நமக்கு மின்வெட்டு: செல்போன் கம்பெனிகளுக்கு மானியம் !

மின்வெட்டும் விலையேற்றமும் வாட்டுகிறது மக்களை:
செல்போன் கம்பெனிகளின்
ஜெனரேட்டர்களுக்கு மானியம்!
  
தமிழகத்தின் தொழிலும், விவசாயமும் கடும் பாதிப்பில் சிக்கியபோது திமுக தலைமையில் செயல்பட்டுவந்த அரசு, தொழில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்குவதாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தியது. இப்போது காங்கிரஸ் அரசோ, தன் பங்கிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தியதுடன், கேஸ், டீசல் விலையை உயர்த்திடவும் தயாராகியுள்ளது. அத்துடன், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றை குறைக்கவேண்டும் எனவும் ஆட்சியாளர்கள் பேசிவருகின்றனர்.
ஏழை மக்களுக்கு அரசு உதவி கேட்டால் எட்டிக்காயாய்க் முகம் சுழிக்கும் மத்திய அரசு. தனியார் செல்போன் கம்பெனிகளுக்கு மட்டும் பின்வாசல் வழியாக உதவிகளை அள்ளி வழங்கிவருகிறது. அதுவும் ஏற்கனவே கொள்ளை லாபத்தில் இயங்கிவரும் இந்த நிறுவனங்கள் அரசு உதவியிலும் திளைத்துவருகின்றன.
இந்த உண்மை, கிரீன் பீஸ் என்ற தன்னார்வ அமைப்பு அரசிடம் வழங்கியுள்ள புகார் மனுவில் வெளிப்பட்டுள்ளது. அந்த புகாரில், “தனியார் செல்போன் நிறுவனங்களின் டவர்களுக்கு வைக்கப்படும் ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் டீசலுக்கு ரூ.7 முதல் ரூ.11 வரை மானியம் கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு மட்டும் எரிபொருள் செலவு 21 சதவீதம் குறைகிறது.” என்று குறிப்பிட்டுள்ளனர். அதாவது அத்தியாவிசய உணவுப்பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கும், விவசாயத்திற்கும் மானிய விலை பெட்ரோலை அரசு வழங்குவதில்லை. தனியார் செல் நிறுவனங்கள் இந்த மானிய உதவியை முழுமையாக அனுபவிக்கின்றனர். 2010-2011 ஆண்டுகளில் 300 கோடி லிட்டர் டீசலை இந்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன.
இவ்வளவு டீசலை ஜெனரேட்டர்களுக்கு உபயோகித்தால், 5.6 டன் (5600 கிலோ) கார்பன் டை ஆக்சைடு காற்று மண்டலத்தில் கூடும். இது சுற்றுச்சூழலுக்கும் கடும் பாதிப்பு ஏற்படுத்தும். அத்துடன் சாதாரண மக்களுக்கு எந்த பயனையும் அளிக்கப்போவதில்லை. 15 ஆயிரத்து 200 கோடிக்கு டீசல் வாங்கும் அந்த நிறுவனங்களுக்கு 2 ஆயிரத்து 600 கோடி மானியமாக கொடுக்கப்படுகிறது. இந்த மானியத்தை பெறும் ரிலையன்சு உள்ளிட்ட சில செல்போன் நிறுவனங்கள், தாங்களே பெட்ரோலிய நிறுவனங்களை சொந்தமாகக் கொண்டிருப்பதன் மூலம் அதிக லாபத்தை அடைகின்றனர் எனவும் கூறப்படுகிறது. கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சிறு, குறுந்தொழில்கள் இதுவரைக்கும் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாக டேக்ட் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொழிலாளர்களுக்கு வேலை இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பெட்ரோல் டீசல் விலையேற்றம், பேருந்துக் கட்டண உயர்வு, ஆட்டோ போக்குவரத்து கட்டண உயர்வு என்ற உடனடி விளைவுகளை ஏற்படுத்துவதுடன், அத்தியாவிசயப் பொருட்களின் விலையேற்றத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால், இந்த விலையேற்றத்தை தவிர்க்கும் வகையில், பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க மாட்டேன் என அரசு பிடிவாதம் பிடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
(ஆதாரம்: தி இந்து 19.05.2011)


0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels