"பயம் ஒரு தேசிய வியாதியாகிவிடக் கூடாது - அதுதான் என்னை உருத்துகிறது" என்று பிரகாஷ்ராஜ் சொன்னபோது கைதட்டி ரசிக்க வேண்டும் போல இருந்தது. தனியாக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு - உடன் ஒருவரும் இல்லையே என்று வருத்தமா இருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக இடதுசாரிகளாலும், தலித் இயக்கங்களாலும், சில திராவிட அமைப்புக்களாலும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வீண்போகவில்லை.
நீயா நானா நிகழ்ச்சியின் எல்லா பரிணாமங்களையும் நான் ரசித்தது கிடையாது. அதுவொரு கட்டமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட பேச்சு வணிகம்தான். ஆனாலும், சிலசமயம், அந்த மேடையில் தோலுறித்துக் காட்டப்படும் உண்மை நம்மை உலுக்கிவிடுகிறது.
பாண்டவர் பூமி படத்தில், அண்ணனே தங்கையை வெட்டும் காட்சி வைத்திருப்பேன். அந்தக் காட்சியின்போது பல திரையரங்களில் கைதட்டல் வந்தது. நான் அதிர்ந்து போனேன் என்ற சேரனின் வாக்கு மூலமும். அதே சமயம் சாதியத்தின் கடுமை குறித்து அறிந்து வைத்திருக்காத - அவரின் அறியாமையும் ஒரு சேர வெளிப்பட்டது அந்த நிகழ்ச்சியில்.
"உள்ளூர் ஸ்கூலுக்கு போகமாட்டேன். அந்த சாதிப் பசங்கள நாங்க 'அய்யா'னுதான் கூப்பிடனும்னு சொல்லுவாங்க" - என்ற 7 வயது சிறுவனின் உரையாடலை பதிவு செய்த கெளரவம் திரைப்பட இயக்குநர் ராதாமோகன் - இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இந்த வன்முறை தொடரப் போகிறதோ? என்று கேள்வியெழுப்பியபோது நெஞ்சில் முள் தைத்தது.
சாதியத்தை வேறோடு பிடுங்கியெரியும் வைராக்கியத்தோடு என்னைச் சுற்றி ஏராளம் தோழர்கள் இருக்கிறார்கள். அமைதியாக ஏற்றுக் கொண்டபடி ஒரு லட்சம் கோழைகள் இருக்கிறார்கள். அந்த அமைதிதான் இங்கே பிரச்சனை.
அமைதியை உடைக்கும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. காலை நாளிதழை விரித்தேன் - முதல் பக்கத்தில் தலித் தலைவர் ஜக்கையன் பேசிய செய்தி வந்திருந்தது. தோல் நாவலை சிலாகித்துப் பேசியிருந்த அவர் - சமீபத்திய போராட்டங்களின் மூலம் பெற்ற இட ஒதுக்கீடு காரணமாக 1125 அருந்ததிய மாணவர்கள் பொறியியல் கல்வி பெற்று வருவதை சுட்டிக் காட்டினார்.
போகவேண்டிய தூரமும் அதிகம். பாதையும் கடினமானது. உங்களிடம் வலிமையான நெஞ்சம் இருக்கும் மட்டும் வெற்றி நிச்சயம்... #ஆதரவாய் எழும்பும் ஊடகக் கீற்றுக்கள் - அது நீயா நானாவாக இருந்தாலும், கெளரவமாக இருந்தாலும் வரவேற்போம்...
http://www.dharumi.blogspot.in/2013/04/650.html
ReplyDelete