கெளரவம் - நல்ல சினிமா ...

சண்முகத்தின் பிணமும், ராஜேஷ்வரியின் எழும்புக் கூடும் நடத்தும் திருமண வாழ்க்கைதான் கதை ... ஒரு காதல் கதையென்று இந்தப் படத்தை எடுத்துக் கொண்டால் - இப்படித்தான் சொல்ல முடியும். ஆனால், இதுவொரு காதல் கதை மட்டுமல்ல - சமூகத்தின் கெளரவம் சாதியில் இல்லை, சாதி எதிர்ப்பில் இருக்கிறது என உரக்கச் சொல்லியிருக்கிறது இந்தப் படம் ...

பார்க்க வேண்டிய படம். இதுபோன்ற முயற்சிகள் தமிழகத்தில் மிகக் குறைவு - ஒருவேளை இந்தப் படம் தோற்றுவிட்டால் - மண்டையில் சிந்தனையில்லாத இயக்குனர்கள் சிலர் மசாலா படங்களை எடுத்து விட்டு “தமிழக மக்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்” என்று கூச்சமின்றி அறிவிக்கும் ஆபத்து இருப்பதால் - படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நல்ல சினிமா பார்க்கிறவர்களின் கடமை.

சரி இனி விமர்சனத்துக்கு செல்லலாம்.

கதை: தொலைந்து போன நண்பனைத் தேடும் அர்ஜுன் - இந்தியாவின் நரம்புகளெங்கும் பீடித்திருக்கும் சாதியெணும் புற்று நோயின் கொடூரத்தை உணர்கிறான். மனிதநேயம் உந்தித்தள்ள உண்மையைத் தேடும் பயணத்தை தொடங்குகிறான். இது கதைதான் என்றாலும், ஒரு இளைஞனாக பெருமையாய் உணரச் செய்கிறது. ஆம், நாங்கள் இந்த இந்தியாவை வடிவமைக்கப் பிறந்தவர்கள் என்று உரக்கச் சொல்ல வைக்கிறது.

தனக்கு மட்டும் விளக்கேற்றிக் கொள்வது இரவிலிருந்து முழு விடுதலையைக் கொடுத்துவிடாது. விடியல் தாமதமானால், சூரியனைக் கண்டறியவேண்டியதும் நம்முடைய வேலைதான்.

கிராமமாகவும், சேரியாகவும் இரு வேறு வாழ்க்கைகள் - ”ஒரு கிராமம் கெடக்கு ... பச்சையுடுத்தி வயலுக, அச்சமுடுத்தி பயலுக ...” என்ற பாடல் காதில் ரீங்காரமிடுகிறது. சுடுகாட்டு அமைதியை எப்படி அமைதியென்று சொல்லுவது?

பிராமண இளைஞராக வரும் நாயகனின் தோழனும், வக்கீலாக வரும் நாயகியும் நல்ல பதிவுகள்.

கெளரவத்துடன் சாதி பிணைக்கப்பட்டு ஒரு சமூக அழுத்தமாக மாற்றப்பட்டிருப்பதைக் காட்டுகிறார்கள். தனக்காக இல்லையென்றாலும், தன் சாதி சனத்துக்கு முன் தன் கெளரவத்தை நிலைநாட்டவே மனிதத்தை இழந்து - பின் உள்ளுக்குள் அழுது சாகும் பசுபதியின் பாத்திரமும் நல்ல விதத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

நகரங்களில் சாதி இல்லையா? - இந்தக் கேள்விக்கு பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் பதில் சொன்னார் - “சினிமாத் துறையிலும் கூட சாதி இருக்கிறது” என்று ... படத்தில் அந்தப் பதிவு இல்லையென்பது குறை.

தலித்துகளும் - பிற்படுத்தப்பட்டவர்களும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள் என்று சித்தரிப்பதை தவிர்க்க பல காட்சிகள் வசனத்தில் மட்டும் சித்தரிக்கப்படுகின்றன. (இதையே காரணமாக வைத்து படத்தில் நாடகத் தன்மை மிகுந்திருப்பதாக சிலர் சொன்னாலும்) இயக்குநர் ராதா மோகன், அறிந்தேதான் இதைச் செய்திருக்கிறார். - மனசுகள் திருந்த வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.

கொல்லப்பட்ட பெண்ணின் அண்ணி, அம்மா - என சாதியின் முதல் இலக்குகளாகும் பெண்களின் - சாதி எதிர்ப்பு நிலைப்பாடுகள் யதார்த்தம். பக்குவமான பதிவு.

படம் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. “எது கெளரவம்? வாழ்வதால் வருவதா? பிறப்பால் வருவதா?. அது எப்படி வருகிறதென்பதை நாம் அறிவோம். ஆனால், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களுக்கு எதிராக உரக்கப் பேச வேண்டும்.


சாதி ஒரு பிரச்சனைதான், தீண்டாமை ஒரு குற்றம்தான் அதை எப்படி ஒழிப்பது என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். முதலில் சாதி ஒரு பிரச்சனை என்பதைப் பேசத் தொடங்குங்கள் - சமூகத்தில் ஒரு மாற்றத்தை சாத்தியப்பட வைக்க - மாற்றத்திற்கான சிந்தனைகளை விதைப்பது மிக முக்கியம் என்று பதில் சொல்வேன்.

பல ஆண்டுகளாக செய்துவந்த விவாதத்தின் பலன் இப்போது தெரிகிறது. சினிமாவில், சமூகத்தில் பல சாதி எதிர்ப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். நல்ல தொடக்கம் ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels