுமைகளை சகிக்கமுடியாத வகையில் உள்ளது.அவர்கள் காட்டை அழித்து உருவாக்கிய விளைநிலங்களை சிதைத்தனர்.காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றி அம்மக்களை விரட்டினர். கம்பளி தொழிலுக்காக 96 லட்சம் ஆடுகளுக்காக 11 லட்சம் அயர்லாந்து மக்களை விரட்டியடித்த கொடுமைகளை மார்க்ஸ்  அம்பலப்படுத்தியுள்ளார். கொடூர சுரண்டலால் பஞ்சம். பஞ்சத்தால் 20 சதம் மக்கள் மரணம்.
மூன்றாவதாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் மேல்கட்டுமானமாக இருந்த மதம் பொருளாதார சுரண்டலின் கருவியாக செயல்பட்டது என மார்க்ஸ் கூறியுள்ளார்.இதற்குரிய பலதகவல்களை இப்புத்தகங்களில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பிரஞ்சுபுரட்சி புத்தகத்தில் மதக்குருக்கள் முதலாவது எஸ்டேட் என்ற முதல் நிலையில் இருந்தன்ர்.இவர்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். சர்ச்சின் வருமானம் முழுவதும் ஆர்ச்பிஷப்களுக்கும், பிஷப்களுக்குமே சென்றது.இத்துடன் இவர்களின் அனைத்து சொத்துக்களுக்கும் லூயிமன்னன் வரிவிலக்கு அளித்திருந்தான்.ஒரு ஆர்ச்பிஷப்பின் வருமானம் மூன்று லட்சம் டாலர். இருநூறுபேர்கள் உண்ணும் உணவுக்கூடம்.நூற்றி எண்பது குதிரைகள் என தனிராஜியமே நடத்தினர். சர்ச்கள் தனியாக விவசாயிகளிடம் வரிவசூல் நடத்தினர், சுங்கச்சாவடிகள் அமைத்து வணிகர்களிடம் வரிவசூலித்த னர்.தனி நீதிமன்றங்கள் தர்பார்கள் நடத்தினர் என்றால் மதத்தின் பங்கை  பொருளாதார சுரண்டலில் அறியமுடியும்.
இங்கிலாந்தில் மடாலயங்கள் ஒவ்வொரு பாதிரியாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.இது பேரிஷ் என்று அழைக்கப்பட்டது. இற்றின்கீழ் நிலங்கள் இதர சொத்துக்களும் இருந்தன. இவைதவிர வேலைசெய்யும் இடம் என்ற குழந்தைகளையும் பெண்களையும் கசக்கிபிழியும் இடமும் இவர்களுக்கு கீழ் செயல்பட்டது.இந்த பேரிஷ் என்ற பகுதியில் கிடைக்கும் வருமானத்தை மூன்றில் ஒருபகுதி ஏழைமக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்  என்ற விதிமுறைகள்கூட அப்பட்டமாக மீறப்பட்டன.
நான்காவதாக, அறிவுஜீவிகள் மற்றும்  கலை இலக்கிய படைப்புகள் பங்கு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிரெஞ்சு புரட்சியில் ரூசோ, மாண்டஸ்க்கியு, வால்டர், தீதரோ சிந்தனைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. வால்டர் மற்றும் தீதரோ இருவருக்ககுமான  வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ள முறைகள் அதாவது  சொல்லவந்த பொருளோடு இணைந்தே செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. வால்டேர் மதபீடங்களை கடுமையாக சாடினார். ஆனால் மதத்தின் இருத்தலை நியாயப்படுத்தினார்.தீதரோ மதபீடங்களையும், மதத்தையும் சாடியதுடன் பொருள்முதல்வாத சிந்தனைகளுக்குமுக்கியத்துவம் கொடுத்தார்.எனவேதான் இவரின் கலைக்களஞ்சியத்தை மன்னன்  தீயிட்டுக் கொளுத்தினான். இந்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஷ்யப்புரட்சி புத்தகத்திலும் அறிவிஜீவிகளின் பங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாசனஇயக்கத்தில்  இவர்களின் பங்கை ஓரளவு குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
இம்மூன்று புத்தகங்களிலும் கையாளப்பட்ட விஷயங்கள் மாறுபட்டகாலம், இடம், வர்க்க நலன்கள் என்று இருந்தாலும், சாதாரண மற்றும் தீவிரவாசகர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மூன்றிலும் படம்பிடித்துகாட்டப் பட்டுள்ளது ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் மக்களை சுரண்டியதில் மதத்தின் பங்கு போதுமாக அளவு இடம்பெறவில்லை.கூடுதலாக,வந்திருக்கலாம். நரோதினிய தோற்றச்சூழலை சரியாகவே சுட்டியிருக்கும் நிலையில் அதன் தாக்கம் ரஷ்யசமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் என கருதுகிறேன்.
அயர்லாந்து-பாலஸ்தீனம்
பூர்வீகம் முதல் புத்தகம் எழுதப்படும் காலம்வரை முக்கியநிகழ்வுகள்,பார்வைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அயர்லாந்து இங்கிலாந்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீனம் இங்கிலாந்தி னால் ஏமாற்றப்பட்டது
 நான் உலகத்தால்  ஏமாற்றப்பட்டு  வருகிறேன்,  
 நான் கடவுளால்    ஏமாற்றப்பட்டு   வருகிறேன்,                                
 நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு  வருகிறேன்,
என்ற கவிதை பாலஸ்தீனம் பற்றி இன்றைய காட்சிகளுக்கும் சாட்சியாக விளங்குகின்றது. அயர்லாந்து என்ற நாட்டை இங்கிலாந்து தன்நாட்டுடன் இணைத்துக் கொண்டது.இன்றும் ஒருபகுதியை இணைத்தே வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாட்டை  உருவாக்கியது. இவை எதிரும் புதிருமாக தோன்றலாம் ஏகாதிபத்தியத்தின் கொள்கை இதுதான். இயற்கையை, உழப்பை, ரத்தத்தை, சரீரத்தை சுரண்டுவது என தனது நலனுக்கு எது உகந்தோ அதுதான் சட்டம்.அதுதான் நீதி. அயர்லாந்து இங்கிலாந்தின் முதல் காலனி நாடு என்று எங்கல்ஸ் கூறினார்.இங்கிலாந்தின் நிரபிரபுத்துவம்அயர்லாந்தை பொருளாதார ரீதியாக சுரண்டியது. தொழில்வளர்ச்சிக்கும், முதலாளித்துவ மூலதன திரட்சிக்கும்  அது உதவியதால் முதலாளித்துவம் பயன்படுத்தியது. அயர்லாந்து பற்றி காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் கருத்துக்கள் மிகமுக்கியமானது ஆகும். எந்த ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கமும் தன் நாட்டின் ஆளும் வர்க்கம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க கூடாது என்று கூறினர். அயர்லாந்தை அடிமைப்படுத்துவதன் மூலமாக இங்கிலாந்தின் பிற்போக்காளர்கள்  பலமடைந்ததுடன் அதைப்பேணி காத்தும் வருகின்றனர்  என்று கூறினார். ஏங்கல்சின் மனைவி மேரிபர்ன்ஸ் அயர்லாந்துக் காரர்.இவர் இப்பிரச்சனையில் மிகுந்த ஆவர்வம் செலுத்தியதாலும்,இவர் இறந்த பிறகு ஏங்கல்ஸ் திருமணம் செய்துகொண்ட இவரது தங்கை லிஸ்ஸியும் இப்பிரச்சனையில் ஆர்வம் செலுத்தியதால்  ஏங்கல்ஸுக்கு இப்பிரச்சனையை புரிந்துகொள்வது எளிதாக  இருந்தது. ஜரிஷ் என்ற தேசிய இனத்தை அடிமையாக்கி சமூகஒடுக்கு முறைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்து. அதே நேரத்தில் உருவாகிவந்த அரபுதேசிய ஒற்றுமையை நசுக்கிடயூதஇனத்தை மூர்க்கத்தனமாக பயன்படுத்தியது. நாகரீகம் தெரியாத அயர்லாந்து மக்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தருகிறோம் என்று கூறினர்.இதையே இந்தியாவிற்கும் கூறியதை நாம் மறக்க முடியாது. இதையேதான் பாலஸ்தீனத் திற்கும் கூறினர்.ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் நாகரீகம். ஏகாதிபத்தியவாதிகள்  பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகன்கள்.பாலஸ்தீனத்தில்  யூதத்தையும் இஸ்லாத்தையும் மோதவிட்டனர். லெபனானில் கிறிஸ்த்துவத்தையும் இஸ்லாத்தையும், இந்தியாவில் இந்து முஸ்லீமையும் மோத விட்டனர். அயர்லாந்திலோ கிறிஸ்துவமதப்பிரிவுகளில் உள்ள கத்தோலிக்கர்களையும் பிராட்டஸ்டன்ட்களையும் மோத விட்டனர். அயர்லாந்தில் பட்டினியாலும், படுகொலைகளாலும் இருபதுசதம் மக்களை வேட்டையாடினர் .பாலஸ்தீனத்திலோ முதல் பத்தாண்டுகளில் (1921-31)மட்டும் ஜம்பதாயிரம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். இன்றுவரை இது பலலட்சங்களை தாண்டி மக்கள் தொகை  சரிபாதியாக குறைந்து விட்டது. இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டங்களும் பன்முகத்தன்மை கொணடதாக இருக்கிறது. இன்றுவரை இந்த போராட்டங்கள் உயிர்த்துடிப்போடும், உத்வேகம் குன்றாமலும் நடைபெற்று வருகின்றது. இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டமும் நான்கு முக்கிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றது.வெகுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், ஆயுதம் தாங்கிய எழுச்சியாகவும், உண்ணாவிரதம் இருந்து உயிர்நீக்கும் போராட்டமாகவும், சிலநேரங்களில் தனிநபர் பயங்கரவாத மாகவும் நடைபெற்று வருகின்றது. இப்போராட்டங்கள் பலநாடுகளின் விடுதலைப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது. தாகூர், பாரதியார், அரவிந்தகோஷ், சரோஜினிநாயுடு ஆகியோர் இப்போராட்டங் களை தங்களது கவிதைகளில் வடித்தனர். வியட்நாம் புரட்சித்தலைவர் ஹோ-சி-மின் அயர்லாந்து போராட்டத்தால் ஆகர்ஷ்சிக்கப்பட்டவர்களில் ஒருவர். காந்தி, நேரு இருவரும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை வலுவாக ஆதரித்தனர்.குறிப்பாக காந்தி அம்மக்களின் போராட்ட முறைகள் தனது கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும் அதை ஏன் ஆதரிக்கிறார்  என்ற விளக்கம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது மிக முக்கயமான பகுதியாகும். பாலஸ்தீன மக்களின் போராட்டத்தினூடே இந்திய அரசின் கொள்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 
1947-ல் அமைக்கப்பபட்ட சிறப்புக்குழுவால் பாலஸ் தீனம் இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 1949-ல் இஸ்ரேல் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது. ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கோரமுகம் எடுத்துள்ளது. இஸ்ரேல் இன்றும் மூர்க்கத்தனமாக தனது தாக்குதலை நடத்துகின்றது.இந்தியா இன்று போராடும் மக்களை கைவிட்டு இஸ்ரேல் நாட்ட் தனது அச்சு நாடாக்கி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுவிட்டது. ஆனால் பாலஸ்தீன மக்களோ குண்டுமழைகளுக்கும்.  வெடிச்சத்தங்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்நடுவிலிருந்தும், வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் எழுந்து வருகின்றனர். அயர்லாந்து மக்கள் இங்கிலாந்து வசமுள்ள பகுதியை  விடுவிக்க போராடி வருகின்றனர். இவை இரணடும் புத்தகம் அல்ல. நிகழ்காலத்தின் போராட்ட களம். இக்களத்தில்  இறங்க வேண்டும், சினமும், சீற்றமும்  கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான மார்க்கம் புரிபடும.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels