-இரா.சிந்தன்
(ஜெர்ரி மந்தர் - எழுதிய முதலாளித்துவம் குறித்த ஆய்வுகள்; முழு அமைப்பின் உயிர் நாடியான குறைபாடுகள் என்ற புத்தகத்தின் 10 ஆவது அத்தியாயம் மட்டும் - மந்த்லி ரிவ்யூ இதழில் வெளியாகியிருந்தது. சிந்தனையை தனியார்மயமாக்குதல் என்ற அந்த அத்தியாயத்தின் உள்ளடக்கத்தை தழுவி எழுதப்பட்ட கட்டுரை இது)
"இங்கே ஊடக சுதந்திரம் இருக்கிறது.அதை உணர உங்களுக்கும் ஒரு ஊடகம் சொந்தமாக வேண்டும்"- ஏ.ஜே லையப்ளிங்
தொலைக்காட்சியில், உங்களுக்கு பிடித்தமானதொரு பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபர்,சரளமாக பேசிக் கொண்டே ஒரு "கமர்சியல்" இடைவேளையை அறிவிக்கிறார். சிலர் விளம்பரங்களைப் பிடிக்காமல் மாற்றுகிறார்கள், ஆனால்விளம்பரங்களிடமிருந்து தப்பிப்பது அத்தனை எளிதில்லை. ஒரே நாளில், நம் சிந்தனையோட்டத்துக்கு தக்கவாறு பல நிகழ்ச்சிகளையும், பாடல்களையும்இடையிடையே ஏராளமான விளம்பரங்களையும் பார்க்கிறோம். இப்படியாக நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன ...
மேம்போக்காகப் பார்த்தால், நகராத நேரத்தை, கலை ரசனையோடு நிரப்புவதுதான் தொலைக்காட்சி அல்லது ஊடகத்தின் வேலை என்று தோன்றுகிறது. கலைகள் யாருக்கானவை என்ற கேள்வி இலக்கியவாதிகளிடையே இன்றும் பிரபலமானதுதான். இயல், இசை, நாடகம் என முத்தமிழும் மக்களைப் பாடவே என்று முற்போக்காளர்கள் சொன்னால், 'இல்லை கலை கலைக்காகவே, இசை இசைக்காகவே, நாடகம் நாடகத்துக்காகவே' என்று மறுப்பவர்கள் உண்டு. ஆனால், 'தகவல் தொடர்பின் யுகம்' என்று அழைக்கப்படும் நிகழ்காலத்தில் ஊடகங்கள் ஒரு புதிய இலக்கணத்தை முன் வைக்கின்றன. ஊடகத்தின் வணிகத்திற்கு ஏற்ப மக்களை ஈர்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுவதே கலையும், இலக்கியமும் (ஏன் செய்திகளும் கூட) என்பதே அதன் விளக்கமாக இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு பணம் கொடுக்கும் நிறுவனங்கள் அதற்கு கைமாறாக இடையே தங்கள் பொருட்கள் குறித்த விளம்பரங்களைக் கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறார்கள்.
விளம்பரங்கள் ஒருவரின் அனுமதியின்றி, அவரது சிந்தனையை இன்னொருவர் ஆக்கிரமிக்கும் முயற்சியாகும். இது வியாபாரத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கிறது. உலகம் முழுவதும் ஒராண்டில் விளம்பரத்திற்காக செலவிடப்படும் தொகையின் தோராயமான அளவு 2 லட்சத்து 25 ஆயிரம் கோடிகள். அத்தனை தொகையும், சந்தையில் குவிந்துகிடக்கும் பொருளை வாங்க நிர்ப்பந்திக்கும் வகையில் செலவிடப்படுகிறது.
இதன் காரணமாய், எங்கு திரும்பினாலும் விளம்பரங்களாக தெரியும் சமூகத்தில் நாம் நுழைந்திருக்கிறோம். வாழ்க்கையே, தொடர்ந்து ஏதாவது பொருளை விற்க முயலும் விளம்பரங்களின் நிர்ப்பந்தத்தில் இருந்து தப்பிச் செல்வதாக மாறிவருகிறது.
விளம்பரங்கள் யாருக்குத் தேவை?:
1800களில் பிரபலமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கும், ரயில் போக்குவரத்து கம்பெனிகளுக்கும் விளம்பரங்கள் தேவைப்படவில்லை. மக்களுக்கு அத்தியாவிசயமான பொருள் அல்லது சேவைக்கு இது அவசியமற்றது. வெண்டைக்காய்க்கோ, வெங்காயத்துக்கோ விளம்பரம் அவசியமானதல்ல. தேவைப்பட்டால், மக்கள் அவைகளை தேடிச் சென்று வாங்குவார்கள். தண்ணீருக்கு விளம்பரம் அவசியமில்லை ஆனால் 'அக்வாபினா'வுக்கு விளம்பரம் தேவைப்படுகிறது. சட்டை போடுங்கள் என்று சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை ஆனால் "பீட்டர் இங்லண்ட்" கேட்டு வாங்க, விளம்பரம் அவசியமாகிறது.
தொலைக்காட்சிக்குள் தொலைந்துபோவது:
ஊடகங்கள் என்று சொல்லும்போது ரேடியோ, பத்திரிக்கை என பல விதங்களும் நம் மனதுக்கு வந்தாலும், இன்றைக்கும் தொலைக்காட்சிதான் மிகப்பெரியதும், அதிக சக்தி வாய்ந்ததும் ஆகும். அமெரிக்காவில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அங்கே குழந்தைகள் சராசரியாக தினமும் 4 மணி நேரமும், பெரியவர்கள் 5 மணி நேரமும், முதியவர்கள் 7 மணி நேரமும் தொலைக்காட்சியுடனே செலவு செய்கின்றனர். இதில் 40 சதவீத நேரத்திற்கு விளம்பரங்களே காட்டப்படுகின்றன. ஒருவர் வருடத்திற்கு 25 ஆயிரம் விளம்பரங்களைப் பார்க்கிறார். அதாவது, ஆண்டுக்கு 25 ஆயிரம் முறைகள் ஒரே செய்தி திரும்பத் திரும்ப அவரின் சிந்தனையில் விதைக்கப்படுகிறது "நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக; இந்தப் பொருளை வாங்குங்கள்!".
இந்தியாவிலும் கூட, ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன. தன் சமூக உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கு மாறாக, ஊடகங்களுக்குள்ளே தன் கவனத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கும் சமூகமாக இது மாறிவருகிறது. சீகைக்காயும், கடலை மாவும் பயன்படுத்தப்பட்ட வீடுகளில் சாம்பும், சோப்பும் வந்து அமர்ந்தது ஒரு நவீன மாற்றம். ஆனால், சாம்பும் சோப்பும் காலப் போக்கில் "அண்ணாச்சி, சன்சில்க்கு ஒன்னு குடுங்க" எனக்கு 'ஹமாம்', பாப்புக்கு 'பியேர்ஸ்' என்று கேட்பதாய் மாற்றியதுதான் விளம்பரங்கள் கட்டமைத்த மாற்றம். உங்கள் அனுமதியின்றியே சிந்தனைக்குள், ஒரு சாம்பு டப்பா வந்து அமர்ந்துகொள்கிறது.
மனித குல வரலாற்றிலேயே, நம் தலைமுறைதான் இயற்கையான சமூக வாழ்க்கையிலிருந்து, பெருமளவுக்கு அன்னியப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் தூங்கும் நேரம், வேலை செய்யும் நேரம் போக மீத நேரத்தை தொலைக்காட்சி எடுத்துக் கொள்கிறது. குடும்ப வாழ்க்கை, கலாச்சார வாழ்க்கை, சமூக வாழ்க்கையின் நேரமெல்லாம், தொலைக்காட்சிக்குள் தொலைந்து போகிறது.
பிள்ளை பிடிக்கும் யந்திரம்!:
பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை இன்றைய பெற்றோர்கள் அறிவார்கள். ஆனால், குழந்தைகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பிள்ளைகளை அடக்கி வைக்கப் பயன்பட்ட பூச்சாண்டிகளின் இடத்தை, தொலைக்காட்சிகள் பிடித்துக் கொண்டது ஒரு ஆபத்தான வேடிக்கையாகும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பெரும்பாலானவை, குழந்தைகளின் மனதைத்தான் குறி வைக்கின்றன. 3 மாதக் குழந்தைகளில் 40 சதவீதம் தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றன, 2 வயதுக்குள் ஏரத்தாள 90 சதவீதம் குழந்தைகள் தொலைக்காட்சியின் பிடியில் சிக்கிவிடுகின்றன. (வாசிங்டன் பல்கலை., ஆய்வு)
குழந்தைகளை அமைதியாக வைத்திருக்கும் குறுக்கு வழியாக, பெரும்பாலான பெற்றோர்கள் தொலைக்காட்சியை பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியின் சத்தம் கேட்கும்வரை, குழந்தைகள் சத்தம்போடுவதில்லை - ஆனால் அது அணைக்கப்பட்டவுடன் அவர்களின் நடவடிக்கை மாறுகிறது. ஓராண்டில் 8 ஆயிரம் கொலைச் சம்பவங்களை குழந்தைகள் தொலைக்காட்சியின் மூலம் பார்ப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களின் நடவடிக்கைகளில் வன்முறையை விதைக்கப்படுவது ஒருபுறம்; மறு புறத்தில் அது சிறந்த விளம்பர நடவடிக்கையாகவும் உள்ளது. குழந்தைகளுக்கு ஒரு பொருளின்மீது ஆசை உண்டாக்கிவிட்டால், அவர்கள் அடம்பிடித்தேனும் தங்கள் பெற்றோரைக் கொண்டு சாதித்துவிடுகிறார்கள்.
கருப்புப் பெட்டிக்குள் உலகம்:
உலக மக்களில் 80 சதவீதம் பேர், ஏதாவது ஒரு வகையில் தொலைக்காட்சியைப் பார்க்கிறார்கள். சாலைகளே இல்லாத கிராமங்களிலும், கடலுக்கு நடுவே மிதந்து கொண்டிருக்கும் மிகச் சிறிய தீவுகளிலும், வடக்கின் பனி உறைந்த பிரதேசங்களிலும் இன்னும் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் தொலைக்காட்சி வியாபித்திருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, படங்களாக மாற்றப்படும் கருத்துக்களுக்கு ஏற்படும் கூடுதல் வலுவும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.
மனிதர்களின் சிந்தனையை தனக்கு ஏற்றபடி வடிவமைக்கும் திறன் காட்சி விளம்பரங்களுக்கு இருக்கிறது. உலகைப் பற்றிய பார்வையை மாற்றியமைக்கும் வல்லமையும் இதற்கு உண்டு. இதனை இன்னும் ஆழ நோக்கினால், உங்கள் அரசியல் தத்துவத்தை, அரசியல் விருப்பத்தையும் கூட மாற்றும் வல்லமையை அது கொண்டிருப்பதை கவனிக்க தவற மாட்டீர்கள். இதனால்தான் அரசியல் கட்சிகளும் தொலைக் காட்சி ஊடகத்தையே அதிகம் விரும்புகிறார்கள். உலகம் அந்த கருப்புப் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது.
உங்களுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கிறதா?
ஏன் இதைக் கேட்கிறேனென்றால் ... நீங்கள் நிறைய படித்திருக்கலாம். விளம்பரங்கள் அப்பட்டமான பொய்யைச் சொல்வதாக தெரிந்து வைத்திருக்கலாம். ஆனாலும் அது பதிக்கும் பிம்பங்கள் உங்கள் மூளையில் பதிவதை தடுக்க அது போதாது. உங்கள் அனுமதியின்றியே மூளைக்குள் நுழைந்துவிட்ட சூர்யா, விஜய், அமிதாப் பச்சன் அல்லது சன் டைரக்ட் விளம்பரங்களை வெளியே எடுக்க முடிகிறதா?
உண்மையான செய்தி, அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சி - அதனைத் தொடர்ந்து காட்டப்படும் கற்பனையான விளம்பரம் என மாறிமாறி பார்த்தபின்னர் நம் ஆழ் மனம் எல்லாவற்றையுமே ஒரே விதமாக பதிந்துகொள்கிறது. மேலும் ஒரே செய்தி திரும்பத் திரும்ப காட்டப்படுவதாலும் உங்கள் மனதில் பிம்பங்கள் பதிந்து போகின்றன. எனவே, எத்தனை பெரிய அறிவாளியாக இருந்தாலும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த பிம்பங்களை அழிக்கவும் முடியாது.
விளம்பரத்தில் வரும் நடிகர் சொல்வதை உடனடியாக நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால் அவர் திரும்பத் திரும்ப சொல்லுவார். அதுவும் ஆழ் மனதில் அமர்ந்தபடி பேசிக் கொண்டேயிருப்பார். ஹிட்லர் தனது பேச்சை திரும்பத் திரும்ப ரேடியோவில் ஒலிபரப்பியதன் மூலம், நம்பகத் தன்மையைக் கட்டமைத்தான். தொலைக் காட்சிக்கு இதில் மிருக பலம் இருக்கிறது.மேலும் இப்படி பதிக்கப்படும் விளம்பரங்கள் உண்மைகளை தரம்பிரித்து சொல்லுகின்றவை அல்ல. அவை முழுக்க முழுக்க கற்பனையானவை. இட்டுக்கட்டப்பட்டவை.
உலகின் ரிமோட் கண்ட்ரோல்:
பார்வையாளர்களின் கைகளில்தான் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறது, நாம் விரும்பினால் சானல்களை மாற்றிவிடலாம். ஒரே ஒரு தூர் தர்சன் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த காலம் மாறிவிட்டது. இப்போது 100க்கும் அதிகமான சானல்களை அரசு கேபிளிலேயே பார்க்க முடிகிறது. எனவே ரிமோட்டை வைத்துக் கொண்டு அந்த தொலைக் காட்சிகளை ஆட்டிப்படைக்கலாமா?, அது முடியுமா?. முடியாது என்பதைத்தான் நடைமுறை காட்டுகிறது.
அமெரிக்காவின் வானொலி துறையில் ஒரே நிறுவனம் 850 ரேடியோ அலைவரிசைகளை நடத்துகிறது. இந்தியாவிலும் சன் நெட்நொர்க், பிக் எஃப்எம், டைம்ஸ் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் 117 ரேடியோ அலைவரிசைகளை நடத்துகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். திரையரங்க வணிகத்திலும் நிறுவன ஆதிக்கம் தொடங்கியுள்ளது. உலகின் ஒட்டுமொத்த ஊடக வர்த்தகத்தில், டைம் வார்னர், டிஸ்னி, வியாகம், சியாக்ரம், நியூஸ் கார்பரேசன், சோனி, பெர்ட்ஸ்மன், ஜெனரல் எலெக்ரிக் ஆகிய 8 பெரு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. தொலைக்காட்சி, இசைத்தட்டு விற்பனை, கேபிள் இணைப்புக் கொடுப்பது, செய்திப் பத்திரிக்கை, இணையதளம் என எல்லா துறைகளிலும் கால் பதித்திருக்கின்றன.
ஊடகத் துறையையே கைப்பற்றியிருக்கும் சில வர்த்தக நிறுவனங்கள் மக்களின் எல்லா விருப்பங்களையும் கட்டுப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. உலகின் எல்லா நாடுகளின் ஊடகச் சந்தையிலும் இந்த ஏகபோகம் நுழைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவும், உலக வர்த்தக நிறுவனத்திடம் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கின்றனர். அதன் மூலம், உலகின் எந்தப் பகுதியிலும் செயல்படும் உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கவும், புதிய நிறுவனத்தை தொடங்கவும் தடையற்ற அனுமதியை சாதிக்க விரும்புகிறார்கள். அது நடந்தால், உலகின் ஊடகத் துறை தனியார்மயமாகும் அதாவது எல்லா மூளைகளும் தனியார்மயமாகும். அரசு ஆதரவுடன் செயல்படும் லாப நோக்கில்லாத ஊடகங்கள் - "வணிகச் சந்தையில் அரசு மேற்கொள்ளும் நியாயமற்ற நடவடிக்கை" என்றும் வகைப்படுத்தப்படலாம் !. உலகின் ரிமோட் இந்த நிறுவனங்களிடம் தான் இருக்கிறது.
சிந்தனையை திரும்பக் கைப்பற்றுவோம்!
வீதிகளிலும், வீடுகளுக்குள்ளும் எங்கு திரும்பினாலும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் விளம்பரங்கள் ஒரு வெள்ளத்தைப் போல எல்லோரையும் அடித்துச் செல்கின்றன. நம் மனச் சூழல் பாழாகிறது. "விளம்பரங்களால் மாசடையும் சிந்தனையை எப்படி சுத்தம் செய்வது?" இந்த மாசைச் சுத்தப்படுத்துவது, சூழலியல் பாதுகாப்புக்கு நிகரான தேவையாகும். பல்லுயிர் பாதுகாப்பு எப்படி மனித குல வாழ்க்கைக்கு முக்கியமோ, அவ்வாறே நம் சிந்தனைகளின் பல்நோக்கு பாதுகாக்கப்பட வேண்டும்.
விளம்பரங்களுக்கு எதிரான நுகர்வோர் போராட்டமும், அரசுகளின் முயற்சிகளும் பல விதங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வரலாற்றையும் ஆய்வு செய்து ஜியோ கனன் மற்றும் நீல் லாவ்சன் என்ற ஆய்வாளர்கள் 7 பரிந்துறைகளைச் செய்துள்ளனர். அவை பின்வருமாறு ...
1) பொது இடங்களில் எந்த விதமான விளம்பரத்தையும் தடை செய்ய வேண்டும்: இந்த திட்டம் பிரேசில் நாட்டில் அமலாக்கப்பட்டபோது பெரும் வெற்றியடைந்தது. ஹவாய், அலாஸ்கா, வெர்மோட், பெய்ஜிங் (சீனா) போன்ற பகுதிகளில் இது அமலில் இருக்கிறது.
2) இணைய தளத்தில் விளம்பரத்தை கட்டுப்படுத்த வேண்டும்: கூகிள் நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களின் தகவல்களையெல்லாம் திரட்டி அந்த தகவல்களை வைத்து விளம்பரதாரர்களிடம் வியாபாரம் செய்கிறது. இந்தத் தகவல்கள் எப்படியும் பயன்படுத்தப்படலாம். இணையதளத்தில் உள்ள தகவல்கள் இலவசமானவை என்று சொல்லப்படுகிறது, ஆனால் அவற்றிற்கு நம் சுயத்தை விலையாகக் கொடுத்து வருகிறோம்.
3) குழந்தைகளை குறிவைத்த விளம்பரங்களுக்கு முடிவுகட்டுதல்: இது குறித்து நாம் ஏற்கனவே பேசினோம். அதிக கொழுப்பு உள்ள, உடல் நலனை பாதிக்கும் உணவுகளைக் கூட இந்த விளம்பரங்கள் விற்றுவிடுகின்றன. இது ஆபத்தானது.
4) விளம்பரங்களுக்கு வரி விதிக்க வேண்டும்: விளம்பரங்கள் சமூக சூழலை மாசுபடுத்துகின்றன. இதனை "சிந்தனை மாசு" என்று குறிப்பிடலாம். இந்த மாசின் அளவிற்கு ஏற்ப, வரி நிர்ணயிக்கப்பட வேண்டும்.
5) நேரம் - அளவுக்கு தக்க லெவி விதிக்க வேண்டும்: விளம்பரத்துக்கு வரி விதிப்பது மட்டும் போதாது. ஒரு விளம்பரம், தனால் ஏற்படுத்தும் பாதிப்புகளை சரி செய்யும் வகையில், மாற்று விளம்பரங்களை அதே கால அளவிற்கு செய்திட வேண்டும். ஆனால், புல்லைத் திண்ணுமாறு புலிக்கு உபதேசம் செய்வது பொருளற்றது. எனவே, இதற்கான செலவை லெவியாக வசூலித்து, மாற்று விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
6) விளம்பரங்களில் - விளம்பர முகமையின் பெயர் வெளியிடச் செய்திட வேண்டும். யார் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்பதை வெளிக்கொணர இது உதவும்.
7) விளம்பர தொழிலுக்கு ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்த வேண்டும். விளம்பரங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அரசியல் விளம்பரங்கள், ஜனநாயகத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் இது தேவைப்படுகிறது.
2,3,4 மற்றும் 7 எண்ணிட்ட பரிந்துறைகள் மிகவும் முக்கியமானவை. - அத்தோடு அரசியல் விளம்பரங்களை அதுவும் தேர்தல் காலங்களில் முற்றிலும் தடை செய்திட வேண்டும். எல்லா வேட்பாளருக்கும் குறிப்பிட்ட நேரம் பேசும் வாய்ப்பை இலவசமாக வழங்கலாம். தொலைக்காட்சிகளிலும், இணையதளங்களிலும் விளம்பரமே இருக்கக் கூடாது என்ற தடை செய்வதும் சாலச் சிறந்தது. அத்துடன் விளம்பரங்களின் தவறான பிரச்சாரங்களை கட்டுப்படுத்தும் வாரியம் ஒன்று ஏற்படுத்த வேண்டும்.
இதெல்லாம் நடைமுறைச் சாத்தியம்தானா? ... இல்லை ... ஏனென்றால் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பிரிக்க முடியாத அங்கமாக விளம்பரங்கள் மாறிவிட்டன. நுகர்வுக் கலாச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களை அடிமைப்படுத்திட இதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை என்றாகிவிட்டது. நான் மேற்சொன்ன சீர்திருத்தங்களை கண்மூடித்தனமாக நம்பச் சொல்லவும் இல்லை. ஆனால், விளம்பரங்களுக்கு எதிராக நம் சிந்தனைகளை விழிப்படையச் செய்வதற்காக காலம் இது. வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றும் போராட்டங்கள் எப்படியோ அப்படித்தான் நம் சிந்தனையைக் திரும்பக் கைப்பற்றும் போராட்டமும். உடனே தொடங்கியாக வேண்டும்.
நன்றி: 'மார்க்சிஸ்ட்' மாத இதழ், டிசம்பர் 2012
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment