எல்லோரும் தந்தையர் தின வாழ்த்துச் சொல்கிறார்கள்...
அப்பா இருந்த வரைக்கும் இப்படியொரு தினத்தை கொண்டாடியதில்லை. அப்பா, இல்லாதபோது ... சுற்றிச் சுற்றி - எத்தனை அப்பாக்கள் தென்படுகிறார்கள். தினமும் சாலையில், நிறைய முதியவர்களை பார்ப்பதுண்டு. உடல் தளர்ந்தாலும், 8 மணிப் பேருந்தின் கதவருகே தொங்கிக் கொண்டு பணிக்குச் செல்லும் அப்பாக்களை என்னவென்று சொல்வது??
பெற்ற மக்களுக்கு அன்னியமாகும் உளவியலின் வலி கொடிது. அந்தக் கண்ணீர்தான் அதிகம் காயப்படுத்துகிறது. மகன்கள் உணர்ந்திடாத, ஒருதலைக் காதலனாய் வெந்து மடிகிறான் அப்பன்.
எல்லா அப்பன்களுக்கும் முதுமை உண்டு. முதுமை - நமது வாழ்க்கையின் மற்றொரு முகம்.
குழந்தையாய்ப் பிறந்து, குழந்தையாகவே இளைஞனாகி, பின் தலை நரைத்து - திடீரென செத்துப்போகும் சாதாரண வாழ்வில். அப்பனாவது, ஒரு பரிணாம வளர்ச்சி.
குழந்தை, காதலனாகி, கணவனாய்ச் சறுக்கி பின் - ஒரு குழந்தையின் மெல்லிய தீண்டலையும், வலிய நிராகரிப்பையும் தாண்டி அப்பனாய் பிறத்தல் ஒரு தவம்.
என் அப்பா - தி.மு.ராசாமணி, தனது மரணப் படுக்கையில் வாழ்நாள் உழைப்புக்கான விருதைப் பெற்றபடி ... |
-
தோழர், முதலில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது தோழர்கள் யாருடனும் நான் தொடர்பில் இல்லை. இந்த இடுகையை படிக்க நேர்ந்த போதுதான் தெரிந்து கொண்டேன். தோழர் ராசாமணியை இழந்து நிற்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDelete