அன்பின் சரடு ... !

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக் கொண்டு, சாரையாய் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களுக்கிடையே வளைத்து நெளித்து முந்திச் செல்கிறார் ஷேர் ஆட்டோ ஓட்டுனர். கைகள் ஒடியுமளவு வலிக்கின்றன. நிகழ்காலமே நிச்சயமில்லாதபோதும், எதிர்காலம்தான் அவருக்கு பெட்ரோலாய் இருக்கிறது. பையனையாவது படிக்க வைத்துவிட வேண்டும். ஓனருக்கு கொடுத்தது போக, செலவுக்கும், சேமிப்புக்கும் சம்பாதித்தாக வேண்டும்.

நாற்றமெடுக்கும் குப்பை வண்டியில் கை வைக்கும் முன்னமே, சோறு கரைத்து வைத்துவிட்டு, தனக்கும் எடுத்துக் கொண்டுதான் வருவார் அந்த துப்புரவுத் தொழிலாளி. ”இந்தாம்மா ... இப்பிடி நெழல்ல ஒக்காந்து சாப்டுட்டு வண்டியத் தள்ளு”. அக்கரையான மனிதர்கள் முன்னே எந்தக் கவலைதான் கரையாது?

4 நண்பர்கள் மட்டும் கூடி நின்று வாழ்த்தும் பதிவுத் திருமணமானாலும், 4 ஆயிரம் பேர் அட்சதை தூவி வாழ்த்தும் ஏற்பாட்டுத் திருமணமானாலும் - அந்த இரண்டு விரல்களும் பரிமாறிக் கொள்ளும் அன்பின் அழுத்தமும், வெப்பமும்தானே தீர்மானிக்கிறது - அடுத்த அரை நூற்றாண்டு வாழ்க்கையை???

வானம் பார்த்த பூமியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் ஏழைக் குடியானவன். அரவமற்ற சாலைகளில் தலையில் சுள்ளிக் கட்டும், கையில் தண்ணீர்க் குடமும் சுமந்தபடி நடக்கும் பெண். வறண்டு போன நம்பிக்கைக் கோடுகள் கிழித்த முகம் பார்த்ததும், “என் அப்பாவோ, அம்மாவோ இப்படி ஆகிவிடக் கூடாதென்று” உறுதியேற்றுக் கொள்ளும் ஒரு மகன்/மகள்...

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நிகழ்வுகள்தான் என்றாலும் - அன்பின் பசை போட்டு ஒட்டி வைத்திருக்கும் வாழ்க்கையின் வண்ணச் சரடு - காதலின்றி இயங்கிடுமா என்ன? - நாளை என்றொரு நம்பிக்கையும், இன்றின் காயங்களுக்கு ஆறுதலும் காதலின்றி சாத்தியமா?

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels