மீன்கள் துள்ளி விளையாடிட... ஜீவனுள்ள நதியாக விளங்கிய நொய்யல் நதி இன்று சாயக்கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும், நகரத்தின் இன்ன பிற கழிவுகளும், குப்பைக் கூளங்களும் நிரம்பி கழிவுநீர்க் கால்வாயாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யலாறு சுமார் 180 கி.மீ., நீண்டு கிடக்கிறது. 32 பெரிய ஏரிகள், நூற்றுக்கணக்கான குளங்களையும் நிரப்பும் இதன் நீர் பிடிப்புப் பகுதிகளின் பரப்பு சுமார் 3.5 லட்சம் ஹெக்டேர். இப்பகுதிகளில் 1970 முதல் 1994 வரை ஆண்டுக்கு சராசரியாக 607.8 மி.மீ., மழை பெய்துள்ளது. வருடத்தில் சராசரியாக 39.4 நாட்கள் மழை பெய்யும் நொய்யலில் வருடம் ஒரு முறையாவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 1974 ஆம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் திருப்பூர் நகரின் மையப்பகுதியே நீரில் மிதந்தது, தற்போதைய மாநகராட்சி அலுவலகம் உள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கியது. ஈஸ்வரன் கோயில் பாலத்தை சேதப்படுத்திய அந்த வெள்ளம் யுனிவர்சல் தியேட்டரையும் தாண்டி வீடுகளுக்குள்ளும் புகுந்தது. நொய்யலாற்றில் இயற்கையாக அமைந்துள்ள பாறைகள்தான் அந்த வெள்ளப் பெருக்கின் சீற்றத்தை மட்டுப்படுத்தி பேரழிவு ஏற்படாமல் செய்தன.
அமிலத்தன்மை:
வளமான நதியாக ஓடிக் கொண்டிருந்த நொய்யலாறு, கடந்த 20 ஆண்டுகளில் முழுமையாக பாழ்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, திருப்பூரில் ஆண்டுக்கு 1500 டன் சாயக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. கந்தக அமிலம், ஹைட்ரோ குளோரிக் அமிலம், சலவை திரவம், சோடா உப்பு, சோடியம் பெர்ஆக்சைடு மற்றும் வண்ண வேதிப்பொருட்கள் நொய்யலின் அமிலத்தன்மையை அதிகரித்துள்ளன. அத்துடன், மாநகரின் கழிவு நீர், தொழிற்சலைகளின் வேறு பல கழிவுகளும் கலந்து மாசு அளவு அதிகரித்துள்ளது. இதனால் நீரிலுள்ள ஆக்சிஜனின் அளவு 1900 ஆண்டுவாக்கில் இருந்ததைவிட குறைந்து தற்போது ஆறு தன் ஜீவனிழந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளில் திருப்பூரின் சுற்றுப்புறச் சூழல் மிக மோசமாக பாதிக்கப்படும்.
நொய்யல் நதிக்கரையில் வசிக்கும் மக்கள், தங்கள் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் ஆதாரமாக விளங்கிய விலை மதிப்பற்ற இயற்கைச் செல்வத்தை இழந்து தவிக்கிறார்கள். தற்போது அது குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நொய்யலைச் சுத்தப்படுத்தி பழைய நிலைக்கு மீட்க வேண்டும் என்பதே இங்குள்ள பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நொய்யல் சீரமைப்பு:
நொய்யல் ஆற்றைச் சீரமைத்து அழகுபடுத்துவோம் என்ற அறிவிப்புடன் தற்போது ”நொய்யல் சீரமைப்பு குழுவினர்” சில பணிகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள், திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள ஆற்றின் ஒரு பகுதியை தூர்வாரி சுத்தப்படுத்துவதுடன், போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் ஆற்றோரச் சாலைகள் அமைக்கும் பணியையும் செய்யத் துவங்கியுள்ளனர். மாநகரின் இன்றைய அவசரத் தேவைகளைப் பார்க்கும்போது அவர்கள் பணி வரவேற்புக்குரியதே. ஆனால் நடைமுறையைப் பார்க்கும்போது சில அவசியமான கேள்விகளை எழுகின்றன.
எச்சரிக்கை தேவை:
நதிகள், பேரழகை மட்டுமல்ல, பேரழிவை உண்டாக்கும் சக்தியையும் தன்னுள்ளே கொண்டுள்ளவை. நதி சீரமைப்புப் பணியாற்ற துவங்கும் முன்பாக, ஆற்றின் எல்லைகள், வெள்ள அளவு, நீர்ப்பிடிப்புப் பகுதிகள், உயிர்ச் சூழல் என எல்லாக் கோணங்களிலும் ஆய்வுகள் செய்து, பின் விளைவுகளை உருவாக்காத வகையில் கவனத்துடன் திட்டமிட்டு, பின்னரே செயல்படத் துவங்கவேண்டும். ஆனால், நொய்யல் சீரமைப்புக் குழுவினர் இந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுகிறார்களா?.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் சுற்றுப்புறச் சூழல் வல்லுநர்களுடன், நொய்யல் சீரமைப்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு கள ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு விபரங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களைப் பார்க்கும்போது நொய்யல் சீரமைப்புக் குழுவினர் மேற்கண்ட தன்மையில் ஆய்வுகள் செய்து வேலைகளைத் துவக்கியதாகத் தெரியவில்லை.
ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகள்:
நொய்யலாற்றின் எல்லைகளை வரையறுக்கப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பொதுப்பணித் துறையினர் சர்வே பணியைத் துவங்கியுள்ளனர். திருப்பூரின் உட்பகுதியில் காசிபாளையம், பூலவாடி சுகுமார் நகர், அணைக்காடு, மணியகாரம்பாளையம், மின்மயானம் ஆகிய பகுதிகளில் நொய்யலாறு சுமார் 400 அடி அகலம் பரந்துள்ளது. இதில், மணியகாரம்பாளையம் முதல் சுகுமார் நகர் வரை தெற்கு கரையோரத்திலும், சில பகுதிகளில் ஆற்றிற்குள்ளும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல் வடக்கு கரையில் அணைக்காடு, கருமாரம்பாளையம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. காசிபாளையம் சுத்திகரிப்பு நிலையம் உட்பட சில தனியார் கட்டிடங்கள் ஆற்றின் கரையை பெருமளவு ஆக்கிரமித்துள்ளன. வளர்மதி பாலம் உள்ள பகுதியில் மிகக் குறுகலாக சுமார் 250 அடி அகலம் மட்டுமே இருக்கிறது. மேலும், மணியகாரம்பாளையம் மின்நிலையம் எதிர்புறம் ஆற்றில், நல்லுர் நகராட்சி குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறன. இந்த இடத்தில் ஆறு மிகவும் குறுகி ஓடை போல் காட்சிதருகிறது.
குறிப்பாக கஜலட்சுமி தியேட்டர் இருக்கும் இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றங்கரை தியேட்டர் வாசலை ஒட்டினார்போல் இருந்தது. அதற்கு அருகிலேயே பல ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைத்தனர். தற்போது அந்த சாலையும் ஆக்கிரமிப்பின் ஒரு பகுதியாக மாறி இருக்கிறது. மீண்டும் அங்கே சாலை அமைக்க மேற்கொள்ளும் முயற்சி நொய்யல் ஆற்றை மென்மேலும் குறுக்குவதாக இருக்கிறது.
ஆற்றுக்கு உள்ளே சாலை?
ஆனால், மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அப்படியே விட்டுவிட்டு, கண்ணுக்குத் தெரியும் பகுதிகளில் மட்டும் வேலைகள் நடைபெறுகின்றன. ஒருபடி மேலே சென்று அணைக்காடு பகுதியை ஒட்டிய கரையில் ஆற்றிறுக்கு உள்ளேயே மாநகராட்சி திட்ட சாலை அமைத்தது. அதே பகுதியில் ஆற்றங்கரையில் சமுதாய நலக்கூடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு அப்பணிகளை நிறுத்தியுள்ளன. மேலும், ஆற்றின் பரப்பில் உள்ள இயற்கையான பாறைகள் ”அழகை மேம்படுத்துதல்” எனும் பெயரில் கனரக இயந்திரங்கள் மூலம் உடைத்து இடம் மாற்றப்படுகின்றன. மேலும், ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த செயல்பாடுகள், திருப்பூரின் மையத்தில் கண்ணுக்கு தெரியும் பகுதிகளில் மட்டும் நொய்யல் ஆற்றை அழகுபடுத்துவதாக உள்ளது. இப்போது நடைபெறும் பணிகள் நொய்யல் நதியை மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வரும் அடிப்படை மாற்றத்துக்கு உதவாது.
பேரழிவு அபாயம்:
ஆறுகள் நீரினால் மட்டும் ஆனதல்ல, பாறைகளும், மணலும் ஆற்றின் போக்கை தீர்மானிப்பதில் முதல் பங்கு வகிக்கின்றனர். அனைத்து ஆறுகளுமே வளைந்து நெளிந்து தான் பயணிக்கின்றன, அதுதான் நீரின் போக்கு. ஆற்றின் இயல்பிற்கு மாறாக, பாறைகளை அகற்றுதல், ஆழப்படுத்துதல், எல்லைகளை குறுக்குதல் என அதன் போக்கை மாற்ற முயன்றால், வெள்ளம் பெருக்கெடுத்து எதிர்பாராத பகுதியில் பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்கும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே கணிக்க முடியாத நிலையில், இதுபோன்ற பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டியவை.
அறிவியல் ஆய்வு அவசியம்:
கடந்த 50 ஆண்டுகளில் நொய்யல் நதியின் போக்கு குறித்து அறிவியல் அடிப்படையிலான ஆய்வு செய்யவேண்டும். புவி வெப்பமயமாக்கல் குறித்து உலகமே கவலை கொண்டுள்ளது. பல நாடுகள் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பருவ நிலையில் மாற்றம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புதிய நோய்கள் உருவாக்கம், உணவு தானிய உற்பத்தி பாதிப்பு என பல்வேறு பிரச்சனைகளைத் தற்போது சந்தித்து வருகின்றது. எனவே நொய்யல் நதியைப் பாதுகாப்பது என்பதும் இதன் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட வேண்டும்.
கரையோர மேம்பாலங்கள்:
போக்குவரத்தை சீரமைக்க நொய்யலின் கரைகளையொட்டி சாலைகள் அவசியமே. ஆனால், இப்போது போல ஆற்றை ஆக்கிரமித்து சாலைகள் அமைப்பது மிக மோசமான விளைவுகளையே தரும். ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
குறிப்பாக இந்த விசயத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தியின் கருத்துக்கள் பொருத்தமானவை. "ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். அதனால் முழு அகலத்துக்கு ஆறு இருக்கும் வகையில் வழித்தடங்கள் அமைக்க வேண்டும். வெள்ளம் வரும்போது வளைவுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படும். எனவே அப்பகுதிகளில் போதுமான அகலம் விட்டு, சாலை அமைக்க வேண்டும். ஆற்றுப்பகுதியில் சாலை அமைக்காமல், கரையில் உள்ள தனியார்களிடம் நிலத்தைப் பெற்று சாலை அமைக்க வேண்டும். அப்போது தான் பொதுப்பணித் துறை நடவடிக்கையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்." (தினமலர் 11.3.2010)
மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரைகளில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த சாலை ஆற்றின் அகலத்தைக் குறுக்காமல் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆற்றங்கரை குறுகலான பகுதிகளில் தூண்கள் (பில்லர்) அமைத்து அதன் மீது சாலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வைகை அனுபவத்தை இங்கும் பின்பற்றலாம். சாலைகளை அமைப்பதற்கு முன்பாக எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
செய்யவேண்டியது என்ன?
நொய்யலாறு சீரமைக்கப்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம். அப்படிச் செய்வதென்பது, அதன் ஜீவனை மீட்பதாகும்.
- ஆற்றோரம் மூன்று விதமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும்
- ஆற்றோரம் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்றும்போது அவர்களுக்கு தகுந்த மாற்று இடம் கொடுப்பதுடன், அந்த இடத்தில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் காங்கிரீட் வீடுகள் கட்டித் தர வேண்டும்.
- தனியார் ஆக்கிரமிப்புகளை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் முழுமையாக அகற்ற வேண்டும்.
- அரசுத் துறை ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும்.
- ஆற்றிலும், ஆற்றங்கரைகளிலும் கோழி, பன்றி, மாடு உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதை முற்றிலும் தடுத்திட வேண்டும்.
- நகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மையப்படுத்தப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மூலம் முழுமையாக சுத்திகரித்து ஆற்றில் விட திட்டமிட வேண்டும்.
- கரையோரம் மண் அரிப்பைத் தடுப்பதற்கு ஆற்றின் நீரோட்டத்துக்கு பாதிப்பில்லாமலும், அகலத்தைக் குறுக்காமலும் தடுப்புச் சுவர் அமைப்பதுடன், ஆற்றோர மரங்கள் மற்றும் தாவரங்களை அமைத்துப் பராமரிக்க வேண்டும்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும், ஆரோக்கியமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும். அறிவியல் அடிப்படையிலும், தொலைநோக்குடனும் பொது விவாதத்தை ஏற்படுத்தி, சமூகப் பொறுப்புணர்வோடு பணிகளை மேற்கொள்வது மிக அவசியம்.
யாரும் செய்ய மாட்டங்க நண்பா ... வளம் கூட விளம்பரம் தான் அதான் சிட்டிக்குள்ள மட்டும் பண்றாங்க..
ReplyDelete