Showing posts with label சாமானிய டைரி. Show all posts
Showing posts with label சாமானிய டைரி. Show all posts

ரேசன் கடையில் ஒரு இஞ்சினியரிங் மாணவி ...

சாமானிய டைரி 5:

இஞ்சினியரிங் மாணவி ஒருத்தரின் அம்மா என்னிடம் தொலைபேசியை வாங்கி அழைத்தார் ... "சாமி, கடைலதான் இருக்கியா?.. இன்னைக்கு என்ன பொருள் போடறாங்க?" "கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், வாங்காம திரும்பிடாத"

ரேசன் கடையில், கூட்டத்தின் இடையே அந்தப் பெண் காத்திருந்தது சொல்லாமலே விளங்கியது. "பச்சரிசி போட்டா வாங்கிக்கோ" என்றபடி அழைப்பைத் துண்டித்தார்.

நியாயவிலைக் கடையில் குறைந்த விலையில் பொருட்கள் கொடுப்பதற்கு சில ஆயிரம் கோடிகளை அரசு செலவிடுகிறது. தமிழக மக்கள் அந்த சேவையை பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். ஓரளவு வருமானம் வரும் குடும்பத்தினருக்கு ரேசன் பொருட்களால், சேமிக்க வழி கிடைகிறது. ஏழைக் குடும்பங்களோ பசியிலிருந்து தப்பி, அவசியமான பிற செலவுகளை மேற்கொள்கிறார்கள்.

அந்த மாணவியின் கல்வி இஞ்சினியரிங் வரை தடையில்லாமல் தொடர்ந்ததற்கு - போசாக்கான உணவு கிடைக்கவும், பொருளாதாரம் காக்கப்படவும் வழிவகுக்கும் இப்படிப்பட்ட திட்டங்கள் ஒரு காரணம். அன்றாடத் தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டியில்லாத நிலையில்தானே நம்மால் பிற செலவுகளைப் பற்றி சிந்திக்க முடியும்.

ஆண்டுக்கு 5 லட்சம் கோடி மிகப்பெரும் நிறுவனங்களுக்கு சலுகையாக, வரித் தள்ளுபடியாக கொடுப்பதால் விளைந்த நன்மைகளை விட. சில 10 ஆயிரம் கோடிகளில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் விளைவித்த நன்மைகள் ஏராளம்.

அந்தப் பெண் குழந்தை காத்திருக்கிறாள். அவளுக்குத் தெரியும், தன் குடும்பத்துக்கும், எதிர்காலத்துக்குமான உழைப்பு இதுவென்று.

உயிர் இருப்பது வீழாது ...

சாமானிய டைரி 4:

திருமணமான அந்தத் தோழி பல மாதங்களுக்குப் பின் என்னை அழைத்தாள். "நேற்று எதிர்பாராத நேரத்தில், முன்பின் அறிமுகமில்லாதவரிடமிருந்து ஒரு பாராட்டுக் கிடைத்தது. இப்போதுவரை அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

சுய சிந்தனையுடைய பெண் அவள், அவளே தொடர்ந்தால் "சின்ன அங்கீகாரம் கூட இவ்ளோ சந்தோச்சம் கொடுக்குது ... ஏன் தெரியுமா?. நம்ம குடும்ப அமைப்பு, பாராட்டு நிறைந்ததாவும், மகிழ்ச்சி கொடுப்பதாவும் இல்ல."

பின் கொஞ்சம் புலம்பினாள், "நான் என் சுயத்தை இழக்காம இருப்பதே ஒரு போரட்டமா இருக்கு. 25 வயசுக்குள்ள நம்ம வாழ்க்கை முடிஞ்சிட்டா என்ன"

இந்தியக் குடும்பங்கள் அழியுதேனு பலரும் பேசராங்க. தினமும் எத்தனையோ செய்திகள் படிக்குறோம். "அதுக்குள்ள என்ன உயிர் இருக்கு? உயிர் இல்லாவிட்டால் அது அழியத்தான செய்யும்?"

சக மனிதர்கள், நேசத்தை பரஸ்பரம் வெளிப்படுத்தும் இடமாக இல்லாத குடும்பம், ஒருவர் மீது இன்னொருவர் ஆதிக்கம் செலுத்தும் இடமாக இருப்பது அதன் பலவீனம்.

அவள் ஆதிக்கத்தின் பால் வெறுப்புற்றிருந்தாள், திணிக்கப்பட்ட கடமைகளை வெறுத்தாள், இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கைதான் அவளுக்கு உயிராக இருந்தது.

உயிர் இருக்கிற எதுவும் வீழாது ...

சாக்கடையில் விழுகும் பந்துகள் ...

சாமானிய டைரி 3:

ஒரு பிராமண நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். ஆம் நான் பேசும்போது அவர் பிராமணராக நான் என்னை உயர்வாக நினைத்துக் கொள்வதில் என்ன தவறு ? என்ற எண்ணத்தில்தான் இருந்தார். இத்தனைக்கும் அவர் ஒரு நடுத்தர வர்கம், ஒரு நிர்வாகத்துக்கு பணிந்து வேலை செய்பவரும் கூட.

நான் சாதிப் படிநிலைகள், படிநிலைகளைப் பாதுகாக்கும் தீட்டு, தீண்டாமை, அகமண முறை உள்ளிட்ட கற்பிதங்களை விளக்கினேன். அப்போது அவர் எனக்கு ஒரு உதாரணம் சொன்னார். "சிறு வயதில் நான் கிரிக்கெட் விளையாடுவேன். பந்து சாக்கடைக்குள் விழுந்துவிட்டால், நான் ஒதுங்கி நின்றுகொண்டு, என் நண்பனை எடுக்கச் சொல்வேன். என் கை அழுக்காகாமல், விளையாட்டும் தொடரும்... இது என் இயல்பு." என்று சொன்னவர் - அந்த சாமர்த்தியத்தில் என்ன தவறு என்று கேட்டார்.

நான் என் கிரிக்கெட் விளையாட்டு அனுபவத்தைச் சொன்னேன், "நாங்கள் ஆளுக்கு ஒரு குச்சியை எடுப்போம். பந்துக்கு முட்டுக் கொடுத்து, மெதுவாக சாக்கடையிலிருந்து வெளியே எடுப்போம். புல் மேட்டில் உருட்டி அதன் சகதியை அகற்றுவோம். பின் கொஞ்சம் தண்ணீர் விட்டு, பந்தை சுத்தமாக்கி எல்லோரும் விளையாடுவோம். கூட்டு உழைப்பின் மகத்துவத்தால் எங்கள் பிரச்சனை தீர்ந்தது. யாரும் அங்கே ஏமாளியில்லை" என்று சொன்னேன்.

சுயநல சிந்தனையின் அடிப்படையில் தீர்வுகளை அணுகும்போது, அல்பமான தீர்வுகளே கிடைக்கின்றன. அதுவே தனித் தனித் தீவுகளாக மனிதர்களை மாற்றுகிறது. இன்றைக்கு நாம் பின்தங்கியதொரு சமூகமாக இருக்கிறோம்.

இணைந்த கரங்களின் வலுவே, உலகத்தின் உன்னதம் ...

இது குடும்பங்களின் பிரச்சனை ...

சாமானிய டைரி 2:

நேற்று Dhamayanthi பகிர்ந்திருந்த ஒரு சம்பவம் மனதை பாதித்தது ...

ஈக்காட்டுத்தாங்கல், ஆம்வே பக்கம் ஒரு பெண் ஸ்கூட்டியில் அவளோடு ஒரு ஆண் பேசியபடி இருந்தான். சடாரென, அந்தப் பெண்ணை அவன் வாகனத்திலிருந்து இழுத்து கீழே எறிந்தான். பக்கத்தில் மெட்ரோ வேலைக்காக தோண்டப்பட்ட கல்/ மண் குவிந்த இடத்தில் ஒரு பந்து மாதிரி தெறித்து விழுந்தாள்.

உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் என்னவென்று அவனை நெருங்க ...
"Family பிரச்னை..நீங்க போங்க ..."
அந்தப் பெண் நெஞ்சைப் பிடித்தபடி வண்டியில் அமர்ந்து
“என் Husband தான்... ஷாப்பிங் போலாம்னு கூப்பிட்டேன். அவர் ப்ரெண்டோடப் போயிட்டு இப்ப தான் வந்தார். ஏன்னு கேட்டேன்... அதனால சண்டை" என்றபடி அவர் கண்களில் நீர் ததும்பியது.

இதைப் பார்த்த அவன் மமதையுடன் “என்ன சீன் போடுற என்று முறைத்தான்." தமயந்தி அவனை திட்ட தொடங்கியதும், அந்தப் பெண் “வுட்டுருங்க... அவர் இன்னும் அடிப்பார்”என்று தணிந்த குரலில் சொன்னது.
----

இந்த ஒரு சம்பவத்தில் பின்னணியை ஆராய்ந்து தீர்ப்புச் சொல்வது நம் வேலையல்ல. ஆனால், சக மனிதர்களுக்குள்ளான பிணக்குகளை தீர்க்கும் ஜனநாயக வழிமுறைகளில் எதுவும், தன் மனைவிக்கு பொருந்தாது என்ற மனநிலையை அந்த ஆணிடம் காண முடிந்தது.

ஆளுமை நிறைந்தவர் என்பதை, உடல் வலிமையும், ஆதிக்கமும் முடிவு செய்வதில்லை. மாறாக நமக்காக கவலைகொள்ள எத்தனை மனிதர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதுதான் நம் ஆளுமையை உருவாக்குகிறது.

சிறியோரை இகழ்தல் இலம் என்ற புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வருகிறது. சக மனிதனின் சுய உணர்வுகளை எத்தனை காயப்படுத்துகிறோமோ, அத்தனை கீழான நிலைக்கு நாம் நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். உயர்வு நம்மிலிருந்து தொடங்கட்டும்.

லாரியோடு வரும் குழாய்ச் சண்டை ...

சாமானிய டைரி 1:

குழாயில் குடிநீர் வரும் வசதியுள்ள எங்கள் பகுதியில் இன்று ஒரு லாரி வந்திருந்தது. "இப்பவே, லாரில தண்ணி பிடிக்க வேண்டிய நிலை ஆகிடுச்சே" என்ற புலம்பல்கள் கேட்டன.

அவசரம் எல்லோரது கண்களிலும். பெரும்பாலான பெண்கள் அருகில் உள்ள பனியன் கம்பனியில் வேலை செய்கிறவர்கள்.

நீலவண்ண தண்ணீர் தொட்டிக்கு முன் வரிசையில் நின்றபடி குடங்களோடு காத்திருந்தார்கள். தண்ணீர் விநியோகம் தொடங்கியதும், சலசலப்பு அடங்கியது. அவரவர் வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடத்தை வைத்துவிட்டு, அடுத்த முறைக்காக மீண்டும் வரிசையில் நின்றார்கள்.எல்லோருக்கும் இரண்டு நடை தண்ணீர் கிடைக்கவிலை.

அவரவருக்கு கிடைத்த தண்ணீரோடு திருப்திப் பட்டுக்கொள்ள முடியாது. தண்ணீர் அத்தியாவிசயமாகிற்றே.

லாரி சிரியது, வரிசையில் நின்றவர்கள் அதிகம். ஏமாற்றத்தோடு திரும்பியவர்களில் சிலர் கவுன்சிலருக்கு அழைத்திருக்க வேண்டும். ஆனால், லாரி மீண்டும் வரவில்லை.

அடுத்தமுறை லாரியோடு வாய்ச் சண்டையும் வரலாம். பற்றாக்குறை அதைத்தான் உணர்த்தியது.

Labels