நேரம் - வெற்றிபெற்றது நல்ல நேரமா?

நேரம் – படம் பார்த்ததை அதன் வழியிலேயே விளக்கினால் …

மிகத் தாமதமாகச் சென்றதால் - தியேட்டர் வாசலில் ‘குட்டி புலி’ போஸ்டர் ஒட்டியிருந்தது கெட்ட நேரம் ... குட்டி புலி காலையில்தான் ரிலீஸ் என்பதால் இரவுக் காட்சி பார்க்க முடிந்தது நல்ல நேரம் ... 

நேரத்தில் 2 வகை - ஒன்று நல்ல நேரம், மற்றொன்று கெட்ட நேரம் என்பதாக தொடங்கும் அந்தப் படம் - பொருளாதார நெருக்கடி கூட கெட்ட நேரம் என்று விளக்குவது - மக்களை நேரம் குறித்த மூடநம்பிக்கையில் எந்த அளவுக்கு ஏமாறுகிறது என்பதைக் காட்டுகிறது. – போகிற போக்கில் அந்த வாதத்துக்கு வக்காலத்து வாங்குவதாக அமைந்துவிடுவது இந்தப் படத்தின் பெரும் குறையே …

நல்ல நேரம், கெட்ட நேரம் போன்ற கற்பிதங்களை சாமானியர்கள் ஒரு இடைக்கால நிவாரணமாகக் கொள்கின்றனர். ஆனால், இந்த பொய்மைக் கருத்துகளே பின்னர் ஜாதகம், ஜோதிடம் – மந்திரத் தகடு, தனலட்சுமி யந்திரம், ராசிக்கல் மோதிரம் என மோசடி வியாபாரங்களுக்கு துணையாகிவிடுகின்றன.

’நேரம் – அந்த அளவுக்கு மூட நம்பிக்கைக்கு துதிபாடவில்லை என்பது ஆறுதல்.

’நேரம்’ சில யதார்த்தங்களை – மனதில் தைக்குபடி பதித்துவிட்டுச் செல்கிறது.
பிரச்சனைகளை – ஆணும், பெண்ணும் அணுகும் விதங்கள். நட்பின் யதார்த்தம். கந்துவட்டியின் பிடியில் மாட்டிக்கொள்ளும் நபர்களின் மன உணர்வுகள் என அத்தனையையும் நம் உணர்வுகளில் வடித்தெடுக்கிறது.

இயல்பான காதல், பதபதைப்பு, துன்பம், நகைச்சுவை என புதிய இயக்குநர்கள் – வாழ்க்கையின் சாரத்திலிருந்து கதைகளை எடுக்கிறார்கள். கதைகளே சூப்பர் ஸ்டாராக வளர்ந்துவரும் இந்த வளர்ச்சி தலையில் வைத்து கொண்டாடத் தகுந்ததாக இருக்கிறது.
கேமராவின் கண்களில் – சுமாரான மனிதர்கள் கூட அத்தனை அழகாய்த் தெரிகிறார்கள். எடிட்டிங், பின்னணி இசை என ஒவ்வொன்றும் படத்துக்கு பலம்.

நேரம் குழுவினருக்கு வாழ்த்துகள் … # உங்கள் வெற்றிக்கு நேர்த்தியான உழைப்பே காரணம். நேரம் நல்லா இருந்ததால் நீங்கள் இப்படியொரு வெற்றியை சுவைத்திருக்கவில்லை.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels