ஒரு படமும், பிரதமரும் ... [பீப்ளி லைவ்]

பீப்ளி [லைவ்]” என்று ஒருபடம் வெளியாகியிருக்கிறது. இந்திநடிகர் அமீர்கான் தயாரித்துள்ள அந்தப்படத்தை இயக்கியவரின் பெயர் அனுசா ரிஸ்வி. மேலும் ஒரு செய்தி சொல்கிறேன், அந்தப்படத்தை இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் தனது வீட்டில் சிறப்புக் காட்சியாகப் பார்த்து மகிழ்ந்தார். ஆம், இந்தியாவின் கிராமங்களில் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பேசும் அந்தப் படத்தைப் பார்த்து அவர் ’மகிழ்ந்தார்’.  அப்படித்தான் பத்திரிக்கைகள் சொல்கின்றன. அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இந்தப்படம் ஒரு பாடம்” என்று சொல்லியிருக்கின்றார்.

நாட்டின் பிரதமரே பாடமாக எடுத்துகொள்ளும் படமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது.
பீப்ளி என்ற ஒரு இந்திய கிராமத்தில், நெருக்கடியில் தவிக்கும் விவசாயிகள் பற்றிப் பேசுகிறது கதை. கடந்த பாஜக ஆட்சிக்காலத்தில், விவசாயிகள் தொடர்ந்து தற்கொலைக்கு ஆளான விதர்பா மாவட்டத்தில் பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார். ஆனால், அதன் பிறகும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை. மேற்கண்ட படம் அந்த உண்மையை நினைவுபடுத்தாமலில்லை.
யார் தற்கொலை செய்துகொள்வது என விவசாயிகள் விவாதிக்கும் காட்சி ...

வங்கிக் கடனில் மூழ்கும் நிலத்தை மீட்பதற்காக விவசாயி ஒருவர்  தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். தற்கொலை செய்தால் அரசிடமிருந்து ரூ.1 லட்சம் நட்ட ஈடு கிடைக்கும். அந்தப்பணத்தில் தன் குடும்பம் நிலத்தை மீட்கும் என்பது அவரது திட்டம். இதை அறிந்த செய்தி தொலைக்காட்சிகள் அந்த கிராமத்திற்குப் படையெடுக்கின்றன. விவசாயி சாவாரா? இல்லையா? என்பது தொடர்ந்து செய்தியாகிறது. அதனைத்தொடர்ந்து நடக்கும் ஒவ்வொரு விசயங்களிலும், சுயநல ஆளும் வர்க்கங்கள், அவர்களுக்கு ஒத்து ஊதும் மீடியா வியாபாரிகளின் முகத்திரைகள் கிழிபடுகின்றன.

இப்படத்தை பிரதமரே பார்த்தது, ஒரு நல்ல துவக்கம் போலத்தான் தெரிந்தது. அது நடந்தது, ஆக.29 இல். 5 நாட்கள் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர், அரசு `குடோன்'களில் மக்கிக்கொண்டிருக்கும் உணவு தானியங்களை, ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து திருவாய் மலர்ந்தார்.

”நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 37 சதவீதம் பேர், வறுமை கோட்டிற்கு கீழாக வறுமை நிலையில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, வீணாகும் உணவு தானியங்களை அனைத்து ஏழை மக்களுக்கும் எப்படி இலவசமாக வழங்க முடியும்?” என்று கேட்டார் அவர். மேலும், “ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால் அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்துவிடும். இதனால் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டுவிடுவர். கையிருப்பு ஒன்றும் இல்லாமலிருந்தால் பிறகு விநியோகிக்க ஏதுமில்லாத சூழல் ஏற்பட்டுவிடும்.” என்றார். இறுதியாக, “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்ற தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினார்.


பீப்ளி லைவ்” படத்தில் ஒரு சிறிய கிளைக்கதை, அதே கிராமத்தில்  இன்னொரு விவசாயி, கிணறு வெட்டிக்கொண்டிருப்பார். எழும்பும் தோழுமாக காணப்படும் அவர் விடாப்பிடியாக இதைச் செய்துவருவார். அவரை கவனித்த உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர், என்ன செய்கிறீர்கள் என்று கேட்பார். “எனது நிலம் கடனில் மூழ்கிவிட்டது. கிணறு வெட்டினால்தான் விவசாயத்தை தொடர முடியும். கடனையும் அடைக்கமுடியும். நானே செய்துவருகிறேன்” என்றுவிட்டு தனது வேலையைத் தொடர்வார். ஆனால், பரிதாபமாக பட்டிக்கொடுமையின் காரணமாக அவர் தான் வெட்டிய குழியிலேயே செத்து மடிவார்.

ஒருபக்கம் மலைபோல உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடக்கையிலே மறுபக்கம் மக்கள் பட்டினியால் செத்து மடியவேண்டும். இதுதான் பிரதமரின் கொள்கை முடிவு போலும்?. ஏனென்றால், மேற்சொன்ன காட்சியை சிறப்புக் காட்சியாகப் பார்த்த அவர், ஏழைகளுக்கு இலவசமாக அரிசி வழங்குவதுதான் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்கிறாரெனில் அவர் தெரியாமல் சொல்லியிருக்க முடியாது இல்லையா?.


தற்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் எதிர்பாராமல் நிகழ்ந்துகொண்டிருப்பவை அல்ல. நரசிம்மராவ் துவங்கி  வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசுகள் வரை, விடப்பிடியாக அமல்படுத்தப்பட்டுவரும் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் அரங்கேற்றும் படுபாதக கொலைகள் அவை. ஆனால் தற்கொலைகளை மனைதை உலுக்கும் வகையில் செய்தியாக்கும் ஊடகங்கள் அவற்றின் உண்மைப் பின்னணியை திட்டமிட்டே மறைக்கிறார்கள். இதனால் ஆளும் வர்கங்கள் எந்தவித குருகுருப்பும் இல்லாமல் தாங்கள் செய்ய விரும்புவதை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன.


அந்தப் படத்தின், இன்னொரு காட்சியில் உள்ளூர் பத்திரிக்கையாளரும், ஆங்கிலத் தொலைக்காட்சி நிருபரும் பேசிக்கொள்வார்கள்.

“நீங்கள் ஏன் தற்கொலை செய்பவரை மட்டும் செய்தியாகத் தருகிறீர்கள்?”

”ஏனென்றால், ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ளுவது மிக மோசமான நிகழ்வில்லையா?. அப்படிப்பட்ட தற்கொலையை நேரலை செய்வது அதிர்ச்சியளிப்பது இல்லையா?”

“எங்கள் ஊரில் இன்னும் எத்தனையோ விவசாயிகள் உயிருடன் இருக்கிறார்களே. அவர்களைக் காட்டலாமே”

”அவர்களை எப்படி செய்தியாக்க முடியும். ஒரு செய்தியை துவங்கினால், கடைசி வரைக்கும் காட்ட வேண்டும். பாதியிலேயே வேறு செய்தியைக் காட்டச் சொல்கிறாயா?”

“ஏன்?”

“ஏனென்றால், பார்வையாளர்கள் இந்த செய்தியைத்தான் மிகவும் விரும்புவதாக ஆய்வுகள் காட்டுகின்றன”

“இதனால், நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளுக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா?”

“அது நமது வேலை இல்லை. நீ விரும்புவதைச் செய்யவேண்டுமானால். அதற்கான இடத்தில் நீ இருக்க வேண்டும்”

இவ்வாறு அந்த வாக்குவாதம் முடியும்.


நம் நாட்டில் சுமார் 80 செய்தி அலைவரிசைகள் இருக்கின்றன. இவர்களுக்கு ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக தேவைப்படுகிறது. உற்று நோக்கினால், ஒரு விசயத்தில் பரபரப்பு இருக்கும் மட்டும் ஒரு செய்தியைத் தொடர்வதும். அதுவே இன்னொரு பரபரப்பு கிடைக்கும்போது, அதற்கு தாவிவிடுவதுமாக இருக்கிறது. ஏனென்றால், பிரச்சனைகளைத் தீர்ப்பது அவர்களின் நோக்கம் இல்லை. பரபரப்பாக எதையேனும் ஒளிபரப்பி மக்களைப் பார்க்கச்செய்யவேண்டும் அவ்வளவுதான்.

விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலையை உயர்வு என்றால் ஊடகங்கள் அதிர்ச்சியுடன் செய்தி சொல்கின்றன. அதைத் தொடர்ந்து மக்கள் போராட்டங்கள் மூலம் எதிர்த்தால் ”போராட்டம் பிசுபிசுத்தது” என திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.


எனவே ”பீப்ளி லைவ்” என்ற ஒரு படம் எடுப்பதால், அதனை இந்த நாட்டு மக்கள் பார்த்துவிடுவதால். ஊடகங்கள் பாராட்டுவதால். எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லைதான். ஆனால், இது ஒரு அக்கினிக் குஞ்சு. இப்படியொரு படத்தைக் கொடுத்ததற்காக இயக்குனருக்கும், அந்தக் குழுவிற்கும் நாம் பாராட்டைத் தெரிவிப்போம்.
இது குடியானவர்களுக்கு ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுக்கிறது. ஆளும் வர்க்கத்தின் உள்நோக்கங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது. அவர்களின் இயல்பான வாழ்க்கையினூடே பயணித்து சரியான எதிரிகளை அடையாளம் காட்டுகிறது. ஆனால், படத்தைப் பார்ப்பதும், உச்சுக்கொட்டி ரசிப்பதும் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிடப்போகிறது?. எனவே திரைப்படத்தைத் தாண்டிய கடமைகள் நமக்குள் இருக்கின்றன. வரலாற்றின் பக்கங்களில் ஏராளம் நீரோக்கள் பிடில் வாசித்திருக்கிறார்கள்.
மக்களை எரிக்கும் நெருப்பு ஜூவாலைகள் உழைக்கும் வர்கத்தின், மாணவர், இளைஞர்கள், மாதர் அமைப்புகளின் ஒன்றுபட்ட போராட்டங்கள்தான் அனைதிருக்கின்றன. எனவே, சரியான மாற்றுக் கொள்கைகளுக்குத் துணை நிற்போம். அதற்கான அரசியலை முன்னெடுப்போம்.

3 comments:

  1. உங்களது சிந்தன்.இன்போ பக்கத்தில் கருத்து தெரிவிக்க கண்டிப்பாக உங்களை பின் தொடர வேண்டுமா..? பின் தொடராமல் கருத்து தெரிவிக்க முடியாதா..?

    ReplyDelete
  2. விவாதிக்கலாம் ... ஆனால், எல்லோருக்கும் பயனளிக்காதே ...

    ReplyDelete
  3. நல்லாதான் இருக்கு தோழர் இந்திய மக்களின் அவலங்களை உண்டாக்கும் நபரே உச்சி கொட்டுவது.

    ReplyDelete

Labels