HCL க்கு எதிராக ஐடி பட்டாதாரிகள் உண்ணாவிரதம் ...

சென்னை வரலாற்றில் முதல் முறையாக ஐடி கம்பெனிகளின் சுரண்டலுக்கு எதிராக - தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகளின் போராட்டம் வாழ்த்தும், வரவேற்பும் பெறுவதாகும்.



HCL பன்நாட்டு நிறுவனத்தின் ஏமாற்று வேலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடந்திருப்பதை 'தி ஹிந்து' குறிப்பிட்டு சென்னையின் வரலாற்றில் முதல் முறையாக இப்போராட்டம் நடப்பதாகச் சொல்லியிருக்கிறது.

முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் - தன் உழைப்பை விற்பனை செய்து வாழும் எவரும் தொழிலாளிதான். ஒரு தொழிலாளி படிக்காத, மூட்டை சுமப்பவராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உடல் உழைப்பை இரண்டாம் பட்சமாக பார்க்கும் நிலையில்தான் இந்த சமூகம் இருக்கிறதென்ற நிலையில் - இந்தப் போராட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

கவர்ச்சியான சம்பளத்தை மையப்படுத்தி நடத்தப்பட்ட கல்விச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர்கள் அவர்கள். ஹெச் சி எல் நிறுவனத்தின் நேர்முகத்தில் கலந்துகொண்டு - கடைசியில் வேலை கிடையாது வெளியே போவென வீசி எரியப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் கோபம் நியாயமானது.

சமூகப் பாதுகாப்பற்ற - நிரந்தரமற்ற வேலை. எத்தனை சம்பளமாக இருந்தால் என்ன? ஒருநாள் நாமும் இதே நகரத்தின் தெருவில் நிர்க்கதியாக விடப்படுவோம் என்ற அச்சம் - இன்றைய எல்லாத் தொழிலாளர்களுக்கும் வந்திருக்கிறது. எனவே, தனக்கான போராட்டத்தோடு அவர்கள் நிறுத்திக் கொள்ளக் கூடாது

விவசாயத்தின் நிலை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் நண்பர்களை நான் கொண்டிருக்கிறேன். நீயா நானா நிகழ்ச்சியில் - நான் விவசாயம் பார்க்கப் போகிறேனெறு தெரிவித்த ஒரு இளைஞனை - எத்தனைபேர் பகிர்ந்துகொண்டோம்!. பலருக்கும் விவசாயம் குறித்த அக்கரை இருக்கிறது. விவசாயம், கூலியுழைப்பாளர்கள் நிலைமை மேம்பாடடைய வேண்டும். ஆனால், எல்லோரும் விவசாயிகளாக மாறுவது அதற்கான மாற்று அல்லவே.

உழைப்புதான் செல்வங்களைப் படைக்கிறது. அந்த உழைப்பால் உருவாக்கப்பட்ட உலகமோ அநீதியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அநீதிகளுக்கு எதிராக சிந்திப்பதும் செயல்படுவதும் - நமது கடமை என்று உணரவேண்டும். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போது... நாம் ஒரு புதிய உலகத்தில் நுழைந்திருப்போம்

#நம்பிக்கையுடன் நடைபோடு தோழா ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels