உலகளாவிய உரிமைக்குரல் - 1

Download pdf : - Go to page:  I 1 I I 2 I I 3 I

 
என்.ராமகிருஷ்ணன் எழுதிய,
மகத்தான பிரெஞ்சு புரட்சி,
ரஷ்ய புரட்சி புதிய தரிசனம்,
சாசன இயக்கம்,
உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு,
அயர்லாந்து எண்ணூறு ஆண்டுகள் விடுதலைப்போர்,
நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள்
ஆகிய ஆறு நூல்களை முன்வைத்து 
நடைபெற்ற தமுஎகச தென்சென்னை 
மாவட்ட ஆய்வரங்கில் சமர்ப்பித்தது
         கடவுள்களால் கடந்த காலத்தை அழிக்க முடியாது. அத்தகைய வலிமை அவர்களுக்கு கிடையாது என்று ஆப்பிரிக்க அறிஞன் அகதான் கூறினான். வரலாறு அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த கருத்தின் அர்த்தமாகும். வெற்றி பெற்ற மன்னர்கள்.தலைவர்கள் கடந்தகால வரலாற்றை அழித்துவிட்டு தங்களது வசதிக்கேற்ற வரலாற்றை எழுதுவர். இந்தவித அழிப்புக்கு எதிரான தொடர்ந்து வரலாற்றினை பாதுகாக்கும் போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையிலேயே மேற்கண்ட புத்தகங்களையும் ஆசிரியர் படைத்துள்ளார். வரலாறு என்றால் மன்னர்கள், தளபதிகள், தலைவர்களின் சாதனைகள் என்ற கருத்துமுதல்வாத சித்தாந்தங்கள் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளும் வர்க்கமும் இதையே நிலைநாட்ட விரும்புகிறது. ஆசிரியர் மேற்கண்ட புத்தகங்களில் மக்களின் வரலாற்றை, அக்கால பொருள் உற்பத்தி முறையின் பின்னணியோடு விளக்கியுள்ளார். இது நாள் வரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்ற மார்க்சிய பார்வையுடன் கூடிய பதிகவுளை நிலைநிறுத்தியுள்ளார்.
முதலாளித்துவ வர்க்கத்தினர் அனைத்தையும் ஒரு விற்பனைக்கான சரக்காக மாற்றி வருகின்றனர். வரலாற்றை எழுதுவது என்பதையும் அவ்வாறே செய்து விடுகின்றனர் என்று ஏங்கெல்ஸ் எழுதினார். இந்தியாவில் இன்றைய ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவும், தக்க வைக்கவும் நடைபெறும் அரசியல் வியாபார சந்தையில் வரலாற்று  வணிகம் அமோகமாக விலைபோகின்றது. வரலாற்றின் வடுக்கள் வலிமையானது மட்டுமல்ல எதிர்கால திசையை தீர்மானிக்க கூடியதுமாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறிந்த கொள்ளாமல் எதிர்கால பாதையின் இலக்கை எந்த ஒரு இயக்கமும் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை அணுகும் முறை, ஆய்வு செய்யும் முறை, பயன்படுத்தும் முறை முக்கியமான ஒன்றாகும். அதைவிட வரலாறு யாரால் எழுதப்படுகின்றது? யாருக்காக எழுதப்படுகின்றது என்பது பிரதான கேள்வி? வெற்றி பெற்றவர்களாலும், உயர்குடி மக்களாலும், அரசு சார்ந்த வரலாறுகளும்தான் இன்று அதிகமாக போதிக்கப்படுகின்றது.    வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்காக இந்த என் மக்களின் கதை உதவிடும் என்று நம்புகிறேன் என்று அலெக்ஸ்ஹேலி ஏழு தலைமுறைகள் நாவலின் கடைசிவரியில்  முடித்தான்.
இங்கே ராமகிருஷ்ணன் எழுதியுள்ள மேற்கண்ட நூல்கள் அடித்தட்டு மக்களை முன்வைத்தே பேசப்படுகின்றது. வரலாற்றாளன் நிகழ்வுகளை பதிவு செய்வான். கலைஞன் உண்மைகளை தேடுவான் என்ற கூற்றுக்கேற்ப இராமகிருஷ்ணன் வரலாற்றாளனாகவும், கலைஞனாகவும் இப்புத்தகத்தின் வழியே காணப்படுகின்றார்.நிகழ்வுகளையும் பதிவுசெய்கிறார் புள்ளிவிபரங்களையும் பதிசெய்கிறார். அதற்கு பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் அம்பலப்படுததுகிறார்.
மேற்கண்ட ஆறு தலைப்புகளில் பல புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளது. ஆனால், இந்நூல்கள் புதிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் தேவையான அளவு விஷயதானங்களையும், வாசிப்பு தன்மை குன்றாமல் கொடுத்துள்ளார்.
வரலாற்று நூலுக்கு காலவரையரை மிகமுக்கியமானது.காரணம் காலமும்,அக்காலத்தில் ஏற்படும் மாற்றமும் நாம் அறியஉள்ள விஷயங்களை துல்லியமாக் நமக்கு வழங்குகின்றன. பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யபுரட்சி, சாசன இயக்கம், முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு ஆகிய நான்கு நூலுக்கும் அதற்குரிய காலத்தை அதற்குரிய பின்னனியோடு வரையறுத்துள்ளார். மற்ற இருநூல்களான அயர்லாந்து, பாலஸ்தீனம் ஆகிய போராட்டங்கள் அம்மக்களின் இருப்பிடம், உருவாக்கம் ஆகியவைகளே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், அவர்களின் பூர்வீகத்திலிருந்து காலவரையரையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட புத்தகங்களில் வர்க்க நிலைபாட்டை மட்டுமல்ல வர்க்க செயல்பாட்டை அதன் போக்கிலேயே தெளிவாக கொண்டுவந்துள்ளது சிறப்பம்சாகும். காரணம், பிரஞ்சுப்புரட்சி, சாசனஇயக்கம் ஆகியவற்றில் உருவாகிவரும் பாட்டாளி வர்க்கத்தின் இருப்பையும், செயல்பாட் டையும், நிலபிரபுத்துவ, முதலாளித்துவ மோதல்களுக்கிடையில் முழ்கிவிடாமல், புத்தகத்தில் நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக பிரெஞ்சு புரட்சியில் தலைகீழ் மாற்றங்கள், திருப்பங்கள் தேசிய சட்டமன்றம் துவங்கி நெப்போலியன் ஆட்சிக்குவரும் போது இயங்கிய டைரக்டரி வரை உள்ள செயல்பாடுகள் எந்த வர்க்க நலன் சார்ந்தது என்பதை வெளிக்கொணர்ந்து புரிய வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. புத்தகம் அதை எளிமையாகவே செய்துள்ளது.
மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கிவைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத்தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.
பிரெஞ்சுப் புரட்சி-ரஷ்யப் புரட்சி- சாசன இயக்கம். மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கிவைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத்தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.
முதலாவதாக படைப்பு சராசரி வாசகர்களை ஈர்க்க வேண்டும். அதே நேரம் தீவிரவாசகர்கள் அனுபவிக்கவும் அதில் இடங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று உம்பட்டோ எக்கோ வின் கூற்றுக்கு ஏற்ப புத்தகங்களின் பல பகுதிகள் அமைந்துள்ளது. தீவிரவாசகர்களுக்கு முழுமையாக தீனிபோடவில்லை என்றாலும் அவர்களுக்கான இடங்களும் உள்ளது.காரணம் புத்தகம் சராசரி வாசகனை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டதால்  இவ்வாறு அமைந்துள்ளது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புதியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த மூன்று புத்தகங்களிலும் காலவரிசைப்படி நிகழ்வுகளை முன்வைத்திருப்பதும், கடினவார்த்தைகளை தவிர்த்திருப்பதும் எளிய வாசிப்புக்கும் புரிதலுக்கும் உதவுகிறது. உதாரணமாக அன்றைய பிரெஞ்சுநாட்டு சமுகத்தை புரிந்துகொள்ள, மதகுருக்கள் முதல் எஸ்டேட், நிலபிரபுக்கள் இரண்டாவது எஸ்டேட், மக்கள் மூன்றாவது எஸ்டேட் என்று புள்ளிவிவரங்களுடன் விபரித்திருப்பதை குறிப்பிடலாம்.  ரஷ்ய புரட்சி புத்தகத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்கண்ட விஷயத்தை முன்வைக்கலாம். சார்மன்னன் காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறிக்கும் வகையில்  உங்கள் அறையில் எத்தனை பேர் என்ற கேள்வியுடனான தலைப்புகள். இதில் 12 பேர்கள் என்று பதில் வரும். எப்படிப்பட்ட அறை? 12 பேர்களும் ஒரே நேரத்தில் படுக்கமுடியாமல் முறைவைத்து படுப்பது, கரியும், அழுக்கும் நிறைந்த சுவர்கள், வியர்வை நாற்றம் வீசும் அறை! என்ற வர்ணனை. புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் புரட்சிக்கு பிறகு உங்கள் அறையில் எத்தனை பேர் என்றால், நான், எனது மனைவி, குழந்தைகள் என்ற பதிலுடன் புத்தகம் முடிவது சராசரி வாசகனுக்காக. இதே போன்று சாகனஇயக்கம் புத்தகத்தில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் கோரச்சுரண்டலை விளக்கிட தொண்ணூறு ஆண்டுகளில் ஒன்பது தலைமுறைகளை விழுங்கப்பட்டு விட்டன என்ற பீல்டனின் வார்த்தைகள் எளிமையானது மட்டுமல்ல வலிமையானதும் கூட.
அதே நேரத்தில் ரஷ்ய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய நரோதியம் தோன்றுவதற்காக பொருளாதார சமூகக்ரணிகளை ஆழமாகவும், சுருக்கமாகவும் (பக்.14) பதிய வைத்துள்ளதும், ரஷ்யபாராளுமன்ற (டூமா) தேர்தலில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்காமைக்கு காரணமான தந்திரங்க ளையும் விளக்கியுள்ளார்.(பக்.71) ரஷ்ய புரட்சியின்முக்கியமான தந்திரோஉபாயங்களை தவறாமல் ரத்தினச்சுருக்கமா விளக்கியுள்ளார். உதாரணமாக ரஷ்யாவில் அன்றிருந்த புரட்சிகரமான சக்திகளில் பலபிரிவுகள்,பல போக்குகள் இருந்ததால் ஆயத தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தது. எடுத்த முடிவுகள் வெளிவந்த முறைகள் புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்த லெனின் ஒரு நிமிடம் தாமதிக்காமல்,இன்றே இப்போதே, இந்த நிமிடமே தாக்குலை தொடங்குங்கள் என்ற அறைகூவல், எந்தஅளவு வெற்றிக்கு வித்திட்டது என்பதை புத்தகம் தெளிவாக தேவையான வகையில் விளக்கியுள்ள முறைகள், தீவிர வாசகர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதேபோன்று பிரஞ்சுப்புரட்சியில் முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பறிய பிறகு நடந்த தேசிய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை,தேசியபடை, ஜாக்கோபின்கள் கழகம் அதில் உருவான பிரிவுகள் அனைத்தும் ஆழமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. அன்னியநாடுகள் படையெடுத்த போது தேசிய படைகள் புரட்சிபாடல்களை பாடி அணிதிரட்டியது, போதியபாதுகாப்பு உடைகளின்றியே தொழிலாளர்கள் யுத்தத்தில் பங்கேற்றது மட்டுமல்ல பாரீஸ் தொழிலாளர்கள் மாதம் 650 துப்பாக்கிகளை உற்பத்திசெய்த நிலையைமாற்றி மாதம் 16000 துப்பாக்கிகளையும்,20000 கிலோ வெடிமருந்துகளையும் தயாரித்துகொடுத்து வெற்றிவாகைசூடினர். தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும் முதலாளிவர்க்கம் எப்படி தனது வெற்றிக்கு பயன்படுத்தி விட்டு. அவர்களை கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தது என்ற பதிவு முக்கியமானது. இதேவகையில், சாசன இயக்கத்திற்கு முன்பாக நடைபெற்ற அனை வருக்கும் வாக்குரிமை என்ற இயக்கம் தீவிரதன்மை வாய்ந்த தொழிலாளர்களின் தலைமைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிலிருந்த முதலாளிகள் பலபிரித்தாளும் காரியங்களை கையாண்டனர்.1832-க்குபிறகு தொழிலாளி வர்க்கம் தலைமையில் சாசன இயக்கம் அரசியல் இயக்கமாக வீறுகொண்டு எழுந்தபோது  அவற்றை  அடக்கியமுறையும் தொழிற்சங்கத்தை தடைசெய்து தணடித்தது,அதற்குத் தலைமை தாங்கியவர்களை விலைபேசிய தன்மைகளும், மூலதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. சாசன இயக்கத்தில் தலைதூக்கிய தார்மீககட்சியினர், பலப்பிரயோக கட்சியினர், ஜனநாயகப் பிரிவினரின் போக்குகள் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மார்க்சும், எங்கல்சும் சாசன இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி இடதுசாரி பிரிவினருடன் இணைந்து செயல்பட்டனர்.முதலாளித்துவ வர்க்கம் காலனி நாடுகளில் அடித்த கொள்ளையால், தகுதிவாய்ந்த ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உயரச் செய்தது. ஒரு பகுதி தொழிலாளர்களை வசதியானவர்களாக மாற்றியது. இதனாலும், ஒரு உறுதிமிக்க பாட்டாளி வர்க்க ஆட்சி இல்லாததாலும் சாசன இயக்கம் பின்னடைவை சந்தித்தது என்று மார்க்ஸ் கூறினார். இன்றும்கூட ஆளும் வர்க்கம் இதுபோன்ற தந்திரங்களை கையாள்வதை நாம் உணர வேண்டும்.சாசனஇயக்கம் தனிமைப்பட்டபோது சாசன கோரிக்கைகளுக்ககாக நடத்தும் அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட பொருளாதார போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் என இருவரும் கருத்து தெரிவித்தனர். இங்கிலாந்து நாடானது சாசனஇயக்கம் என்ற முதலாவது பரந்துபட்ட உண்மையான வெகுஜன மற்றும் திட்டவட்டமான அரசியலைக் கொண்ட பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தை உலகிற்கு அளித்துள்ளது என்று லெனின் மதிப்பீடு செய்தார். சாசனஇயக்கம் என்ற புத்தகத்தில் மேற்கண்ட அம்சங்கள் தீவிரவாசகர்களுக்கும் பயனுள்ளதாகும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels