Showing posts with label ஆம் ஆத்மி. Show all posts
Showing posts with label ஆம் ஆத்மி. Show all posts

கெஜ்ரிவால் அரசியல் - சாமனியனின் ஜனநாயக தாகம் !

தன்னை அடித்த ஆட்டோக்காரரை சந்தித்து பூங்கொத்து கொடுத்திருக்கிறார். மேலும், என்னை ஏன் அடித்தீர்கள்? என்று காரணத்தை விசாரிக்க, அந்த ஆட்டோ டிரைவருக்கு அழுகையே வந்துவிட்டது. அரவிந் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை வரவேற்புக்கு உரியது.

இதனை தேர்தல் ஸ்டன்ட் என்று சொல்லிவிடலாம். ஏற்கனவே இடதுசாரிகள் எளிமையாகவும், மக்களுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார்களே இவர்கள் மட்டும் எளியவர்கள் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால், அது சரியான விமர்சனம் அல்ல.

தில்லி மெட்ரோ சானல் அளவுக்கே விசாலப் பார்வை கொண்ட ஊடகங்களின் தேசிய செய்தியாளர்களின் கவனத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். முழுமையான கொள்கை சார்ந்த மாற்று சக்தியாக அவர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதனைத் தாண்டியும் இந்தப் பிரச்சனையை வேறு ஒரு கோணத்தில் பார்ப்பது அவசியம்.

ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு வளரும் பகுதிகளான தில்லி, ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக மட்டுமே உள்ளன. இந்தக் கட்சிகள் பெரு முதலாளிகளின் ஏஜெண்டுகளாக மாறிவிட்டதால், பிராந்திய மக்களின் உணர்வுகளையோ, ஏழை நடுத்தர, சாமானிய மக்களின் மெய்யான பிரச்சனைகளையோ பேசுவதில்லை. நாங்கள்தான் ஆள்வோம் என்ற திமிரோடு பவணிவரும் காங்கிரஸ் - பாஜக கொள்கை சார் விவாதத்தை ஏற்படுத்தவும் தயாரில்லை.

இந்த நிலையில், ஒருபக்கம் இடதுசாரிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் - மாநிலக் கட்சிகள் இல்லாத இடங்களில் ஆம் ஆத்மிக்கும் செல்வாக்கு உருவாகிறது. தேசம் ஒரு முழுமையான ஜனநாயகத்துக்கு ஏங்குவதும்... சாதாரண மக்களை முன்நிறுத்திய விவாதத்தை விரும்புவதும் இதன் மூலம் வெளிப்படுகிறது.

#ஜனநாயகம்வெல்லவேண்டும்

ஏனிந்த சரணாகதி Mr. கெஜ்ரிவால்??

ஒருபக்கம் அம்பானியை விமர்சித்துவிட்டு - இந்திய முதலாளிகளிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார் கெஜ்ரிவால். முதலாளிகள் அமைப்பான சிஐஐ நடத்திய சந்திப்பில் அவர் கொடுத்த விளக்கத்தில் 'அரசாங்கம் தொழில் நடத்தக் கூடாது' என பொதுத்துறைகளை அரசு கைவிடும் நடவடிக்கை உட்பட பல தாராளமய பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார்.

ஆம் ஆத்மியின் கொள்கைகள் என்ன? என்று பலதரப்பு கேள்வி எழுப்பியபோதும் வாய் திறக்காதவர்கள் - அம்பானி எதிர்ப்பால் தொழிலதிபர்களின் பகைமைக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அவசரத்தில் இதைச் செய்துள்ளது வெளிப்படை.

ஒவ்வொரு, பட்ஜெட் உரை தயாரிப்பின்போதும் - பெரிய முதலாளிகளைச் சந்திப்பதும், கோரிக்கைகளைக் கேட்பதும் காங்கிரஸ், பாஜகவின் வழக்கம். 'ஏன் விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்திப்பதில்லை' என்ற கேள்வியை இடதுசாரிகள் முன்வைப்பார்கள்.

ஆனால், அரசு இதுவரையிலும் தன் நிதிநிலை அறிக்கை மீதான சாமானியர்களின் எதிர்பார்ப்பை கேட்டதில்லை. 'சாமானியர்களின்' கட்சியான ஆம் ஆத்மியும், தற்போது அதைத்தான் செய்திருக்கிறது.

உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் என்ன? என பலமுறை கேட்டும் விளக்கம் கொடுக்க முன்வராதவர்கள். தற்போது பெரிய நிறுவனங்களிடம் போய் விளக்கம் கொடுத்திருக்கின்றனர். கெஜ்ரிவாலின் விளக்கங்களில் பல அபத்தமானவை. அப்பட்டமாக, தொழிலதிபர்களின் மனதில் இடம்பிடிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவை.

இந்த விருப்பத்தில் அவர்கள் வெற்றியடையலாம். ஆனால், அந்த வெற்றி, சாமானியர்களின் வெற்றியாக இருக்கப்போவதில்லை.

கெஜ்ரிவால் ராஜினாமாவும் - அம்பலமான கூட்டணியும்....

அரவிந் கெஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு சரியானதே.

இதுதான் நடக்குமென்பது நமக்கு முன்னமே தெரியும். மத்திய ஆட்சியில் காங்கிரஸ் - பாஜக அல்லாத சக்திகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் - அவர்களை ஆட்சிக்கு குந்தகம் விளைவித்ததுடன், சரியான சமயத்தில் கவிழ்த்துவிடுவதிலும் காங்கிரஸ், பாஜக வெட்கமின்றி கைகோர்த்துள்ளனர்.

விவாதிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சனைகளின்போதும், மக்கள் விரோத மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்போதும் - வெற்றுக் கூச்சல்களினிடையே - ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கும் பணியிலும் இந்தக் கூட்டணி தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கூட்டை அம்பலப்படுத்தியது வரவேற்புக்கு உரியது.

நேற்றையை தில்லி சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும் எவரும் - ஊழலுக்கு எதிரான எந்த விவாதத்தையும், உறுதியான நடவடிக்கையையும் கண்டு காங்கிரசும் பாஜகவும் எத்தனை அச்சமடைகிறார்கள் என்பதை கண்கூடாக பார்த்திருக்க முடியும்.

நிர்வாக அனுபவமற்ற, இன்னும் தங்களை முழுமையாக வெளிப்படுத்தியிராத புதிய சக்திகள் என்றாலும், ஆம் ஆத்மி இந்த சூழலில் சரியான முடிவையே எடுத்துள்ளது. அதிகாரிகள் - அரசியல்வாதிகள் - பெறு நிறுவனங்களின் கூட்டணியை முடிந்த அளவு அம்பலப்படுத்தியுள்ளனர்.

ஆம் ஆத்மி தொடர்பான விமர்சனங்கள் என்ன இருந்தாலும் - தில்லி மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு குறைந்தபட்ச வாய்ப்பு என்ற முறையில் அவர்கள் வரவேற்புக்கு உரியவர்கள். - அரசியலற்ற பொதுமக்களை களத்திற்கு இழுத்துவந்து, சில உண்மை அனுபவங்களைக் கொடுத்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் Gnani Sankaran சொல்வதைப் போல, 'ஆம் ஆத்மி என்பது ஒரு கருத்தாக்கம்'. அது நமக்கு கொடுத்துள்ள அனுபவங்கள் முக்கியமானவை.

#எல்லாவற்றையும்_மக்கள்_பார்க்க_வேண்டும்...

ஆம் ஆத்மி - எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

ஆம் ஆத்மி - விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கட்சியல்ல. ஆனால் எந்த நடவடிக்கையை விமர்சிக்கிறோம் என்பதில், விமர்சகளின் சாயம் வெளிப்படுகிறது.

மின் கட்டணக் குறைப்பு, தண்ணீர் வியாபாரத்திற்கு கடிவாளம், அந்நிய மூலதனத்திற்கு அனுமதி மறுப்பு, ஊழல் எதிர்ப்பாளர்களை பாதுகாத்தல், வழிகாட்டுதல் போன்ற நடவடிக்கைகளை, ஆட்சியதிகாரத்திற்கு மிகவும் புதிய அந்தக் கட்சி செய்துள்ளதை வரவேற்க வேண்டும்.

ஆனால், மக்களுக்கு சுமை குறைப்பதை ஊடகங்கள் சாடியதும், சில அமைச்சர்கள் - ஊடகங்களுக்கு பணிந்து போயினர். தனக்கு இதுதான் கொள்கை என்று திடமாகச் சொல்லாத அவர்களின் இந்தப் போக்கு சரியானதில்லை.

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் மத்தியிலும் களம் காண நினைப்பது தவறில்லை. அதற்காக 'சாதிப் பஞ்சாயத்துகள்' சரியாக நடக்கின்றன என்ற ரீதியில் கருத்து சொல்வது சந்தர்ப்பவாதமே அன்றி அறிவுடைமை அல்ல.

அடுத்தது - இன்றைக்கு தில்லி காவல்துறை கண்டித்து கெஜ்ரிவால் தர்ணாவில் இறங்கியுள்ளது. இந்திய ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க மறுப்பது மத்திய ஆட்சியாளர்களின் தவறான போக்காகும். தில்லி அரசின் கையில் காவல்துறை இல்லை என்ற நிலை சரியில்லை. இதற்கு எதிரான போராடுவது கூட்டாட்சிக்கு அவசியமானது.

ஆனால், எந்த வழக்கும் பதியாமல், நள்ளிரவில் திடீர் சோதனை, அமைச்சர் சொல்லிவிட்டார் என்பதற்காக யாரையும் விசாரிப்பதென்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நடைமுறை அல்ல. மேலும், கருப்பர்கள், ஆப்ரிக்கர்கள் என்றாலே போதை வியாபாரிகள் என்கிற பொதுப்புத்திக்கு ஆட்படுவதெல்லாம், ஏற்க முடியாதது.

தத்தி தத்தி நடக்கும் ஆம் ஆத்மியில் நேர்மையாளர்களும் இருக்கிறார்கள், சந்தர்ப்பவாதிகளும் உள்ளனர். நல்ல விமர்சனங்கள், பக்குவப்படுத்தலாம். பாஜகவோ, காங்கிரசோ அந்த நோக்கத்தில் தங்கள் விமர்சனங்களை முன்வைப்பதில்லை.

# எல்லாவற்றையும் மக்கள் பார்க்கட்டும் ...

ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கல் ...

மிஸ்ட் கால் குடுத்தாலே போதும், மெம்பர் ஆகிடலாம் என்பதை விட அரசியலை யாராவது கேலி செய்துவிட முடியுமா??

ஆம் ஆத்மி புதிய கட்சி, அரசியலில் புதுமைகளை செய்ய நினைக்கின்றனர். ஆனால், இப்படிப் போய், பழைய குட்டையில் மூழ்கிவிட்டு, என்ன புதுமையை படைக்க முடியும்??

இப்போது செயல்படும் கட்சிகளை உற்று கவனித்தால், அவற்றின் உறுப்பினர்கள் 'ரசிகர்' பட்டாளமாக மாற்றப்பட்டிருப்பது தெரியும். கட்சியின் தலைவர்கள் மீதான விருப்பத்தை தவிர எதையும் தங்கள் அரசியலாக அறிந்திருக்காத உறுப்பினர்கள் இருப்பதால்தான், கட்சிகள் எத்தகைய துரோகத்தையும் துணிந்து செய்கின்றன.

ஆம் ஆத்மியும் உறுப்பினருக்கான அடிப்படைத் தகுதிகளையெல்லாம் நீக்கிவிட்டு, மிஸ்ட் கால் கொடுங்கள், எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். கெஜ்ரிவால் ரசிகர்கள், அல்லது அரசியலற்ற ஏராளமானோரை இது ஈர்க்கலாம். ஆனால், இதனால் ஒரு அரசியல் மாற்றை ஏற்படுத்த முடியுமா??

ஒரு மெய்யான மாற்று அரசியல் - அரசியல் உணர்வுபெற்ற இளைஞர் பட்டாளத்தால் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு உறுதியான கொள்கைப் பரப்புரையே இப்போதைய அவசியமாகும்.

ஒரு அரசியல் கட்சிக்கான அடிப்படை கொள்கை, கொள்கை உணர்ந்த உறுப்பினர்கள், உறுப்பினர்களுக்கென தகுதி, அவர்களின் பணி, அர்ப்பணிப்புக்கு ஏற்ற வகையில் பதவிகள், கட்சியின் முடிவுகளை எடுப்பதிலும், அவற்றை விமர்சிப்பதிலும் உரிமைகள் என்ற அடிப்படையில் ஒரு கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இருப்பதுதான், ஒரு கட்சியை ஜனநாயகத் தன்மையோடும், கொள்கையிலிருந்து மாறாமலும் நீடிக்கச் செய்யும்.

# ஆம் ஆத்மியின் பயணத்தில், இது ஒரு சருக்கலாகும் ...

Labels