எழுத முடியாததொரு கட்டுரை !

ஒரு கட்டுரை எழுதலாமென்று தொடங்கினேன். பின் எழுதாமல் விட்டுவிட்டேன்.

நேற்று டில்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுத்தெருவில் நிர்வாணமாக வீசப்பட்ட சம்பவம் நடைபெற்ற ஓராண்டு நினைவு தினம். அந்தக் கொலை மட்டுமல்ல, ஆண்டுக்கு 600 பாலியல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவந்த தலைநகரில் - மிகப்பெரும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியது.

மும்பையில் ஒரு பத்திரிக்கையாளர் செய்தி தேடிச் சென்ற இடத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி எல்லோரையும் உலுக்கியது. இன்றுவரை பலாத்கார செய்திகள் குறைந்தபாடில்லை. செய்தியாகிய சம்பவங்களை அடுக்கினால் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பலாத்காரங்கள் நடைபெறாமல் இல்லை. சென்ற ஆண்டில் இப்படி செய்தியான சில சம்பவங்களைத் தொகுக்கலாமென்று தொடங்கியபோது. சம்பவங்களின் தொடர்ச்சி மலைப்புக்குள்ளாக்கிவிட்டது.

நம் சமூகத்தில் பலாத்காரம் உண்மையில் மதிப்பீடுகளில் இருந்துதான் தொடங்குகிறது. 'அவளைப் பற்றி தெரியாதா?', 'என்னடி! நான் ஆம்பள' என்பதாக நம் அன்றாட வாழ்க்கையின் உரையாடல்கள் தொடங்கி, கவர்ச்சி நடிகைதானே என்று அவளின் அந்தரங்கங்களை விவாதப் பொருளாக்குவது வரை இந்த மதிப்பீடுகள் நம்மை ஆக்கிரமித்திருக்கின்றன.

நீதிபதியாக இருந்த கங்குலி, பத்திரிக்கை ஆசிரியர்கள் தருண் தேஜ்பால், சன் தொலைக்காட்சியின் ராஜா, கேரளாவிலிருந்து சில பத்திரிக்கையாளர்கள், இளம்பெண்ணை பாதுகாக்க அப்பா கேட்டுக்கொண்டார் என அவளின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் பின்தொடர்ந்த குஜராத் அரசு நிர்வாகம். பெண்ணை சக மனுசியாகக் கருதாத மதிப்பீடுகளின் வெளிப்பாடுகள்தான் எத்தனை??

காலை தமிழ் 'தி இந்து'வில் Kavitha Muralidharan ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது நேரடியாகவே முகநூல், இணைய பயன்பாட்டாளர்களைக் குறித்து இருந்தது. இணையவெளியிலும் இந்த குறுகலான மதிப்பீடுகள் ஆக்கிரமித்திருப்பதை கவலையோடு பதிவு செய்தது.

சரிபாதி மனித சமூகத்தை நாம் இப்படித்தான் வைத்திருக்கிறோம். எங்கும் வியாபித்திருக்கும் இந்த மதிப்பீடுகளை உடைத்தெரிவது ஒவ்வொரு மனிதனின் பணி. நீயும், நானும் சக மனிதர்கள் என்ற நிலை இல்லாத கொடுமையான சூழலில், ஒரு மனிதன் எப்படி சுதந்திரமாய் உலவ முடியும்??

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels