திமுக வுக்கு இது மீட்சிக் காலமா??

திமுக - தனது அரசியல் அசவுகரியத்தை உணர்ந்துகொண்டிருக்கும் காலம் இது. காங்கிரசுடன் கூட்டணி இனி கிடையாது என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

இந்த முழக்கம் அவர்களுக்கு ஓராளவு துணை செய்யலாம். மனசாட்சிக்கு நியாயம் தேடும் திமுக தொண்டர்கள் - களத்தில் செயல்படுவதற்கு உள்ளூக்கமாக அமையலாம். ஆனால், மத்திய ஆட்சியின் அத்தனை பாவங்களையும் காங்கிரசின் மீதே கழித்துவிடலாம் என்று நினைத்தால் அது மூட நம்பிக்கையாகவே முடியும். 

தமிழகத்தின் வளர்ச்சியில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு எத்தனை இன்றியமையாததோ - அது போலவே, இன்று சமூக நீதி இயக்கங்கள் தேக்கமடைந்து வருவதற்கும் - ஆங்காங்கே சாதி அமைப்புக்களும், மத அமைப்புக்களும் தலையெடுக்க முனைவதற்கும் - திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு உண்டு.

இன்றைக்கு, ஏதோ ஒரு அடையாளத்தை மட்டும் முன் நிறுத்தும் பிரிவினை சக்திகள் - துளிர் விடத் தொடங்கியுள்ளனர். இனத் தூய்மை, மதத் தூய்மை பேசுவதன் மூலம் மக்களுக்குள்ளே பிரிவினை வளர்க்கின்றன - உலகமயமாகலால் சிதைக்கப்பட்ட பெரும்பாலான நாடுகளில் இத்தகைய சக்திகளே ஆதிக்கம் செலுத்துவது - யதேட்சையான நிகழ்வல்ல.

ஜனநாயக இயக்கங்களில் ஏற்படும் சிதைவு - சமூகத்தில் நம்பிக்கையற்ற சூழலையே வளர்த்தெடுக்கும். இன்றைக்கு தமிழகம் அத்தகைய மனநிலையில்தான் இருக்கிறதென்பதை சொல்ல வேண்டியதில்லை.

தொடக்க காலத்தில் தன் எல்லா ஊடக முயற்சிகளிலும் பகுத்தறிவுக்கு விதை போட்ட திராவிட இயக்கம் - தன் தற்கால தலைமுறையை எப்படி வடித்திருக்கிறது??? - அதிகார அரசியல் - சொகுசு வாழ்க்கைக் கனவுகளில் மிதப்பவர்களாக - அதன் மூன்றாம் கட்டத் தலைவர்கள் வரைக்கும் மாறியிருப்பது ஏதோ விபத்தல்லவே.

இந்தக் கேள்விகளை தனக்குத் தானே எழுப்பிக் கொள்ளாத வரையில் - திமுகவின் மீதான நப்பாசைகளை வளர்த்துவதில் அர்த்தமில்லை ... 

#மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels