மொழியாக்கம்: இரா.சிந்தன்
உண்மையான மனிதர்களும், அவர்களின் சோகங்களும் மறக்கப்படும்போது - வளர்ச்சியின் உட்பொருள் வெறும் பொருளாதார வளர்ச்சியாகவும், படுகொலைகளை வெற்று எண்ணிக்கையாகவும் மாற்றப்படுகின்றன என்கிறார் நிஸ்ஸிம் மன்னத்துகரின்.
பேரரசுகள் சரியும். கும்பல் தலைவர்கள், அரசியல்வாதிகளின் கர்வத்துடன் அலைவார்கள். அந்த ஆயுதங்களின் கீழ் நம்மால் மக்களை ஒருநாளும் காண முடியாது. - பெரோல்ட் ப்ரெச்
தத்துவ ஞானி அன்னாஹ் ஆரென்ட், "அற்பமாக்கப்படும் கொடுந்தீங்குகள்" என்ற வாசகத்தை உலகிற்கு அளித்தார். படுகொலைகளைப் போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் மனநோயாளிகளாகவோ அல்லது சாடிஸ்டுகளாகவோதான் இருக்க வேண்டும் என்பதில்லை, பல நேரங்களில் மிகச் சாதாரமாண நபர்கள் தங்கள் அதிகார விருப்பத்தின் காரணமாக இதுபோன்ற வேலைகளைச் செய்கிறார்கள் என்று அவர் வாதிடுகிறார்.
2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரங்களில் 95 பேரை இனப்படுகொலை செய்த குழுவிற்கு, நரோடாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாயா கோட்னானி தலைமையேற்றிருந்தார். அவளுக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் முதலில் ஒரு மகப்பேறு மருத்துவராக மருத்துவமனையை நடத்திக் கொண்டிருந்தார். நரேந்திர மோடியின் ஆட்சியில் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் பெற்றார். 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் முக்கிய நபராக குற்றம் சாட்டப்பட்ட ஜக்திஸ் டைட்லர் ஒரு குறிப்பிடத்தகுந்த கல்வியாளர். சீக்கிய தாய்க்கு பிறந்து, கிருத்துவரால் வளர்க்கப்பட்டவர்.
ஒவ்வொரு 'அரக்கத்தனமான சம்பவங்களுக்கு' பின்னும், பாபு பஜ்ரங்கிகளும் தாரா சிங்கும் உள்ளனர். அப்படியே ஜக்திஸ் டைட்லர்களும், கோட்னானிகளும் உள்ளனர். ஆரென்ட்டின் விளக்கத்தின்படி சிந்தனையை இழந்த, திட்டமிட்ட குணநலன்களைப் பெறும்போது தீங்குகள் சாதாரணமாகிவிடுகின்றன.
சாதாரணமானவர்கள் பங்குபெற்று ஒரு தீமை நடக்கும்போது அவை சாதாரணமாவதுடன், அவை தங்களுக்கு எண்ணற்ற விளக்கங்களை உண்டாக்கி, தங்களை தனித்துவமாக்கிவிடுகின்றன. மதிப்பீடுகள் குறித்த குழப்பமோ, அதிர்ச்சியோ உண்டாவதில்லை. உண்மையில் தீமைகள் அப்படி தோன்றுவதே இல்லை.
அச்சமூட்டும் வகையில் தேர்தல் நடைமுறைகள் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளன, குஜராத் படுகொலைகள், ' வளர்ச்சியின் நாயகனாக' முடிசூடிக் கொண்ட பேரரசரின் நடைபாதையில் மேற்பூச்சாகிடும் வகையில் அற்பமாக்கப்பட்டு சாதாரணமாக்கப்படுவிட்டன. நரேந்திர மோடி பிரதமராகது குறித்து ஏதேனும் தார்மீக தடையோ, அச்சமோ இருந்திருக்குமானாலும் - தற்போது செய்யப்பட்டும் வரும் தேர்தல் கணிப்புகள், ஊடக வர்ணனைகள், அறிவார்ந்த கருத்துகள்அரசியல் விபசாரம் மற்றும் நிச்சயம் அமெரிக்கர்களின் சிந்தனைகளின் பெயரால் எழுப்பப்படும் அலையில் அவை கழுவப்பட்டிருக்கும்.
மனிதர்களின் பெருங்குற்றங்கள், எண்ணிக்கைகளாக ஆக்கப்படுவதில்தான் தீமைகள், சாதாரணமாகின்றன. உதாரணமாக குஜராத் படுகொலைகளை மதக் கலவரங்களென அழைக்க வேண்டும், சில இந்துக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என ஜகதிஸ் பகவதியும் அரவிந் பனகாரியாவும் சொல்லுகின்றனர். இது வெளிப்படையாகவே அந்த குற்றத்தின் அளவைக் குறைத்து, மனித சோகத்தின் வெம்மையை மறைப்பதாகும்.
சாமானிய மக்கள் கூட, குஜராத் கலவரங்களின் தார்மீக பொருப்பினை, குற்றம் நடைபெற்ற இடத்தில் இல்லாத அதன் முதலமைச்சர் மீது சுமத்தப்பட முடியாது எனக் கருதுகின்றனர். சட்டப்படியாக ஏற்கப்படும் ஆதாரத்தைத் தாண்டி எந்த தார்மீக களமும் இருக்க முடியாது. ஆனால், 2002 மற்றும் 1984 ஆண்டுகளில் பார்த்ததைப் போல அரசியல் சக்தி மிக்கதும், அதிகாரம் மிகுந்ததுமான - சட்டத்தை செயல்படுத்துவதுமான இயந்திரங்கள் ஆதாரங்களை அழிக்க முற்படும் சூழலில் ஆதாரம் என்பது என்ன?
2002 மற்றும் 1984 ஆண்டுகளில் நடைபெற்ற மரணங்களின் எண்ணிக்கை; மோடியின் இகழ்ச்சிக்குறிய விளக்கமும், அதற்கு சமமான ராஜிவ் காந்தியின் கருத்தும் - கணக்குகளின் சமன்பாட்டு விளையாட்டுகளின் பின்னால், மனிதர்களையும் அவர்களின் துன்பங்களையும் மறக்கக் கோருகின்றன.
தீமைகளை அற்பமாக்குவதற்கான மிகப்பெரும் ஆயுதம் 'வளர்ச்சி'. படித்த, நாகரீகமான மக்கள் மோடியை சாதாரணமாக்கிவிடுகின்றனர். எப்படியெனில் அவர் ஒரு 'வளர்ச்சியின் நாயகன்'. "ஆமாம், அவர் அந்த கலவரங்களுக்கு பொருப்புதாரியாக இருக்கலாம். ஆனால் குஜராத்தின் சாலைகளைப் பாருங்கள்" - இது ஒரு வித்தியாசமான தார்மீக மதிப்பீடுகள் கொண்ட உலகம், இங்கே ஜாக்கியா ஜஃப்ரியின் வலியும் வேதனையும், சாலைக்கு சமமாகிவிடுகிறது.
தீமைகளினூடே, வளர்ச்சியின் விளக்கம் அற்பமாகிடுகிறது. வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார வளர்ச்சியாக்கப்படுகிறது. மக்களோ, சுற்றுச் சூழலோ ஒரு பொருட்டே இல்லை. வளர்ச்சியின் வரம்பிற்குள், மீறக்கூடாத எந்த நெறிமுறைத் திட்டங்களும் இல்லை. தேசிய நிர்வாகத்தில் பாஜகவின் முதல் பிரவேசத்தில், வாஜ்பாய் முகமூடியாக இருந்தார், மோடியின் தலைமையிலான பாஜகவின் தற்போதைய முயற்சிக்கு வளர்ச்சி ஒரு முகமூடியாக இருக்கிறது.
வளர்ச்சி குறித்த அந்த அற்பமான புரிதல், மக்களின் கனவுகளை அடைந்துவிட்டது. குஜராத் மாடல் வளர்ச்சியின் ஜிடிபி உயர்ந்துகொண்டிருந்தபோது, மனித வளக் குறியீடுகள் வீழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது ஒரு மோசமான நிகழ்வுப் போக்கு. UNDP யின் சமன்செய்யப்பட்ட-சமத்துவமின்மைக் குறியீட்டின்படி (2011) குஜராத் கல்வியறிவில் 9 வது இடத்திலும், சுகாதாரத்தில் 19 மாநிலங்களின் வரிசையில் 10 வது இடத்திலும், 1999-2008 ஆண்டுகளில் மனித வளக் குறியீட்டு வளர்ச்சியின் அடிப்படையில் 23 மாநிலங்களின் வரிசையில் 18 வது இடத்திலும். பசி குறித்த இந்தியாவின் முதல் அட்டவணையில் (2009) 17 மாநிலங்களில் 13 வது இடத்திலும் உள்ளது (சத்திஸ்கர், பீகார், ஜார்கண்ட் மற்றும் மத்திய பிரதேசத்தை மட்டுமே குஜராத் மிஞ்சியுள்ளது). இருப்பினும், பகவதி போன்ற பொருளாதார அறிஞர்கள் குஜராத்தின் நிலைமையை சாதாரணமாக்கி, பொருளாதாரத்தை புகழ்வது அதிர்ச்சியளிப்பதாகும்.
இந்த கணக்கீடுகளும், மனித இழப்பு குறித்த பிற விபரங்களும் தேர்தல் விவாதமாக ஆக்கப்படாதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாகும். ஒருவேளை அப்படிப்பட்ட விவாதங்கள் நடந்தாலும் "வளர்ச்சியின் நாயகன்" என்ற தோற்றத்தின் மீதான நம்பிக்கையின் மீது அது வெளிப்படையான பாதிப்பை ஏற்படுத்திவிடாது. அதுதான் அற்பமாக்குவதன் வலிமை, அதற்கும் உண்மைக்கும் எந்த தொடர்பும் இல்லை.
வளர்ந்த நாடுகளும் கூட நகர்ப்புற தொழில் சார்ந்த எல்லையற்ற வளர்ச்சியின் விளைவாக ஏற்படும் மனித பேரழிவுகளையும், சுற்றுச் சூழல் ஆபத்துகளையும் உணர்ந்துகொண்டிருக்கும் சூழலில் நாம் கண்மூடித் தனமாக அதே குழியில் விழத் துணிந்துகொண்டிருக்கிறோம். உலக சுற்றுச் சூழல் அட்டவணையில் இந்தியாவின் தரம் 32 புள்ளிகள் குறைந்துள்ளது. கார்பரேட் தலைமையேற்ற குஜராத்தின் சதுப்பு நிலக் காடுகளும், மேய்ச்சல் நில வளமும் அழிக்கப்பட்டது இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டிய செய்திகளாகும்.
பெருந்தீங்குகளை அற்பமாக்கப்படுவதும், வளர்ச்சியும் - எதிர்க் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அனுதினமும் குறைந்துவருவது, வருத்தமளிக்கிறது. விதிவிலக்கின்றி, புதிய அதிகாரத்தை வரவேற்கும் விதமாக ஊடக நிறுவனங்கள் ஏற்கனவே சுய தணிக்கைக்கு தயாராகிவருவதாக பல செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.
சிறப்பு புலனாய்வுக் குழுவால் நடத்தப்படும் மோடி மீதான புலன்விசாரணை குறித்த புத்தகம் ஊடக வெளிச்சத்தைப் பெறுவதில்லை, அதற்கு பதிலாக அது பாஜகவுக்கு எதிரான பிரச்சாரமென ஒதுக்கப்படுகிறது. தேர்தல் குறித்த ஊடக விவாதங்கள் மனிதர்களின் நலவாழ்வு தொடர்பானதாகவோ, சுற்றுச் சூழல் கேடு தொடர்பாகவோ, மதிப்பீடுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பாகவோ இல்லை மாறாக தனிநபர்களுக்கிடையிலான மேம்போக்கான நாடகச் சண்டைகளாகிவிட்டன.
மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டதாகவும், நலவாழ்வுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களைப் பொருட்டாகக் கொள்ளாததாகவும் - பொருளாதாரமும், வளர்ச்சியும் சாதாரணமாக்கப்படுவதன் வழியே, பாசிசம் உருப்பெருகிறது. தார்மீக விருப்பங்கள் எப்போதும் கருப்பாகவோ, வெள்ளையாகவோ இருப்பதில்லை. ஆனாலும், அவை அவசியம். ஒருவேளை இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு தார்மீக சங்கடத்திற்கு இட்டுச் செல்லுமானால், புத்தனும், காந்தியும் பிறந்த இந்த மண்ணின் மனசாட்சி வெடிப்பின் விளிம்பிற்கு வந்துவிடும்.
// இது ஒரு வித்தியாசமான தார்மீக மதிப்பீடுகள் கொண்ட உலகம், இங்கே ஜாக்கியா ஜஃப்ரியின் வலியும் வேதனையும், சாலைக்கு சமமாகிவிடுகிறது.//
ReplyDeleteபொட்டில் அடிக்கும் வார்த்தைகள்..
இங்கு பெரும்பாலானோருக்கு தன் வீட்டில் துக்கம் நடக்காத வரை.. வளர்ச்சி தான் பிரமாதம்...
அதுவும் இட்டுகட்டப்பட்ட வளர்ச்சி....