ஜெயமோகன் அல்லது அதிஷா தொடங்கிவைத்த விவாதத்தில் எனது பங்களிப்பு ...

எழுதுகிறவனுக்கு ஒரு பெருமித உணர்வு இருக்கலாம். அது மற்றவர்கள் எல்லோரையும் விட - நான் உயர்ந்தவன் என்ற ஒப்பீட்டிலிருந்து எழுவதல்ல. மாறாக தன் மீது கொண்ட நம்பிக்கையின் விளைவாக எழுவதாக இருக்க வேண்டும்.

இந்த உணர்வு ஒவ்வொருவருக்குமே தேவைப்படுகிறது. தாய்மொழி வழிக் கல்விக்கு எதிரான பலரும், தம் மொழி மீதான நம்பிக்கை குறைந்தவர்களாகவும் - ‘அறிவு’, ‘முன்னேற்றம்’, ‘வளர்ச்சி’, ‘வாழ்க்கை’ குறித்த குறுகிய புரிதலோடும் இருக்கிறார்கள். (தமிழ் மொழியின் பெருமை - இயல்பானது. அது இன்னொரு மொழியின் ஒப்பீட்டிலிருந்து எழுவதல்ல)

தான் செய்கிற பணியை விருப்பமின்றி செய்கிறவர்களும் அப்படித்தான். இருப்பினும் நமது பெருமித உணர்வானது - நம்பிக்கை அல்லாது - கர்வத்தில் இருந்து எழுகிறதாயின் அது மிகவும் ஆபத்தானதாகும்.

தையல், ஆட்டோ ஓட்டுதல், சுமை தூக்குதல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், பாட்டு, இசை, குப்பைகளைத் தரம்பிரித்தல், சேகரித்தல் என மனித சமூகம் தவிர்க்க முடியாத எல்லா வேலைப் பிரிவினைகளுமே - மனிதன் செலுத்தும் பயனுள்ள முயற்சியின் (அதாவது உழைப்பின்) வெவ்வேறு வடிவங்கள்தான்.

செய்கிறவரின் திறனைப் பொருத்து அவரவருக்கான பலன் மாறலாமேயன்றி - ஒரு வேலை கீழானது, மற்றது மேலானது என்பதல்ல. - வேலைப் பிரிவினைகளோடு, பொருளாதார வேறுபாடுகளும், தீண்டாமையும் ஒருங்கிணைக்கப்பட்டதன் மோசமான விளைவுகளைத்தான் - இந்திய ‘சாதி’ சமுதாயத்தில் காண்கிறோம்.

பொருளாதார ஏற்றதாழ்வுகளில் இருந்தும், பால், சாதி உள்ளிட்ட வேறுபாடுகளை மையப்படுத்திய சமூக தாழ்வுபடுத்துதலில் இருந்தும் - கன்னியமான உழைப்பை மீட்க வேண்டும்.

சுய நேசிப்பின் விளைவான தன்நம்பிக்கைக்கு பதிலாக - ஒப்பீட்டு முறையிலான கர்வம் - இந்த ஏற்றதாழ்வுகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. இந்த நிலைதான் மக்களிடையே பிரிவினைகளுக்கு விதையாகவும் இருக்கிறது.

#கர்வம் அறுப்போம்

3 comments:

 1. முற்றிலும் உண்மை

  ReplyDelete
 2. //செய்கிறவரின் திறனைப் பொருத்து அவரவருக்கான பலன் மாறலாமேயன்றி - ஒரு வேலை கீழானது, மற்றது மேலானது என்பதல்ல//

  இது நச்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ... உங்கள் வாசிப்புகளின் வழியே உற்சாகம் பெறுகிறேன்

   Delete

Labels