”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் பிரகடனம் இது.  மாநாட்டின் வேலைகள் வேக, வேகமாக நடந்துவருகின்றன. ஆனாலும், பிறப்பொக்கும்.. என்ற மன நிலையை தமிழரிடையே பரப்பும் வகையில் அவை செல்வதாகத் தெரியவில்லை. இதே நேரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாடு மாநாடு புதுக்கோட்டையில் நடைபெற்றது. தொழிற்சங்க அமைப்புகள், ஜனநாயக வாலிபர், மாதர் மாநவர் அமைப்புகளுடம் தலித் விடுதலைக்காக இயங்கும் அமைப்புகள் பலவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இவ்வமைப்பு..

கடந்த 3 ஆண்டுகளில்...
  • அருந்ததிய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை சட்டப்படியாக பெற்றுத்தந்தது. அதனை அமல்படுத்துமாறு அரசை போராட்டங்கள் மூலம் தொடர்ந்து நிர்பந்திப்பது.
  • தலித் மக்கள் மீது இந்த சமுதாயம் திணிக்கும் கேவலமான அடக்கு முறைகளையும், அதன் அடையாளங்களையும் எதிர்ப்பது.
  • கடவுள் வாழும் புனித தலங்களாக பெயரிடப்பட்ட கோவில்களிலும், பிணமெரிக்கும் சுடுகாட்டிலும் இன்ன பலவிடங்களிலும் கடைப்பிடிக்கப்படும் சமத்துவமற்ற நிலைக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என அவ்வமைப்பு குறிப்பிடத்தக்க போராட்டங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.

தலித் மக்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், சமூக நீதியை நிலைநாட்டுதல், உழைக்கும் வர்கத்திற்குள்ளான ஒற்றுமையை கட்டியெழுப்புதல் ... என மூன்று தளங்களில் அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் டீக்கடை பெஞ்சுகளின் விவாதத்திற்கான பொருளாக, கருணாநிதியும், ஜெயலலிதாவும், சினிமா பிரபலங்களும், தனிப்பட்ட தலைவர்களும் அவர்களின் வாழ்க்கையும், சினிமா கிசுகிசுவும், கிரிக்கட்டும் இக்கும் இக்காலத்தில் உத்தப்புரத்தையும், செட்டிபுலத்தையும் மைய விவாதப் பொருளாக்கியது அவர்கள் செய்த சாதனையே.

ஆனால், இந்த மாநாடு குறித்த செய்திகளை பல பத்திரிக்கைகளும் செய்தி ஊடகங்களும் வெளியிடவேயில்லை. முதல்வரின் புதல்வர்கள் தும்மினால் கூட செய்தியாக்கும் இன்றைய ஊடகங்களுக்கு, இதுவெல்லாம் செய்தியாவதில்லை.
”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வள்ளுவன் குறளின் முதல் அடி, நம் தமிழர் வாழ்க்கை உரைக்கும் செய்தியெனில் ... புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான சிதம்பரம் நடராஜர் கோவிலில், நந்தனார் நடந்துசென்ற பாதையைக் கூட சுவர் வைத்து மறைத்திருக்கும் அவலத்தை என்னவென்பது?. இதுபோன்ற சின்னங்களை மாற்றியமைப்பது, முற்போக்கான தமிழகளின் வரலாற்றுக் கடமையில்லையா?

இதோ அவர்கள் தம் முதல் மாநாட்டிலேயே அறிவித்திருக்கிறார்கள் .. “சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளிருக்கும் தீண்டாமைச் சுவரை இடித்து, தமிழக அரசு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் அந்தச் சுவர் இடிக்கப்படவில்லை என்றால், நாங்கள் முன்நின்று எல்லா பிரிவுகளையும் சேர்ந்த முற்போக்காளர்களை ஒன்று திரட்டி அந்த அவமானச் சின்னத்தை உடைத்தெரிவோம்.”

மனதிற்குள் இருக்கும் சுவர் தான், இவ்வாறு வெளிப்படுகிறது. அத்தகைய சுவர்களை உடைப்பதன் மூலம், ஆதிக்க எண்ணம் கொண்டோருக்கு எதிரான வலுவான தாக்குதலை நாம் நடத்துகிறோம். இவ்வாறான சுவர் இடிப்பு போராட்டங்கள், தமிழகத்தில் சாதி குறித்த வெளிப்படையான விவாதத்திற்கு வழிவகுக்கும். பிற்போக்கான சாதியடுக்கு சிந்தனைகள் பொது மேடையில் தூள்தூளாகும்.

தமிழகத்தில் பல கிராமங்களிலும், ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஒட்டுக்குடிசைகளில் வாழும் தலித் மக்களை முன்னேற்றவும், ”அவர்கள் அடங்கிப்போகப் பிறந்தவர்கள்” என்ற ஆதிக்க எண்ணத்தை மாற்றி எழுதவும், பொருளாதார அடிப்படையில் ஒரே பிரிவில் இருந்தாலும், சாதி வேற்றுமைகள் பேசி பிரிந்துகிடக்கும் உழைக்கும் தமிழினத்தை ஒன்றிணைக்கவும் ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. அந்த இயக்கம், பெரியார் துவங்கிய சமூக நீதிப் போரை முழுமையாக முடிக்கவேண்டியிருக்கிறது. சாதிப்படிநிலைகளாக பிரிந்துகிடைக்கும் மக்களிடையே, ”எல்லோரும் ஓர் குலம்” என்ற வாழ்நிலையை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இது தானாக நடந்தேரும் என்று நினைத்தால், அவர் முட்டாள்களின் சொர்கத்தில் வாழ்கிறார் என்று பொருள். நாம்தான் முடிக்க வேண்டும். அதற்கென செயல்படத் துவங்க வேண்டும், இன்றே, இப்பொழுதே .. இந்த நொடியே .. துவங்குவோம். 
நாளை நமதே ... இன்று செயல்பட்டால் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels