Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

இணையத்தால் சாதிக்க முடிந்த ஒரு சிறு வெற்றி!


Photo: ஒரு சிறு வெற்றி ...

நாம் மனித நேயம் குறித்து பேசுவதன் வெற்றி - செயலில், செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும் என்பது என் ஆதங்கம். குறிப்பாக, தீண்டாமை எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகள், பெண் விடுதலை உள்ளிட்ட நோக்கில் பேசுகிறவர்கள் - தன் சொந்த வாழ்க்கையிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.

துபாய், ஷார்ஜாவில் நாட்டில் பணியாற்றும் Sathish Joe - ஒரு பொறியாளர். அவருக்கு கீழ் 34 தொழிலாளர்கள் உள்ளனர். முதலில் நிறைய பேசுவோம், தொழிலாளர் உரிமைகள் குறித்து எதையாவது செய்ய வேண்டுமென அக்கறையோடு பேசுவார். ஆனால், அங்குள்ள நிலைமை அதற்கு உகந்ததில்லை என்று வருத்தமும் மேலிடும்.

இந்த நிலையில், பேசிப் பேசி சோர்வுற்று - தொடர்பிலிருந்தே காணாமல் போய்விட்டார். சில நாட்கள் முன் அவரிடமிருந்து இணைப்பில் உள்ள புகைப்படம் வந்தது. அவர் பணியாற்றும் பெயின்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு 'சுவாச' காப்பு கருவி ஏற்பாடு செய்ய நிறுவனத்தில் போராடி பெற்ற அனுபவத்தைச் சொன்னார்.

சதீஸ் குவாலிட்டி கண்ட்ரோலர் - பாதுகாப்பு அதிகாரி இன்னொருத்தர் இருக்கிறார். எனினும் இதுவரை பேப்பர் மாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க் 600 டாலர்கள் வருமாம். முதலில் இந்த கோரிக்கையை வைத்தவுடன் வந்த எதிர்வினை என்ன தெரியுமா? 'உன் வேலை இது இல்லையே!' என்பதுதான். அவர், இல்லை இதுவும் என் வேலைதான் என விளக்கம் கொடுத்து - இந்த வசதியை பெற்றுக் கொடுத்ததை சொன்னார்.

இப்போது, அந்த தொழிலாளர்களை மாஸ்க் பயன்படுத்தி வேலைபார்க்க பழக்க வேண்டும். ஹெல்மெட் போடுவது போல, அசவுகரியத்தைப் பார்த்து பயன்படுத்தாமல் விட்டால் - உடல் நிலை மோசமாகிவிடும். இந்த வசதியும் காலாவதியாகிவிடுமே.

தொழிற்சங்கம் ஏதுமற்ற அந்த பன்நாட்டு நிறுவனத்தில் - தனக்குறிய வாய்ப்பை பயன்படுத்தி செய்த ஒரு சிறு பணியை பகிர்ந்துகொண்ட போது - நெகிழ்வாக இருந்தது. இன்னும், ஏராளமானவர்கள், சிறிது சிறுதாகவே மாற்றங்களை முன்னெடுத்தால் - இந்த பூமியைப் புரட்ட முடியாதா என்ன??

நம்மிலிருந்து தொடங்குவோம் ...

( Gunavathy Makizhnan மகிழ்நன் பா.ம என அனைவருக்கு வாழ்த்துகள்)
நாம் மனித நேயம் குறித்து பேசுவதன் வெற்றி - செயலில், செயல்பாட்டில் வெளிப்பட வேண்டும் என்பது என் ஆதங்கம். குறிப்பாக, தீண்டாமை எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகள், பெண் விடுதலை உள்ளிட்ட நோக்கில் பேசுகிறவர்கள் - தன் சொந்த வாழ்க்கையிலிருந்து மாற்றத்தைத் தொடங்க வேண்டும்.

துபாய், ஷார்ஜாவில் நாட்டில் பணியாற்றும் Sathish Joe - ஒரு பொறியாளர். அவருக்கு கீழ் 34 தொழிலாளர்கள் உள்ளனர். முதலில் நிறைய பேசுவோம், தொழிலாளர் உரிமைகள் குறித்து எதையாவது செய்ய வேண்டுமென அக்கறையோடு பேசுவார். ஆனால், அங்குள்ள நிலைமை அதற்கு உகந்ததில்லை என்று வருத்தமும் மேலிடும்.

இந்த நிலையில், பேசிப் பேசி சோர்வுற்று - தொடர்பிலிருந்தே காணாமல் போய்விட்டார். சில நாட்கள் முன் அவரிடமிருந்து இணைப்பில் உள்ள புகைப்படம் வந்தது. அவர் பணியாற்றும் பெயின்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு 'சுவாச' காப்பு கருவி ஏற்பாடு செய்ய நிறுவனத்தில் போராடி பெற்ற அனுபவத்தைச் சொன்னார்.

சதீஸ் குவாலிட்டி கண்ட்ரோலர் - பாதுகாப்பு அதிகாரி இன்னொருத்தர் இருக்கிறார். எனினும் இதுவரை பேப்பர் மாஸ்க் தான் கொடுத்திருக்கிறார்கள். இப்போது கொடுக்கப்பட்டுள்ள மாஸ்க் 600 டாலர்கள் வருமாம். முதலில் இந்த கோரிக்கையை வைத்தவுடன் வந்த எதிர்வினை என்ன தெரியுமா? 'உன் வேலை இது இல்லையே!' என்பதுதான். அவர், இல்லை இதுவும் என் வேலைதான் என விளக்கம் கொடுத்து - இந்த வசதியை பெற்றுக் கொடுத்ததை சொன்னார்.

இந்தியாவிலும் பெரும்பாலான பெயின்ட் அப்ளிகேசன் நிறுவனங்களில் இத்தகைய பாதுகாப்பு இல்லாத நிலையில், தேவையான முன்னேற்றம்தான்.

இப்போது, அந்த தொழிலாளர்களை மாஸ்க் பயன்படுத்தி வேலைபார்க்க பழக்க வேண்டும். ஹெல்மெட் போடுவது போல, அசவுகரியத்தைப் பார்த்து பயன்படுத்தாமல் விட்டால் - உடல் நிலை மோசமாகிவிடும். இந்த வசதியும் காலாவதியாகிவிடுமே.

தொழிற்சங்கம் ஏதுமற்ற அந்த பன்நாட்டு நிறுவனத்தில் - தனக்குறிய வாய்ப்பை பயன்படுத்தி செய்த ஒரு சிறு பணியை பகிர்ந்துகொண்ட போது - நெகிழ்வாக இருந்தது. இன்னும், ஏராளமானவர்கள், சின்னச் சின்னதாய் மாற்றங்களை முன்னெடுத்தால் - இந்த பூமியைப் புரட்ட முடியாதா என்ன??

நம்மிலிருந்து தொடங்குவோம் ...


( Gunavathy Makizhnan மகிழ்நன் பா.ம என அனைவருக்கு வாழ்த்துகள்)

அன்னா ஹசாரே தெளிவாகத்தான் இருக்கிறார் ...

அன்னா ஹசாரே குறித்து மறந்தே போய்விட்டோம். முதலில் அவர் அரசியல் கட்சிகள், தேர்தல்களில் இருந்தெல்லாம் விலகியிருந்தார். ஆம் ஆத்மி வெற்றிபெற்ற போதும் கூட - மெளனம் காத்தார், விலகியிருந்தார்.

 காங்கிரசை மட்டும் வீழ்த்தினால் போதும் என்ற அளவில்தான் அவரின் நோக்கம் செயல்பட்டது. பின்னர், அவர் அணியில் இருந்த 'பாபா ராம்தேவ்' தன் அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியபோது அன்னாவின் உதடுகள் பாஜகவின் ஊழல்கள் குறித்து அமைதிகாத்தன.

ஆம் ஆத்மிக்கு - அன்னா ஏன் ஆதரவு கொடுக்கவில்லை என்பது அப்போது வெளிப்படையாகவே தெரிந்தது. அவர்கள் 'காங்கிரஸ் - பாஜக' இடையிலான ஊழல் கூட்டணியை எதிர்த்தார்கள். எனவே ஹசாரேவுக்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை.

லோக்பால் மசோதாவுக்காக ஆம் ஆத்மி தனது ஆட்சியையே இழக்கத் துணிந்த போதும் அன்னா அப்படியே இருந்தார். பின் சில கண்டிப்பான கருத்துகளை வெளிப்படுத்தினார்.

இப்போது அவர் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கியிருக்கிறார். முற்றிலும் புதிய திசையில். முற்றிலும் புதிய களத்தில்.

சாமானிய மக்களிடமிருந்து கோடிகளைச் சுறுட்டிய சஹாரா நிறுவனத்தின் ஆதரவாளரான மமதா அவரின் உற்ற நண்பராகியுள்ளார். சுதந்திர இந்தியாவில் மிக அதிக ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத கம்யூனிஸ்டுகளை எதிர்த்து - அன்னா பிரச்சாரம் செய்யப் போகிறார்.

ஏனென்றால், வரக்கூடிய தேர்தலில் கம்யூனிஸ்டுகள் அதிக சீட்டுகளை பெற்றுவிடக் கூடாது. அவர்கள் பலம்பெற்றால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தை வலியுறுத்துவார்கள். யுபிஏ 1 அரசாங்கத்தை ஆட்டுவித்தது போல - பெட்ரோல் விலை ஏறினாலும், பொதுத்துறைகளை விற்பனை செய்தாலும் தடுக்கப் பார்ப்பார்கள். கொள்கை அடிப்படையில் ஒரு மாற்றத்துக்காக போராடுவார்கள். அவர்கள் பலவீனப்பட வேண்டும்.

#அன்னா தெளிவாகத்தான் இருக்கிறார்.

மீண்டும் வருகிறது கம்யூனிசப் பேய் !

தினமலரின் இன்றைய தலைப்பும் செய்தியும் சிரிப்பை வரவழைத்தன. தமிழகம் ஆகிறது 'சோவியத் யூனியன்' என்று தலைப்பு போட்டிருந்தார்கள். அதோடு ஜெ யாரிடமோ தவறான யோசனை பெறுகிறார் - கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற கதைதான். இனி எல்லாம் முடிந்தது என்கிற போக்கில் எழுதியிருந்தார்கள்.

இந்தியா, உலகமயக் கொள்கையிடம் தன்னை அடகுவைத்து, மீளமுடியாத நெருக்கடிகளை வரவழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் - ஒரு மாநிலத்தில் மட்டும் பொருளாதாரக் கொள்கையை மாற்றிவிட முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க. இவர்கள் ஏன் குதிக்கிறார்கள்? எது அவர்களை உண்மையில் பயப்படுத்துகிறது? என்பது முக்கியமான கேள்வி.

நலத்திட்ட அரசு:
உணவகம், மருந்தகம், காய்கறிச் சந்தை, பாட்டில் குடிநீர், கேபிள் இணைப்பு - என்ற வரிசையில் திரையரங்கம் ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பல முன்னேறிய நாடுகளில் உள்ளதுபோல இவைகள் அனைத்தும் நலத்திட்ட நடவடிக்கைகள்தான்.

குறிப்பாக திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாகவே நீடித்திருக்கிறது. ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்)

அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - அவர்களின் மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம். அதுவும் நடைமுறைப் படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
---
இந்தியாவில் பெரும் தொழில்களை தொடங்க சோவியத் உதவி பெறப்பட்டுள்ளது. கலப்பு பொருளாதாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுவரையில் சோசலிசப் பொருளாதாரம் அமலில் இருந்ததில்லை.

தினமலர் ஒரு போலி அச்சத்தைக் கிளப்புவதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. அவர்களின் விருப்ப நாயகனும், இந்திய பெரும் முதலாளிகளின் அன்பு வேட்பாளருமான நரேந்திர மோடியை அதிமுக ஆதரிக்கவில்லை என்பதே அது.
---
எது கம்யூனிசம் என்கிற விளக்கத்தைக் கூட - முதலாளிகளே கொடுப்பதும். 'மனைவியை' பொதுவுடைமை ஆக்கிடுவார்கள். இரண்டு சைக்கிள் இருந்தால் ஒன்றை பிடுங்கிக் கொள்வார்கள். என்றெல்லாம் தவறான விளக்கங்களைக் கொடுத்து அச்சப்படுத்துவது இன்றைக்கு மட்டும் நடப்பதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே "கம்யூனிச பூதம்" என்ற முதலாளிகளின் பிரச்சாரத்துக்கு பதில் கொடுத்துத்தான் தொடங்கும் என்பதிலிருந்து பார்ததால் - தொடக்கத்திலிருந்தே அவர்கள் இதைத்தான் செய்துவந்திருக்கிறார்கள்.

அம்பானி, அடானி வகையராக்களும், அவர்களின் கதா நாயகர்களும் அச்சமடையத் தொடங்கியுள்ளார்கள்.

#இது_நல்லதுதான்!

புரிந்துகொள்ள விரும்பாத ரகசிய பக்கங்கள் ...

Priya Thambi - இன் 'எனக்கான முத்தம்' சிறுகதை - வாசிக்கும்போது நெகிழ்வை ஏற்படுத்துகிறது. உள்ளே, உரையாடி புரட்டியே போடுகிறது.

----
ஆண்களுக்கும், பெண்களுக்குமான பல்வேறு உறவு நிலைகளுக்கு பொதுவான இலக்கணங்களில் விளக்கமேதும் கிடையாது. ஒவ்வொரு மனிதனும் பேரிலக்கியமென்றால், அதில் தனக்காக மட்டும் எழுதப்படும் பக்கங்கள்தான் அதிகம். அதிகம் பிறரால் வாசிக்கப்படுவதும் அதே ரகசிய பக்கங்கள்தான்.

ரகசியங்களுக்கு ஆடையணிவிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். அலங்காரம் செய்கிறார்கள். புத்தாடை அணிவித்து உலவவிடுகிறார்கள். ரகசியங்களைப் பேசவும், தெரிந்துகொள்ளவும் எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால், அவற்றை புரிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை.

அதிலும், ஆண் - பெண் இடையிலான நட்பாராதனைகள், காதலாயணங்களுக்கு முன் எப்போதும், ஒரு எச்சரிக்கை வாசகம் தொங்கிக் கொண்டேயிருக்கும். அந்த வாசகம், ஒரு நாளும் முழுமையான சுயத்தை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதே இல்லை.

'எனக்கான முத்தம்' - மெல்லிய நினைவுக் கோடரியால், நினைவுக் கிளைகளை அசைக்கத் தொடங்கியது.

-------
நாம் ஒரு நாள் இதையெல்லாம் தாண்டி நிற்போம். சக மனிதரை அவர்களின் உண்மையை நேசிக்கத் தொடங்கும் புதிய உலகில், புதிய மனிதர்களின் தரிசனம் அப்போது தொடங்கும்.

அய்யா ராமதாசின் காதல் ...

செவிலியரோடு மருத்துவர் ராமதாசுக்கு பழக்கம் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை நாம் விமர்சனத்தோடு பார்க்க வேண்டியதில்லை. இந்த வயதில்தான் சரியான நட்பு கிடைத்திருக்கிறதென அவரின் மனம் உணர்ந்திருக்கலாம். அவருக்கான வாழ்க்கையை, தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவருக்கு இருக்கிறது.

சட்டப்படி இது தவறென்று கருதப்படலாம், எனவே அவரின் குடும்பத்தாருக்கு உரிய நீதியை அவர் வழங்க வேண்டும்.

சாதிய விசமப் பிரச்சாரத்துக்கு பலியாகி - காதல் திருமணங்களை எதிர்த்து துவேசம் கொண்டு - ஊரையே எரித்த தொண்டர்கள் - இப்போதாவது மன விருப்பத்தின் வலிமையை புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.

காதலிப்பது குற்றமில்லை. காதலித்த பெண்/ஆண் எந்த சாதியாக இருந்தாலும் திருமணம் செய்வது குற்றமில்லை. சுய மரியாதையுடன் வாழ்வது குற்றமில்லை.

மனைவி இருக்கும்போதே, மன விருப்பம் இன்னொருவரிடம் இருந்தால் - விவாகரத்து செய்யாமல் உறவு தொடர்வது சட்டப்படி குற்றம். ஆனால், இந்தக் குற்றத்துக்காகவும் கூட எந்த கிராமத்தையும் எரிக்க வேண்டியதில்லை.

‪#‎வாழ்த்துகள்‬!

நிர்வாண விளம்பர உத்தி - ஒரு உண்மை !

இந்தி நடிகை மேக்னா நிர்வாணமாக நின்றபடி பாஜகவுக்கு வாக்குக் கேட்கிறார்.

மோடிமீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்த அவர் இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், 'தன் கலாப்பூர்வமான' பங்களிப்பை செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இணையதளத்தில், சீனாவின் நகரத்தை 'அகமதாபாத்' என்று மாற்றியது போலவோ. பாகிஸ்தான் வீடியோவை பயன்படுத்தி முசாபர் நகரில் கலவரத்தை தூண்டியது போலவோ, மோடியின் பேச்சை ஒபாமா கேட்பதாக மாற்றி, பின் அது ஒரு ஒட்டுவேலை என்ற செய்தி பிபிசி உலக தளத்தில் வெளியாகி தலைகுனிவை ஏற்படுத்தியது போலவோ அல்ல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்பது பாஜகவுக்கு ஆறுதல்.

இந்த அரை நிர்வாணப் படங்கள் இளைஞர்களை ஈர்க்கும் என மேக்னா நினைத்திருக்கலாம். முதல் முறை வாக்காளர்களிடம் கொள்கைகளைப் பேசுவதை விட, இந்த வழிமுறை 'கவர்ச்சியாக' இருக்கும் என அவர் முடிவு செய்திருக்கலாம். சட்டசபையிலேயே நீலப்படம் பார்க்கும் பாஜகவின் அமைச்சர்களும், அவர்களை பின்பற்றுவோரும் மகிழ்ந்திருப்பார்கள்.

'மார்க்கெட்டிங்' தெரிந்த அவர்களின் தலைவர்கள். எதிர்மறை விமர்சனமானாலும் 'அது ஒரு விளம்பரம்' என்று சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருப்பார்கள்.

நமக்கு இதிலிருந்து ஒரு உண்மை மட்டும் தெரிகிறது.

தங்கள் கொள்கைகளை மறைத்துக் கொண்டு, கவர்ச்சி வார்த்தைகளில், வாக்குகளை வாங்க நினைக்கும் இந்தக் கூட்டம், அதிகாரத்திற்கு வருமானால். தேசம் இப்படித்தான் அரை நிர்வாணத்தோடு நிற்க நேரிடும்.

நீதியரசர் சந்துருவோடு சந்திப்பு ...

நீதியரசர் சந்துருவுடன் பேசியபோது, அவரின் அனுபவ அடர்த்தி எங்களை ஆச்சர்யப்படுத்தியது. அவருக்கு செவித்திறன் குறை உள்ளதை அறிந்துகொண்டேன். (என் அப்பா நினைவுக்கு வந்து நெகிழ்ச்சி கொடுத்தார்.)

சேரன்மாதேவி குருகுலத்தில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக பழ.அதியமான் எழுதிய புத்தகம், பெருமாள்முருகன் தொகுத்து 'சாதியும் நானும்' என்ற தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ள புத்தகம், ஜெயமோகன் எழுதிய வெள்ளை யானை, பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய புலி நகக் கொன்றை, ஜோ டி குரூஸ் எழுதிய கொற்கை மற்றும் டி.செல்வராஜ் எழுதிய 'தோல்' ... உள்ளிட்டு சமீபத்தில் வாசித்த புத்தகங்களைக் குறித்து பகிர்ந்துகொண்டார்.

சாதாரண, விழிம்பு நிலை மக்களைக் குறித்த படைப்புகள் இப்போதுதான் வரத் தொடங்கியுள்ளன. மேற்கண்ட புத்தகங்களை வாசிப்பது, சாதி ஆதிக்கத்தையும், அதற்கெதிராக தேவைப்படும் ஒன்றுபட்ட எதிர்ப்பையும் உணர்ந்துகொள்ள உதவும் என்றார்.

விடுதி அறையின் வெளிச்சக் குறைவு காரணமாக, அந்த உரையாடல் முழுமையாக பதிய முடியவில்லை. (ஒரு பகுதி மட்டும் அலைபேசி காமிரா வழியே கிடைத்தது: http://www.youtube.com/watch?v=uo4lub6UiMg)

'நமக்குள் இருக்கும் மனிதனை சாகாமல் பார்த்துக் கொள்வது ஒரு போராட்டம், அதில் வெற்றியடைகிறவர்கள், வரலாற்றில் நிற்கிறார்கள்' என்ற வாசகத்தின், உயிர்பெற்ற வடிவமாக - நீதியரசர் சந்துரு எனக்குத் தெரிந்தார்.

தேசியவாத வெற்றுக் கூச்சல்கள் ஒதுக்கி, போற்றுவோம் குடியரசை !

குடியரசு தின வாழ்த்துகள் ...

ஆனால், இந்த தினம் கொண்டாட்டத்துக்கு மட்டும் உரியதில்லை. நாம் ஒரு முழுமையான குடியரசில் வாழவில்லை, எனவே, இந்த தேசத்தை முழுமையாக்கும் கடமைகள் மிச்சமிருக்கின்றன, என்று உணர்ந்து - உறுதியேற்பதற்கான தினமாகும்.

அண்ணல் அம்பேத்கர் - அரசியல் அமைப்பு சட்ட வரைவை தாக்கல் செய்து முன்வைத்து பேசிய வார்த்தைகள் இன்னும் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன.

"முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் சமத்துவமின்மையைப் பெற்றிருப்போம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு மற்றும் ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை அங்கீகரித்திருப்போம். ஆனால் நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக, ஒருமனிதனுக்கு ஒரு வாக்கு என்னும் விதியை அளித்திட மறுப்பது தொடரும்.

இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும் எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப் போகிறோம்? மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப் போகிறோம்?

இவ்வாறு நாம் நீண்ட காலத்திற்கு மறுப்பது தொடருமானால், நம் அரசியல் ஜனநாயகமே பேரிடர்க்கு உள்ளாகும் நிலை உருவாகும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இம்முரண்பாட்டை நாம் ஒழித்திட வேண்டும். இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசியல் நிர்ணயசபை கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்."

நமது போராட்டம் மிச்சமிருப்பதை மறந்து, வெற்று தேசியவாதக் கூச்சல்களுக்கு இறையாகாமல், போற்றுவோம், குடியரசை.

‪#‎வாழ்த்துகள்‬

அந்தக் கண்ணீருக்கு நன்றி ...

நானும், ஒரு முதியவரும் தினமும் சந்திப்போம். அரசியல், மொழியியல் விவாதங்களில் தொடங்கிய எங்களின் பயணம் இப்போதெல்லாம் இசையில் வட்டமிட்டிருக்கிறது.

நானோ காதல் இளம் பருவத்தில் வாழ்கிறவன், அவரோ முற்றிய கட்டை. நாங்கள் இருவரும் சேர்ந்து பழையதும், புதியதுமாக பாடல்களைத் தேடி, கேட்டுக் கொண்டிருந்தோம்.

முதலில் அவரின் ரசனைக்குறிய பாடல் - பின்னர் என்னுடையது. எனக்கான முதல் வாய்ப்பில் 'இஸ்க்யா' என்ற இந்தி படத்திலிருந்து, தில்த்தோ பச்சா ஹே ஜி (என் இதயம் குழந்தைதானே!) http://www.youtube.com/watch?v=1Jp4wpMtAUE - என்ற பாடலை இசைத்தேன். நஸ்ருதீன் ஷா, ஒரு முதிய திருடராக நடித்திருக்கும் அந்தப் படத்தில், அவருக்கு எழும் காதல் மெல்லுணர்வை வெளிப்படுத்தும் பாடல் இது. நடிப்பும், இசையும் சேர்ந்து புரியாத மொழியையும் நமக்கு புரிய வைத்துவிடும்.

அடுத்து, அவர் நல்லதம்பி திரைப்படத்தில் கிந்தன் சரித்திரம் என்றொரு கதையாடலைச் சொன்னார். http://www.youtube.com/watch?v=-MEEeCkp6Aw
நான் அசந்துபோனேன்.

அடுத்து என் தருணம் வந்தது. http://www.youtube.com/watch?v=bFew8mgQJ9o நேரம் திரைப்படத்திலிருந்து, காதல் என்னுள்ளே வந்து என்ற பாடலை தேர்வு செய்தேன். அதற்குள் ஒரு தொலைபேசி அழைப்பு வர நான் அங்கிருந்து வெளியேற, அவர் பாடலை பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் சிவந்திருந்தன.

அவரின் இள வயதுக்கு பயணித்து திருபியிருக்க வேண்டும் அவர். நான் பார்ப்பதற்குள் அவசரமாக கண்களைத் துடைத்தார். அடுத்த பாடலுக்கு தாவத் தொடங்கினேன் நான்.

இசையும், கவிதைகளும் மட்டும் இல்லையென்றால் ...

எழுத முடியாததொரு கட்டுரை !

ஒரு கட்டுரை எழுதலாமென்று தொடங்கினேன். பின் எழுதாமல் விட்டுவிட்டேன்.

நேற்று டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுத்தெருவில் நிர்வாணமாக வீசப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஓராண்டு நினைவு தினம். அந்தக் கொலை மட்டுமல்ல, ஆண்டுக்கு 600 பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவந்த தலைநகரில் - மிகப்பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியது.

மும்பையில் ஒரு பத்திரிக்கையாளர் செய்தி தேடிச் சென்ற இடத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி எல்லோரையும் உலுக்கியது. இன்றுவரை பலாத்கார செய்திகள் குறைந்தபாடில்லை. செய்தியாகிய சம்பவங்களை அடுக்கினால் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பலாத்காரங்கள் நடைபெறாமல் இல்லை. சென்ற ஆண்டில் இப்படி செய்தியான சில சம்பவங்களைத் தொகுக்கலாமென்று தொடங்கியபோது. சம்பவங்களின் தொடர்ச்சி மலைப்புக்குள்ளாக்கிவிட்டது.

நம் சமூகத்தில் பலாத்காரம் உண்மையில் மதிப்பீடுகளில் இருந்துதான் தொடங்குகிறது. 'அவளைப் பற்றி தெரியாதா?', 'என்னடி! நான் ஆம்பள' என்பதாக நம் அன்றாட வாழ்க்கையின் உரையாடல்கள் தொடங்கி, கவர்ச்சி நடிகைதானே என்று அவளின் அந்தரங்கங்களை விவாதப் பொருளாக்குவது வரை இந்த மதிப்பீடுகள் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.

நீதிபதியாக இருந்த கங்குலி, பத்திரிக்கை ஆசிரியர்கள் தருண் தேஜ்பால், சன் தொலைக்காட்சியின் ராஜா, கேரளாவிலிருந்து சில பத்திரிக்கையாளர்கள், இளம்பெண்ணை பாதுகாக்க அப்பா கேட்டுக்கொண்டார் என அவளின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பின்தொடர்ந்த குஜராத் அரசு நிர்வாகம். பெண்ணை சக மனுசியாகக் கருதாத மதிப்பீடுகளின் வெளிப்பாடுகள்தான் எத்தனை??

காலை தமிழ் 'தி இந்து'வில் Kavitha Muralidharan ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது நேரடியாகவே முகநூல், இணைய பயன்பாட்டாளர்களைக் குறித்து இருந்தது. இணையவெளியிலும் இந்த குறுகலான மதிப்பீடுகள் ஆக்கிரமித்திருப்பதை கவலையோடு பதிவு செய்தது.

சரிபாதி மனித சமூகத்தை நாம் இப்படித்தான் வைத்திருக்கிறோம். எங்கும் வியாபித்திருக்கும் இந்த மதிப்பீடுகளை உடைத்தெரிவது ஒவ்வொரு மனிதனின் பணி. நீயும், நானும் சக மனிதர்கள் என்ற நிலை இல்லாத கொடுமையான சூழலில், ஒரு மனிதன் எப்படி சுதந்திரமாய் உலவ முடியும்??

என் தாத்தாவுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுங்கள் !

என் தாத்தாவுக்கு வயது 92, கீழே விழுந்து உடலில் சிறு காயங்களுடன் இருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தவர், வெகுநேரம் பேசுவதை நிறுத்தவில்லை.

“பெரியார், ராஜாஜி, நேரு பார்த்திருக்கேன். ஜீவா பார்த்திருக்கேன். ராஜேந்திர பிரசாத்... யாரோடும் பேசினதில்ல.” காந்தியை பார்த்திருக்கீங்களா? என்று கேட்டதும் பாட்டியின் கண்கள் விரிந்தன, “நான் பார்த்திருக்கேன். 12 வயசுல என் மாமா அழைச்சிட்டு போவார்” என்று சொன்னார்.

13 வயதில் பாட்டிக்கு திருமணமாகிவிட்டது. அடுத்தடுத்து குழந்தைகள். வீடே அவருக்கு உலகம். சமயலில், பாட்டியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. இதை சிறு வயதிலேயே உணர்ந்திருந்தாலும், பாட்டியிடம் சொன்னபோது எனக்கு 14 வயதிருக்கும். அப்போதிருந்து பாட்டியின் சமயலோடு, அவரின் புன்னகையும் நான் வந்தால் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்தது.

அங்கீகாரமும், பாராட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் பற்றாக்குறையாய் இருக்கின்றன. உடலளவில் முதுமையடைந்தாலும், உணர்வளவில் குழந்தைகள்தான் ஏராளம்.

பேசிக் கொண்டிருக்கும்போது, “தன் ஓய்வூதியப் பணத்திலிருந்து ரூ.500 எடுத்துக் கொடுத்து. உத்தர்கண்ட் வெள்ள நிவாரணத்தில் சேர்த்துவிடு. என்னால் முடிந்தது” என்றார்.

தாத்தாவோடு மாற்றுக் கருத்துகள் இருந்திருக்கின்றன. கொள்கை அளவிலான முரண்கள். காலத்தின் வளர்ச்சிப் போக்கில், அவற்றில் பெரும்பகுதிகள் நொறுங்கிப்போயின. தாத்தா இந்த வயதில் தன் புது பிறப்பை அடைந்திருக்கிறார்.

#அன்பு என்று கொட்டு முரசே !

அறிவாளியாகக் காட்டுதல் ... நேற்றைய நீயா நானா? !

அறிவாளியாகக் காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்கிறீர்கள்?? என்ற விவாதத்தில் - பலர் உண்மையைப் பேசினார்கள்.

உதவி இயக்குனராக உள்ள ஒரு பெண் ’எனக்கு கரகாட்டக்காரன் படம் பிடிக்கும். ஆனால் அதைச் சொன்னதும் கிண்டல் செய்தார்கள்’ என்று சொன்னார். - ஆம், தமிழக பண்பாட்டின் வேர்களை மறந்துவிட்டு ‘வித்தியாசமான’ படங்கள் வந்தால் - அதனை சிலாகிக்கும் ஒரு பகுதியினரும் உண்டு.

கரகாட்டக்காரனைப் பிடித்த இயக்குநர். தன் தொழில் சார்ந்த சில நுட்பங்களை கற்பதற்கான பல மொழிப் படங்களையும் நாடலாம். - ஆனால், அதன் பொருள் - என் உள்நாட்டு தொழில்நுணுக்கங்கள் கீழானவை என்பதல்ல.

அந்த விவாதம் - கொஞ்சம் அதிகமாகப் பொய் சொல்லவும் அறிவுருத்தல்களைக் கொடுத்தது.

என் பெயர் சிவப்பு - என்றொரு புத்தகம் குறித்து சொன்னார்கள். நான் இதுவரைக்கும் அதன் அட்டையைக் கூட பார்த்ததில்லை. பீத்தோவனின் இசையோ அல்லது ஏதோ போர்ச்சுக்கீசியரின் இசையோ - கேட்பதாகச் சொல்லிக் கொள்வதை பெருமையாகக் கருதுவதற்கும் ஒரு பெரும் எண்ணிக்கை இருக்கத்தான் செய்கிறதோ. தகுதிக்கு மீறிய பொய்களைச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதே சமயம் பொய்களை - ஒரு இமேஜ் உருவாக்கத்துக்காக நாம் சொல்வதும் உண்மைதான். அந்தப் பொய்களைச் சொல்வதன் மூலம், அந்த உயரத்தை எட்டியாக வேண்டிய உளவியல் நிர்ப்பந்தம் ஏற்படும். அப்படியான பொய்கள் நல்லவை.

#பி குட் ...

அப்பாவைப் பிடித்தவர்களுக்காக ...


எல்லோரும் தந்தையர் தின வாழ்த்துச் சொல்கிறார்கள்...

அப்பா இருந்த வரைக்கும் இப்படியொரு தினத்தை கொண்டாடியதில்லை. அப்பா, இல்லாதபோது ... சுற்றிச் சுற்றி - எத்தனை அப்பாக்கள் தென்படுகிறார்கள். தினமும் சாலையில், நிறைய முதியவர்களை பார்ப்பதுண்டு. உடல் தளர்ந்தாலும், 8 மணிப் பேருந்தின் கதவருகே தொங்கிக் கொண்டு பணிக்குச் செல்லும் அப்பாக்களை என்னவென்று சொல்வது??

பெற்ற மக்களுக்கு அன்னியமாகும் உளவியலின் வலி கொடிது. அந்தக் கண்ணீர்தான் அதிகம் காயப்படுத்துகிறது. மகன்கள் உணர்ந்திடாத, ஒருதலைக் காதலனாய் வெந்து மடிகிறான் அப்பன்.

எல்லா அப்பன்களுக்கும் முதுமை உண்டு. முதுமை - நமது வாழ்க்கையின் மற்றொரு முகம். 
குழந்தையாய்ப் பிறந்து, குழந்தையாகவே இளைஞனாகி, பின் தலை நரைத்து - திடீரென செத்துப்போகும் சாதாரண வாழ்வில். அப்பனாவது, ஒரு பரிணாம வளர்ச்சி.

குழந்தை, காதலனாகி, கணவனாய்ச் சறுக்கி பின் - ஒரு குழந்தையின் மெல்லிய தீண்டலையும், வலிய நிராகரிப்பையும் தாண்டி அப்பனாய் பிறத்தல் ஒரு தவம். 


என் அப்பா - தி.மு.ராசாமணி, தனது மரணப் படுக்கையில்
வாழ்நாள் உழைப்புக்கான விருதைப் பெற்றபடி ...


-

இவ்ளோ பெரிய கோழியா?


இவ்ளோ பெரிய கோழியா?

இந்தப் படத்தைப் பார்த்ததும் பலருக்கும் இந்தக் கேள்வி தான் தோன்றும். ஆஸ்திரேலிய சிற்பக் கலைஞர் ரான் மியூஸ்க்கின் சிற்ப வேலைப்பாடுதான் இது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஜெர்மானியர்களுக்கு பிறந்த இந்தக் கலைஞர் 1996 ஆண்டில் தனது 38 வது வயதில் - பைன் ஆர்ட் துறையில் நுழைந்தார். கற்பனை வடிவங்களைத்தான் சிலை செதுக்க முடியும் என்ற காலத்தில், உயிரோட்டமான மனித உடல்களை சிலை வடித்து புகழ்பெற்றவர்.

சிலைகள் ஒவ்வொன்றிலும் - மனிதர்களின் பயம், துக்கம், அதிர்ச்சி, தனிமை, தூக்கம் என விதவிதமான உணர்வுகள் சிறைப்பட்டிருக்கின்றன. பார்க்கப் பார்க்க பிரம்மிப்பாக இருந்தது. 

இந்தியாவை நினைத்துக் கொண்டேன். நம்மிடம் ஏராளமான சிற்பக் கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் ஏட்டுக் கல்வி வாய்ப்பு என்ற நிலை பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்ததன் காரணமாக - அந்த அறிவெல்லாம் சேகரமாகாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டியில் சிற்பக் கலைஞர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் கேட்பதெல்லாம் ஒரு சிற்பக் கல்லூரி - கலைஞர்களுக்கான அங்கீகாரம் - திறனுள்ள கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரமும், நவீனங்களின் அறிமுகமும் கிடைக்க வேண்டும். இனியாவது கொடுப்போம் ...









HCL க்கு எதிராக ஐடி பட்டாதாரிகள் உண்ணாவிரதம் ...

சென்னை வரலாற்றில் முதல் முறையாக ஐடி கம்பெனிகளின் சுரண்டலுக்கு எதிராக - தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளின் போராட்டம் வாழ்த்தும், வரவேற்பும் பெறுவதாகும்.



HCL பன்நாட்டு நிறுவனத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடந்திருப்பதை 'தி ஹிந்து' குறிப்பிட்டு சென்னையின் வரலாற்றில் முதல் முறையாக இப்போராட்டம் நடப்பதாகச் சொல்லியிருக்கிறது.

முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் - தன் உழைப்பை விற்பனை செய்து வாழும் எவரும் தொழிலாளிதான். ஒரு தொழிலாளி படிக்காத, மூட்டை சுமப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உடல் உழைப்பை இரண்டாம் பட்சமாக பார்க்கும் நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறதென்ற நிலையில் - இந்தப் போராட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கவர்ச்சியான சம்பளத்தை மையப்படுத்தி நடத்தப்பட்ட கல்விச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் அவர்கள். ஹெச் சி எல் நிறுவனத்தின் நேர்முகத்தில் கலந்துகொண்டு - கடைசியில் வேலை கிடையாது வெளியே போவென வீசி எரியப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது.

சமூகப் பாதுகாப்பற்ற - நிரந்தரமற்ற வேலை. எத்தனை சம்பளமாக இருந்தால் என்ன? ஒருநாள் நாமும் இதே நகரத்தின் தெருவில் நிர்க்கதியாக விடப்படுவோம் என்ற அச்சம் - இன்றைய எல்லாத் தொழிலாளர்களுக்கும் வந்திருக்கிறது. எனவே, தனக்கான போராட்டத்தோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளக் கூடாது

விவசாயத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியில் - நான் விவசாயம் பார்க்கப் போகிறேனெறு தெரிவித்த ஒரு இளைஞனை - எத்தனைபேர் பகிர்ந்துகொண்டோம்!. பலருக்கும் விவசாயம் குறித்த அக்கரை இருக்கிறது. விவசாயம், கூலியுழைப்பாளர்கள் நிலைமை மேம்பாடடைய வேண்டும். ஆனால், எல்லோரும் விவசாயிகளாக மாறுவது அதற்கான மாற்று அல்லவே.

உழைப்புதான் செல்வங்களைப் படைக்கிறது. அந்த உழைப்பால் உருவாக்கப்பட்ட உலகமோ அநீதியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அநீதிகளுக்கு எதிராக சிந்திப்பதும் செயல்படுவதும் - நமது கடமை என்று உணரவேண்டும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது... நாம் ஒரு புதிய உலகத்தில் நுழைந்திருப்போம்

#நம்பிக்கையுடன் நடைபோடு தோழா ...

அப்பாவும் - தங்க மீன்களும் ! (ஒரு உரையாடல்)

அப்பாக்களைக் குறித்து நாம் போதுமான அளவு பேசுவதில்லை ... அதனால்தான், ஓரளவு சுமாராகப் பேசினால் கூட - நெகிழ்ந்துபோகிறது மனது ...

'தங்க மீன்கள்' திரைப்படை முன்னோட்டத்தை ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். தன் மகளின்/மகனின் சின்னச் சின்ன ஆசைகளையே, தன் வாழ்நாள் லட்சியமாய்ச் சுமந்துகொண்டு - தன் இயலாமைக்கு கோபத் திரையிட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாக்கள் - வாழும்போது கவனிக்கப்படுவதேயில்லை.



அப்பாக்களாய் இருத்தலும் ஒரு சக்கரம்தான். பிறந்து சில நாட்களுக்கு குழந்தையின் யாசகர்கள். பின் சில வருடங்கள் குழந்தைக்கு நாயகர்கள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது மாணவர்கள்.

சமீபத்தில் பாண்டியராஜ் இயக்கிய கேடி பில்லா - கில்லாடி ரங்கா பார்த்தேன். இறுதி சில காட்சிகள் கண்களை நிரப்பின. அது படத்தின் வெற்றியென்று தோன்றவில்லை
. சொல்லப்போனால், மிகச் சிறிய அளவே அப்பாக்களை நேர்மையாக பதிவு செய்திருந்த போதிலும், அந்தப் படம் மனதை வருடியது - அப்பாக்களால்தானேயன்றி - படத்தால் அப்பாக்கள் பெருமையடைந்ததில்லை.

முன்னொரு முறை தவமாய்த் தவமிருந்து அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது - இன்னும் எண்ண முடிந்த சில படங்களில் அப்பாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நாவல்கள், சில கவிதைகள் - எழுதப்பட்டிருக்கின்றன.

அவர்களை புனிதப்படுத்தி உயர்ந்த ஜீவன்களாய்க் காட்டுவதும் சரி - நேசிக்கவே தெரியாத காட்டு மனிதர்களாய்க் காட்டுவதும் சரி அவர்களுக்குச் செய்யும் துரோகமென்றே படுகிறது. மேலும், உன் மகன் உன்னை மதிக்கவேண்டுமானால், நீ அப்பாவை மதி என்ற மிரட்டல் தொனியிலான அறிவுருத்தல்களும் அப்பாக்களை உணர்த்துவதில்லை.


சாதாரண ஜீவன்களாய்ப் பிறந்து - தனக்கும் ஒரு தொடர்ச்சி உண்டென்றுணர்த்தும் குழந்தையைக் கண்ட பரவச நிலை ஒருத்தனை அப்பாவாக்குகிறது. எல்லா அப்பாக்களும் மதிக்கப்படுவதில்லை. பிள்ளைக்கும் தனக்குமான இடைவெளியை - நட்பால் நிரப்பிக்கொள்ள விரும்பி – வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்ற அப்பாக்கள் கொண்டாடப் படுகிறார்கள். மனதுக்குள்ளேயே புழுங்கி வாழும் ஒருதலைக் காதலனைப் போன்ற அப்பாக்கள் … புதை மேட்டிலிருந்தபடி காதலைச் சுரந்துகொண்டேயிருக்கிறார்கள்.

#அப்பாவென்றொரு கவிதை...


முகநூலில் இந்தப் பதிவில் விவாதிக்க ...

Labels