முழுமையற்ற ஜனநாயகமும், மக்களும் ...

நேற்று சாலையோரக் கடை ஒன்றில், நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். கடைக்காரரின் நண்பர் அங்கிருந்து கிளம்பிக் கொண்டிருந்தார். அவரிடம் ஓடிச் சென்ற கடைக்காரர், மறக்காம 'கதிர் அரிவாளுக்கு' ஓட்டுப்போட்டுடுங்க என்று கேட்டுவிட்டு, காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார்.

காலையில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது "நமது வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன். நமது சின்னம் கை. காங்கிரசுக்கு வாக்களிப்பீர்" என்று கேட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தால் "ஆம் ஆத்மி" கட்சியின் வண்டி துடைப்பத்தோடு வந்தது. வெள்ளைக் குள்ளா அணிந்தவருடன் ஒரு டிப்டாப் இளைஞர் குலைந்து குலைந்து பேசிக் கொண்டிருந்தார். அனேகமாக ஆம் ஆத்மி மீது ஈர்ப்படைந்தவராக இருக்க வேண்டும். தொலைபேசியில் அவர்களின் எண்களைக் குறித்தபடி நகர்ந்தார்.

பிரச்சார வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட குரல் என்னை கடந்து சென்றது. "முரசு முரசு" என்ற பாடல் ஒலிக்க, "குஜராத்தை மிகச் சிறந்த மாநிலமாக மாற்றிய மகான் மோடியின் தலைமையில் இந்தியா" என அது உச்ச குரலில் வாக்குக்களைக் கேட்டது.

திமுகவினரும், அதிமுகவினரும் கிராமப்புறங்களில் தங்கள் கவனத்தை குவித்திருக்கிறார்கள். நகர மையத்தில் குஷ்புவும் வந்துவிட்டார். பாத்திமாபாபுவும் வந்துவிட்டார். நாம் தமிழர் கட்சியின் 'சீமான்' வேறு 2016 இல் நாங்கள் சட்டமன்றத்தில் போட்டியிடுவோம், இப்பொது இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பேசிச் சென்றிருக்கிறார். இன்னும் சுயேட்சைகள், வெற்றிபெருவோம் என்ற நம்பிக்கையில்தான் களம் காண்கிறார்கள்.

சூரியன் சுட்டெரிக்க, நிற்காமல் ஓடுகிறார்கள் ஒவ்வொருவரும். திடீர் மவுசு மக்களுக்கு புதிதில்லை. மெளனம் பழகுகிறார்கள். அன்றாட வேலைகளில் எதுவும் நிற்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல், திரும்பப் பெரும் உரிமை இல்லாத ஜனநாயகம்! நம்முடையது. குறைகள் நிறைந்த நம் தேர்தல் முறையை தெளிவாகவே கையாள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels