உன் புருசன் இன்னும் ஊர் சுத்த கெளம்பலயா?

’உன் புருசன் இன்னும் ஊர் சுத்த கெளம்பலயா? - 

’இதா போய்ட்டாய்ம்பா ... போடா போ ...’


-
தொலைக்காட்சியில் இந்தக் காட்சி ஓடிக் கொண்டிருந்தபோது - விழுந்து விழுந்து சிரித்தார் பக்கத்து வீட்டு அக்கா. அருகே இருந்த கணவனுக்கு சோறு இறங்கவேயில்லை. இரவானால் - மட்டையாகிவிடும் ரகம் அவர். பல இரவுகளில், அவரின் ரகளையால் வீதியே ரண களப்படும்.

எல்லோர் முன்னாகவும் கூனிக் குருகி நின்ற அந்த அக்கா, இதுவே பழகிப் போனதற்கு பின் - குனிய வைத்து ரெண்டு குத்து போட்டதற்கு பின் “அவ அடிச்சுட்டா” என அலப்பறை செய்தவர் - இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார்.

தண்ணியடித்தலுக்கு பின்னான நடத்தைகளுக்கெல்லாம் - போதை ஒருவித நியாயம் கற்பித்தலாக இருக்கிறது. சிலர் தன் முதலாளியைத் திட்டுவார்கள். சிலர் மனைவியை உதைப்பார்கள். சிலர் கெட்ட வார்த்தைகளில் மழை பொழிவார்கள்.

சில நாட்களுக்கு முன் சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த ஒரு போதை ஆசாமி - எல்லோருக்கும் தெரியும்படி காலை விரித்துப் படுத்திருந்தார். ஒரு இருண்ட பாதையில் நடந்து சென்ற ஒரு இளம் தோழி - போதையில் தள்ளாடி நடந்த ஒருத்தன் தன் தொடையில் வேண்டுமென்றே தட்டிச் சென்றதாக ஒரு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

ஆணாதிக்க சமூகம்தான் இது என்றாலும் - ஆண்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் இருப்பதை மறுப்பதற்கில்லை. போதை - அந்த விழுமியங்களை மறப்பதற்கான ‘லைசென்ஸாக’ பயன்படுத்தப்படுகிறது. இத்தனை அனுபவங்களையும் - அந்த வெடிச் சிரிப்பையும் பொருத்திப் பார்க்கிறேன்.

பெண்ணொழுக்கம், ஆணொழுக்கம் என வகை பிரித்து செய்யப்படும் ஏமாற்றுக்கு எதிரான சிரிப்பு அது. நம்மை ஓங்கி அறைகிறது ...

#தேவை மனிதர்களுக்கான பொதுவொழுக்கம்

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels