சதுர் வர்ணம் ...


”உயரத்தில்
மலைமேல் வாழ்வது
என் தவறில்லை ..”
ஆம் நீ சொல்வது உண்மையானால்
அது நியாயம் தான் ...

ஆனால்
தன்னையொத்த மனிதரை,
குழந்தைகளை, எம் பெண்டிரை
பள்ளத்தில் தள்ளி விட்டானே
உன் பாட்டன் ...
அவன் செயல்தான் என்னை
ஆத்திரம் கொள்ளச் செய்கிறது...

அநீதியிழைக்கப்பட்டவர்களுக்கு
கைகொடுக்கக் கேட்கிறேன்
அழுக்காகுமென பாசாங்கு பேசுகிறாய்...

மழை நிற்காமல் பெய்கிறது
வீதியெல்லாம் வெள்ளக்காடு
உனக்கு குடையும்
அவனுக்கு படகும் கொடுக்கச் சொல்கிறேன்
அநீதி என்று ஆர்ப்பரித்துக் கதருகிறாய் ...

சந்ததிகளாய் அவர்கள்
பள்ளத்தில்
அவர்களின் குடிசைகள்
வெள்ளத்தில்

”அவனுக்கு அவனிடம்
எனக்கு என் இடம் ...
யாரையும், யாரும் ஆக்கிரமிக்க வேண்டாம்”
குரூரத்துடன் நீ அமைதி பேசுகிறாய்

கீழே, கீழேஅழுந்தித் தள்ளுகிறாய்
உன்னையும், உன் வீட்டையும்
சுமக்கிறார்கள் ஒரு பகுதியினர்
அதற்கும் கீழே, சுவர் தடுப்பு
அடிமூட்டையாய் நசுங்கிய
மக்கள் தலைமேல் அந்த மலையைச் சுமக்கிறார்கள்...

எங்கள் நியாயம் சத்தமாய் ஒலிக்கிறது...
”உயரத்தில்
மழைமேல் வாழ்வது
உன் உரிமை ...
நீ எம் தலை மேல் அல்லவா குந்தியிருக்கிறாய்?”

”அமைதி நீடிக்கிறது”
மேலிருந்து ஆசிர்வதிக்கிறார் கடவுள்
உன் வழியாக

கீழிருந்து கர்ஜிக்கிறது காலம்
என் வழியாக
”கடந்த காலத்தின்
மயானம் உயிர்த்தெழுகிறது”

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels