வாகை சூடிட ... வா தோழா ...!

மூடத்தனங்களும், ஏழ்மையும், அறியாமையும் ஒருசேரக் குடிகொண்டிருக்கும் கிராமம் அது. கிராமம் முழுவதும் செங்கல் சூளை. சூளையை அமைத்துக் கொடுத்த சூத்திரதாரிக்கு இப்போ புத்தி பேதலிச்சிடுச்சு. ’நாம பார்த்து வாழ்ந்த காடு, சூளைக்காக வெட்டி வெட்டி இப்போ குருவிக்கும் கூடில்லாத செம்மண் புழுதியாகிப் போச்சேங்கற வருத்தத்துல...!’ அவர் அப்படியாயிட்டாரு. அவர் போனா என்னங்க, ஆண்டை இருக்காரு, அவரு குடுக்குற அட்வான்சு பணம் இருக்கு, காலமெல்லாம் அவருக்கே உழைச்சுக் கொட்டி பொழச்சுக்கலாம் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தாங்க அவங்க .... இப்படி அடிமைகளா வாழ்ந்த மக்களைத் தேடி, ஒரு ஆசிரியரும், ரேடியோ பெட்டியும் வருகிறது.

நவீன கருவிகளும், கல்வியும், மனசு நிறைந்த மனித நேயமும் கொண்ட ஒரு இளைஞனின் ஆளுமை, அந்த கிராம மக்களின் காலத்தையே புரட்டிப் போடுது. சுறுக்கமாச் சொன்னா, பண்ணையடிமை நிலையில் சிக்கித் தவிக்கிற மக்கள் எப்படி தங்கள் உழைப்பிற்கு கூலி கணக்கிட்டு வாங்கும் உரிமையை அடையறாங்கன்றதுதான் கதை.
 

இன்னமும் இந்தியாவின் ஏராளம் கிராமங்கள் இப்படி சுதந்திரமே பார்த்திராத கிராமங்களாய் இருக்கின்றனவே என்ற மனப்பாரமும், இந்த நிலையை மாற்றிட நாம் மனதுவைத்தால் முடியும் என்ற நம்பிக்கையையும் ஒருசேர விதைக்கிறது படம். இயக்குனர் சற்குணத்திற்கு பாராட்டுக்கள். படத்தின் உணர்வுகள் அனைத்தையும் சிந்தாமல் சிதராமல் வடித்திட்ட இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

படத்தில் முத்திரைபதிக்கும் இன்னொரு விசயம் என்றால் கதாநாயகி இனியா, ’இதுதான் தமிழ்நாட்டு அழகு’ இப்படி ஒரே வரியில சொல்லலாம். ஆனாலும் அதுமட்டும் போதாது, படத்துல வாரதுபோலவே, கண்டெடுத்தான் காட்டு கல்லுக்கு இணையா வேறெதுவும் நிக்காதுங்கறது எத்தனை உண்மையோ, அதைப் போலவே இந்த நாயகியின் படைப்பை மிஞ்சிட இன்னொரு படைப்பு அத்தனை சீக்கிரம் வெளிவந்திடாது.

இந்தப் படத்தைப் பார்த்து உங்களுக்குள் ஒரு கிளர்ச்சியும், பாலை வனத்தின் நடுவே ஏராளம் தண்ணீரைக் கண்ட தவிப்பும் ஏற்படுமானால், நாம் தோழர்களாகிவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

படம் திரையரங்கிலேயே வாகை சூடும் என்று நம்பிக்கையோடு சொல்லலாம். தொலைக்காட்சிகளில் விளம்பர இடைவேளைக்கிடையே திரையிடப்படும். இருந்தாலும், கிராமங்களின் ஒவ்வொரு வீதிகளிலும், கல்லூரி இளைஞர்களின் மத்தியிலும் ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்ல வேண்டும். கதை நடக்கும் களம் 1966களின் துவக்கம். சுதந்திரம் 1947இல் கிடைத்திட்டதா சொன்னாலும், அந்த கிராமத்திற்கு இந்தப் படம் முடியும் தருவாயில்தான் சுதந்திரமே சென்று சேர்கிறது.

இப்படி, இதுவரைக்கும் சுதந்திரமே சென்றடைந்திடாத கிராமங்கள் ஏராளம் இருக்கின்றன. உரிமைகளையே அடைந்திடாத மக்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் வெளிச்சம் பற்ற வேண்டுமானால், இந்த நெருப்பு நமக்கு உதவிடும்.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels