நெருப்பு எரியட்டும் ...


12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதுவும் கூட்டாக. குற்றவாளிகளை ஒரு வாரத்திற்கு மேலாகியும் பிடிக்கவில்லை காவல்துறை. டில்லி மாணவியின் பலாத்கார செய்தியின் காரணமாக - அதற்கு முன்னரே நடந்த இந்த சம்பவம் குறித்த செய்தியும் - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரின் போராட்டமும் ஊடகங்களில் வெளிவந்துவிட்டன ...

அரசாங்கம் அறிக்கை வாசித்துக் கொண்டிருக்கிறது. பேருந்துகளில் கருப்புத் திரைகள் அகற்றப்படும். காவல்துறை ரோந்து. விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவோம். குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்படவும் கூடலாம் ...
ஆனால், அனுதினமும் பேருந்தில், பணியிடங்களில் - வக்கிரம் பிடித்தபடி நடந்துகொள்ளும் கரங்களைக் கைது செய்ய முடியுமா? - ஒவ்வொரு ஆண் மகனும் ஏதாவது ஒரு தருணத்தில் பெண்ணை ஆதிக்கம் செய்துதான் வருகிறான் என்ற உண்மையை மாற்ற முடியுமா?
ஷேவிங் கிரீமுக்கும், வாசனை திரவத்துக்கும் பெண்கள் அரையுடையோடு சூழ்ந்துகொள்ள - இதுவே ஆண் என்பதற்கான இலக்கணம் என்று - திரும்பத் திரும்ப பாடமெடுக்கும் தொலைக்காட்சிகள் மெளனமாகுமா? "ஓடும் தண்ணியில பேதமில்லையே, உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயுமில்லையே" என ஓராயிரம் வக்கிரங்களை ஒலித்துக் கொண்டேயிருக்கும் பாடல்கள் நின்றுபோகுமா? ...
அன்பர்களே, வீடு இடிந்து விழுகிறது. தலை மேல் பட்ட காயத்திற்கு மருந்து போடுவது அவசரம். அத்தோடு அடுத்த வேலையைப் பார்க்கப் போவோமா? ... கூரையை சரி செய்ய வேண்டாமா?
பலாத்காரத்தைக் கண்டித்து ஊடகங்கள் குமுறின. ஆனால், பல பத்திரிக்கைகளில் "கற்பழிப்பு" என்ற வார்த்தையில் மாற்றமில்லை. ஒரு படி மேலே சென்ற "தினமணி" - அந்தப் பெண்ணின் தவறுதான் அவளுக்கு நேர்ந்த குற்றத்திற்கு காரணம் என்று பத்தாம்பசலித்தன விளக்கத்தையே பதிவு செய்திருக்கிறது. இந்த மனநிலை இருக்கும் வரை - நம் பண்பாடு குறித்து மகிழ்ச்சிக் கூத்தாட எதுவுமே இல்லை.
சக மனுசியாக பெண்ணைப் பார்க்க வேண்டும் அதுதான் இப்பிரச்சனைக்கு  தீர்வு என்றாலும், அதைச் சொல்வதால் மட்டும் தீர்வு கிட்டப்போவதில்லை. அந்த வாக்கியத்தின் முழுப் பொருளை அடைய சில முயற்சிகள் எடுப்பது அவசியம்.
1) பெண் வீட்டை விட்டு வெளியே சென்றாலும், சமயலரையோடு ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கிறது. அது அவளை முன்னே செல்ல விடாமல் - நேரத்தின் பெரும்பகுதியை எடுத்துக் கொள்கிறது. வீட்டு வேலைகள் பெண்களுக்கானவை என்பதை மாற்றி - வீட்டுப்பளுவை ஆணும் பெண்ணும் சேர்ந்து சுமக்க வேண்டும்.
2) அவர்களை சகமனுசியாக பாவிக்காமல் கொச்சைப்படுத்தும் எந்த நடவடிக்கையும் (உடலை முன் நிறுத்தும் பாடல்கள், விளம்பரங்கள்) தடை செய்யப்பட வேண்டும்.
2) ஒரு ஆணால் இந்த கொச்சைத்தனங்களை உணர்வது சாத்தியமில்லை - சட்டங்களை உருவாக்கும் சபைகளிலும், அமலாக்கும் நிறுவனங்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீட்டை உரிமையாக்க வேண்டும். 
4) பெண்களுக்கான சொத்துரிமையை முழுமையாக்க வேண்டும். 
5)ஆரம்பக் கல்வியிலிருந்தே அறிவியல் அடிப்படையில் மனித உணர்வுகள் (பாலியல் உணர்வு மட்டுமல்ல) குறித்த கல்வி வேண்டும். (முதலில் இந்தக் கல்வியை ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும். ...)
பாலியல் வல்லுறவுகள் பொது இடத்தில்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண்ணை மனுசியாக புரிந்துகொள்ளாத, எவராலும் - காதல் வறட்சியுற்ற ஒரு கணவனாலும் கூட நிகழ்த்தப்படலாம்... எனவே, சமத்துவத்தை நடைமுறைச் சாத்தியமாக்கும் சிறு முயற்சியேனும். இப்போதே தொடங்க வேண்டும்.
பெரு வெள்ளத்தின் துயரில் அழுதுகொண்டு அமர்ந்திருப்பதை விட - பெரிய அணையைக் கனவு காணுங்கள். அதற்காக ஒரு கல் சுமந்து கொடுங்கள். 

#மகிழ்ச்சி ததும்பும் ஒரு அற்புத உலகம் உங்கள் இதயத்தில் கட்டப்பட்டால் - அது மண்ணிலும் நிகழ்வதற்கு அதிக காலம் பிடிக்காது.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels