திமுக தன்னை நியாயப்படுத்த முடியுமா??

திமுகவின் ஊழல் அரசியல் குறித்து சிபிஐ(எம்) தோழர் வரதராஜன் பேசியிருந்ததில் சிறு பகுதியை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.

(CPIM Tamilnadu கம்யூனிஸ்ட்டுகள் உண்டியல் கண்டுபிடித்ததால் தான் இன்றுமக்கள் மத்தியில் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கிறோம். திமுக சூட்கேசைக் கண்டுபிடித்ததால் தான் 5 ஆண்டு பதவியிலும், 5 ஆண்டு ஜெயிலிலும் இருக்கிறார்கள்.  -தோழர் கே. வரதராசன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.)

அதில் வந்த திமுக நண்பர்கள் கொதிப்படைந்துவிட்டார்கள். அதிமுக விடம் கூட்டணிக்காக காத்திருந்து ஏமாந்தவர்கள்தானே கம்யூனிஸ்டுகள் ... என ஆரம்பித்து தங்கள் மார்க்சிய பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதிமுகவோடு கம்யூனிஸ்டுகள் கூட்டணி ஏற்படுத்த விரும்பியது உண்மை. அதிமுகவும் கம்யூனிஸ்டுகள் நடத்திய வகுப்புவாத எதிர்ப்பு மாநாடு உள்ளிட்டு பல நிகழ்வுகளுக்கு தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள் என்பதும் உண்மை. இந்திய தேர்தல் முறையில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் மற்றவரை விட அதிகம் பெற்றால்தான்தான் வெல்ல முடியும். எனவே, அனைத்து கட்சிகளுக்கும் கூட்டணி தேவைப்படுகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பரவலாக இருப்பதால் தொகுதி உடன்பாடு செய்தால், நாடாளுமன்றத்தில் தங்கள் போராட்டக் குரலை ஒலிக்க முடியும் எனக் கருதி தொகுதி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்கிறார்கள். ஆனால், அவர்கள் கொள்கை சமரசம் செய்துகொண்டதால சொல்ல முடியுமா?

சென்ற 3 ஆண்டுகளில் - கம்யூனிஸ்டுகள் நடத்திய முத்தாய்ப்பான போராட்டங்களையும், சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தது கம்யூனிஸ்டுகள் என வெளிப்படையாகச் சொல்ல முடியும். ஆனால், மத்திய ஆட்சியில் 'கூட்டணியாக' தேவையான அமைச்சர்களை கேட்டுப் பெற்ற திமுக - மத்திய ஆட்சியின் பொருளாதார நடவடிக்கைகளை வன்மையாக எதிர்த்ததுண்டா?.. மாநிலங்களின் சுயாட்சி விசயத்தில் என்ன சாதித்தது? ... சில்லரை வர்த்தகத்தின் அந்நிய முதலீட்டையேனும் தடுக்க முடிந்ததா?

அவற்றை விடலாம் ... இன்றைக்கு மின்வெட்டு தலைவிரித்து ஆடுவதற்கு காரணம் மின்சார சட்டம் 2003. இந்தச் சட்டம் மத்தியில் முன்வைக்கப்பட்டபோது திமுகவும், அதிமுகவும் இணைந்தே ஆதரித்ததுதானே உண்மை? ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா விசயத்தில் திமுகவின் 5 ஆண்டு மாநில ஆட்சிக் காலத்தில் நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தாதுமணல் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட பிரச்சனைகளில் கம்யூனிஸ்டுகள் அளவுக்கு போராடாவிட்டாலும், ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்களா? தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களில் திமுக களம் கண்டதுண்டா??

அதிமுகவை வாய்தா ராணி என வசைபாடிக் கொண்டே, தங்கள் மீதான வழக்குகளுக்கு நீதிமன்ற படிக்கட்டுகளில் எறிக் கொண்டிருக்கும் பணியைத்தானே செய்து வருகின்றனர்? திமுகவினர் ஆத்திரமடையலாம், ஆனால் தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கப் பாரம்பரியத்தை சிதைத்து ... அவர் முகத்திலேயே கரிபூசிய செயல்பாடுகளை நியாயப்படுத்திவிட முடியாது.

1 comment:

  1. அரசியல் ஆதாயத்துக்காய், பெரியாரின் கொள்கையையும், திராவிட இயத்தையும் நிர்மூலமாக்கி, ஊழல்களில், ஏமாற்று மோசடிகளில் திமுக.வினர் ஈடுபட்டதும், திராவிட கொள்கைகளை விட்டுக் கொடுத்து விட்டு பார்ப்பனியத்தை அவர் தம் ஊடகங்கள் ஊடாக வளர்ப்பதிலிருந்தே, அறியலாம்.. ஆனால் திமுக.வை விட மற்ற கட்சிகளும் நல்லோர் வல்லோர் என கூறவியலாது.. ஆகவே கட்சியை எடைப்போட்டு வாக்களிப்பதை விட வேட்பாளர்களை சீர்தூக்கி பார்த்து, வாக்களிப்பதே சாலச் சிறந்தது..

    ReplyDelete

Labels