சிஐடியு தலைவர்கள் இந்தி படிக்கலாமா?


இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். உடனே, இந்தி மொழி கற்பதற்காக சி.ஐ.டி.யு நடத்திய ஒரு பயிற்சிமுகாமின் சுற்றறிக்கை எடுத்துப் போட்டு, விளக்கம் கேட்கிறார்கள்.



மேற்கண்ட சுற்றறிக்கை ஒரு கிளை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கான அழைப்பு. திணிப்பு அல்ல.

இந்தி பேசுகிற தொழிலாளர்களை திரட்டுவதற்கு அந்த மொழியை கற்பது அவசியமா? அவர்கள் தமிழ் படிக்க மாட்டார்களா? என்ற ஒரு கேள்வியை, இந்த செயலை எதிர்ப்போர் முன்வைக்கின்றனர்.

இந்தி மொழிபடிப்பது தொழிற்சங்கத்தில் செயல்படுவதற்கு கட்டாயம் என்றோ, இந்தி/சமஸ்கிருதம் ஆகியவை தனிச்சிறப்பான இந்திய மொழிகள் என்பதால் இந்தியைக் கற்கலாம் என்றோ - புதிய கல்விக்கொள்கை சொல்வதைப் போல சி.ஐ.டி.யு சொல்லவில்லை. சி.ஐ.டி.யு இந்தி திணிப்பை எதிர்க்கிறது, வடமாநிலத்தில் இருந்து, மின் வாரியத்தில் ஊழியர்கள் நியமிப்பதை கடுமையாக எதிர்த்துள்ளது.

இருந்தும் ஏன் இந்தி பேசுவோருக்கு தமிழ் கற்றுக் கொடுக்காமல், தலைவர்கள் இந்தி படிக்கிறார்கள்? தேவை கருதி. அப்படி என்ன தேவை வந்துவிட்டது?

இந்தி பேசுகிற தொழிலாளர்கள், சங்கங்களில் திரட்ட முடியாத அவல நிலைமையில் உள்ளனர். அதன் காரணமாக தரம் குறைவான வேலைகளில் சுரண்டப்படுகின்றனர். திரட்டவே முடியாதவனுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சி.ஐ.டி.யுவால் முடிவதில்லை. ஆனால் திரட்டாமலே விட முடியுமா?. அப்படி விட்டால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

1) தமிழ் பேசுகிற தொழிலாளர்களும், கடுமையான சுரண்டலை எதிர்கொள்ள நேர்கிறது.
2) ஒட்டுமொத்தமாக உழைப்புச் சந்தையில் கூலி பாதிக்கப்படுகிறது.

தமிழ் தொழிலாளர் உரிமைகளை உரத்துப் பேசுகிறபோது, இந்தித் தொழிலாளியை அழைத்துவந்து போட்டிக்கு நிறுத்தி, கூலியை, உரிமையை குறைப்பது ஏதோ சென்னையில் மட்டும் நடக்கிற பிரச்சனை இல்லை.

இந்தி பேசுகிற மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் வலுவாக உள்ளன. அவை தொழிலாளர் உரிமைகளை அரசியல் முழக்கங்களாக ஆக்கியிருக்கவில்லை. இந்தி பேசும் தொழிலாளிக்கு 'ஆங்கிலம்' கற்றுக் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், நம்மிடம் இந்தியை வற்புருத்தும் எச்.ராஜா வகையராக்கள், தாங்கள் ஆளும் மாநிலங்களை அத்தகைய அவல நிலையில்தான் வைத்திருக்கிறார்கள்.

ராஜாக்களுக்கு வக்கு இருந்தால், பீகாரிலோ, ராஜஸ்தானிலோ தமிழைப் பரப்பி, அதன் மூலம் மும்மொழிக் கொள்கையின் மேதமையைக் காட்டியிருப்பார்கள்தானே?.

இப்படி அவலத்தில் சிக்கியுள்ள ஒரு மனிதன் தமிழகம் வருகிறான். அவனைச் சுரண்டுவதில், அவர்களைக் காட்டி தமிழர்களையும் சுரண்டிக் கொள்வோர் தமிழ் முதலாளிகளும் தான். இப்போது தமிழ் தொழிலாளியின் பக்கம் நிற்கும் சி.ஐ.டி.யு., இந்தி பேசுகிறவனையும் திரட்டாமல் கூட்டு பேர வலிமை அதிகரிக்காது. சட்ட உரிமைகளைக் கற்றுக் கொடுக்க மட்டும் அல்ல, உரிமை, சமூக நீதி அரசியலை சொல்லிக் கொடுக்கவும், தொழிற்சங்க தலைவர்களே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மத்திய அரசு மாணவர்களுடைய பாடத்திட்டத்தில் இந்தி மொழியைத் திணிப்பதால் - இந்தி மொழி வளரப்போவதில்லை. நம் பிள்ளைகளை நசுக்குகிறார்கள். அதே சமயம் விருப்பப் பாடமாக இந்தி படிப்போர் இப்போதும் இருக்கின்றனர். இரு மொழிக் கொள்கையில், ஆங்கிலம் கட்டாயமாக படிப்பதால் அது உயர் கல்விக்கு பலனாகிறது. தொழிற்சங்க தலைவர்களும் அவ்வகையில் வளர்ந்தவர்களே, இன்று இந்தி தொழிலாளி ஒரு புதிய சிக்கலாக எழுகிற நிலைமையில், இந்தி படிக்க முயல்கிறார்கள்.

அதே தலைவர்கள்தான், தமிழக அரசு வேலைகள், மற்றும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என்று உரிமையை நிலைநாட்ட குரல்கொடுக்கின்றனர்.

வெளி மாநிலத்தார் வேலை பெற ஏதுவாக அரசாணை போட்ட அதிமுகவினர், அதர்காகவே இராப்பகலாய் உழைக்கின்ற பாஜகவினர், சி.ஐ.டி.யு பயிற்சியின் சுற்றறிக்கையை தூக்கிக் காட்டி, திணிப்பை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். தங்கள் குதர்க்க வேலைகளால் ஒவ்வொரு நாளும் படு கேவலமாக அம்பலப்படுகின்றனர்.

வெயிலின் வெள்ளம்

உச்சி வெயில்
ஊற்றியடிக்கிறது

முழுக்க நனைந்துதான்
வீடு செல்கிறோம்

மழைக்காலத்தில்
ஓட்டுக் கூரைதான் ஒழுகும்

காங்கிரீட் அறைக்குள்
நனைந்தபடி புரள்கிறோம்

ஜன்னல் வழியே
சாரலாய்த் தெரிக்கும்
வெக்கையோடுதான்
வேலை பார்க்கிறோம்

ஆட்களற்ற தெருவெங்கும்
அடித்து ஓடுகிறது
அனலின் வெள்ளம்

தெலுவுக் கூடையை
அழுந்தப் பிடித்தபடி
நீந்திக் கடக்கிறாள்
கருத்த கிழவி

Labels