கத்திரிக்கா விலையை குறைக்க என்ன செய்யலாம்?


தலைப்பைப் பார்த்ததும் உங்களுக்கு இது ஏதோ நகைச்சுவைக் கட்டுரையாகப் படலாம். ஆனால், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் குறித்த சிந்தனை மிக அவசியமானதாக இருக்கிறது. 
பொருளாதார நெருக்கடிகள் வரும்போது, பெருநிறுவனங்களுக்குச் சலுகைகளை வாரி வழங்கும் முதலாளித்துவ நாடுகள், ஏழை மக்களுக்கான மானிய உதவிகளை வெட்டுகின்றன. இங்கிலாந்து கூட தற்போது அத்தகைய திட்டங்களைத்தான் வகுத்து வருகிறது. இந்தியாவிலும், உரத்துக்கான மானியம் வெட்டப்பட்டபோது , அதற்கு எதிராக கேள்வியெழுப்பிய மக்களிடம் ஆட்சியாளர்கள் ”கையில் காசில்லையென பதில் சொல்லிப் பசப்பினார்கள். ஆனால், இத்தகைய சமயங்களில், சீனா, கியூபா போன்ற சோசலிச லட்சியத்தை நோக்கி நடைபோடும் நாடுகளின் செயல்பாடுகள் வித்யாசமாக உள்ளன.
குறிப்பாக, மேலே பேசிய காய்கறி விலை உயர்வுப் பிரச்சனைகள் தீர சீன உள்ளாட்சிகள் செயல்படுத்திவரும் திட்டங்கள்  புதிய திசையைக் காட்டுபவையாக உள்ளன. 
இதுகுறித்து விரிவானதொரு செய்தியை சீன வானொலி நிறுவனம் வெளியிட்டுள்ளது. காய்கறி விலைவாசி உயர்வையடுத்து சீன அரசு  விலையை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தை வெளியிட்டது. அதன்படி, வேளாண்பொருட்கள் வாணிபக் கழகங்களில் காய்கறி விலைக்கட்டுப்பாடு குறித்த கொள்கை அமலாக்கம் குறித்து விவாதித்துள்ளனர். அதனடிப்படையில், காய்கறிவிலைக் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை முறைமயத்தை ஏற்படுத்தியுள்ளனர். இக்குழுவின் நடவடிக்கைகளுக்குப் பின்னரும் காய்கறியின் விலை தொடர்ந்து 50 சதத்துக்கு மேல் அதிகரித்தால், அவசரநிலை சமாளிப்புக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தவும் முடிவுசெய்தனர். என்று குறிப்பிட்டுள்ளனர். இக்கொள்கைகளை அமல்படுத்தியதில் இந்த நிலையில் தற்போது அங்கு காய்கறிகளின் விலைகள் 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளன. என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள், ஆக்கப்பூர்வமானதாகவும், எந்தவகையிலும் மக்களின் பொருளாதாரத்தை ஏதேச்சதிகாரமாக தலையிடாதவையாகவும் உள்ளன. ஆன்சூய் மாநிலத்திலுள்ள ”ஷெ” மாவட்ட  நிர்வாகம் காய்கறி பயிரிடுவதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. அந்த நிதியில் அவர்கள் காய்கறிப் பயிரிடும் நவீன கூடாரங்களை  ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர். அந்தக் கூடாரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுளன. இதன்மூலம் உற்பத்தியாகும் கூடுதலான காய்கறிகள் விநியோகத்தை உத்திரவாதப்படுத்தும் வகையில் யுன்னான், சிச்சுவான் மற்றும் ஹனான் ஆகிய மாநிலங்களுடனும் அவர்கள் ஒப்பந்தபோட்டுள்ளனர். விவசாய உற்பத்தியை ஊக்கப்படுத்துவதுடன், அப்பொருட்களுக்கான சந்தையையும் அவர்கள் ஏற்படுத்தித் தருவதன் மூலம் விலையேற்றப் பிரச்சனைக்கு தீர்வுகண்டுள்ளனர்.
ஹபெய், ஷென்துங், லியாவ்நிங் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்ற  தீவிர நடவடிக்கைகளின் மூலம் தானியங்கள், இறைச்சி, எண்ணெய் மற்றும் காய்கறி விலைகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், காய்கறி உற்பத்திக்கு பிற மாநிலங்களைச் சார்ந்திருக்கும் நிலையில் உள்ள லியாவ்நிங் மாநிலத்திற்குட்பட்ட தாலியென் நகராட்சி, உடனடி நடவடிக்கையாக சிறுவணிகர்கள் விலையைக் குறைத்து விற்கும் வகையில் ”மானியம்” வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையினால், சிறுவணிகர்களுக்கு பாதிப்புக் குறைக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்துவருகிறது.  இந்த நகரத்தின் காய்கறித்தேவையில் 30 சதவீதமே உள்ளூர் விளைச்சலாகும், இதனால், உள்ளூர் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கான நிர்வாகக் கட்டணத்தையும் அரசு குறைத்துள்ளது. இந்த நடவடிக்கைகளால் தாலியென்  நகரத்தில் சந்தை விநியோகம் 50 சதம் அதிகரித்துள்ளது. விலைவாசி 20 குறைந்துள்ளது.
அதேபோல, ஹனன் மாநிலத்தில் சங்க்சோ நகரத்தில் வேளாண் பொருட்கள் நேரடி வாணிபக் கழகத்தை ஏற்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அத்துடன் நியாயவிலைக் கடைகளையும் அவர்கள் ஏற்படுதிவருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளை அந்த நாட்டின் உள்ளாட்சி நிர்வாகங்கள், தங்கள் நிலைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தியுள்ளனர். சீனா ஒரு சர்வாதிகார நாடு என்று முதலாளித்துவ ஊடகங்கள் பிரச்சாரத்தை பரப்பிவரும் நிலையில், சீன உள்ளாட்சிகளின் இத்தகையை நடவடிக்கைகள் குறித்த மேற்கண்டசெய்தி அந்த பிம்பத்தின் மீதும் அழுத்தமான கேள்வியை எழுப்புகிறது. 
 காய்கறி விலையைக் கட்டுப்படுத்துவதில், சீனாவின் உள்ளாட்சிகளே இத்தனை ஆரோக்யமான நடவடிக்கைகளை எடுக்க முடியுமானால், இந்திய அரசால் ஏன் அதைச் செய்ய முடியாது?.

பிற்சேர்க்கை: இந்தச் செய்தியை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் “விதைப்பூண்டு” விலை மேட்டுப்பாளையம் மொத்த ஏலச் சந்தையிலேயே ரூ.350 வரை உயர்ந்துள்ளதாக செய்திவந்தது.

1 comment:

  1. பதிவு பிடித்திருந்தால் வாக்களித்து மற்றவர்களுக்குப் பரப்புங்கள். அதே சமயம், வலைப்பக்கத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லுங்கள். உதவியாக இருக்கும்.

    ReplyDelete

Labels