அப்பாவும் - தங்க மீன்களும் ! (ஒரு உரையாடல்)

அப்பாக்களைக் குறித்து நாம் போதுமான அளவு பேசுவதில்லை ... அதனால்தான், ஓரளவு சுமாராகப் பேசினால் கூட - நெகிழ்ந்துபோகிறது மனது ...

'தங்க மீன்கள்' திரைப்படை முன்னோட்டத்தை ஒரு பத்து முறையாவது பார்த்திருப்பேன். தன் மகளின்/மகனின் சின்னச் சின்ன ஆசைகளையே, தன் வாழ்நாள் லட்சியமாய்ச் சுமந்துகொண்டு - தன் இயலாமைக்கு கோபத் திரையிட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாக்கள் - வாழும்போது கவனிக்கப்படுவதேயில்லை.



அப்பாக்களாய் இருத்தலும் ஒரு சக்கரம்தான். பிறந்து சில நாட்களுக்கு குழந்தையின் யாசகர்கள். பின் சில வருடங்கள் குழந்தைக்கு நாயகர்கள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது மாணவர்கள்.

சமீபத்தில் பாண்டியராஜ் இயக்கிய கேடி பில்லா - கில்லாடி ரங்கா பார்த்தேன். இறுதி சில காட்சிகள் கண்களை நிரப்பின. அது படத்தின் வெற்றியென்று தோன்றவில்லை
. சொல்லப்போனால், மிகச் சிறிய அளவே அப்பாக்களை நேர்மையாக பதிவு செய்திருந்த போதிலும், அந்தப் படம் மனதை வருடியது - அப்பாக்களால்தானேயன்றி - படத்தால் அப்பாக்கள் பெருமையடைந்ததில்லை.

முன்னொரு முறை தவமாய்த் தவமிருந்து அப்படியொரு உணர்வை ஏற்படுத்தியது - இன்னும் எண்ண முடிந்த சில படங்களில் அப்பாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நாவல்கள், சில கவிதைகள் - எழுதப்பட்டிருக்கின்றன.

அவர்களை புனிதப்படுத்தி உயர்ந்த ஜீவன்களாய்க் காட்டுவதும் சரி - நேசிக்கவே தெரியாத காட்டு மனிதர்களாய்க் காட்டுவதும் சரி அவர்களுக்குச் செய்யும் துரோகமென்றே படுகிறது. மேலும், உன் மகன் உன்னை மதிக்கவேண்டுமானால், நீ அப்பாவை மதி என்ற மிரட்டல் தொனியிலான அறிவுருத்தல்களும் அப்பாக்களை உணர்த்துவதில்லை.


சாதாரண ஜீவன்களாய்ப் பிறந்து - தனக்கும் ஒரு தொடர்ச்சி உண்டென்றுணர்த்தும் குழந்தையைக் கண்ட பரவச நிலை ஒருத்தனை அப்பாவாக்குகிறது. எல்லா அப்பாக்களும் மதிக்கப்படுவதில்லை. பிள்ளைக்கும் தனக்குமான இடைவெளியை - நட்பால் நிரப்பிக்கொள்ள விரும்பி – வெளிப்படுத்துவதில் வெற்றிபெற்ற அப்பாக்கள் கொண்டாடப் படுகிறார்கள். மனதுக்குள்ளேயே புழுங்கி வாழும் ஒருதலைக் காதலனைப் போன்ற அப்பாக்கள் … புதை மேட்டிலிருந்தபடி காதலைச் சுரந்துகொண்டேயிருக்கிறார்கள்.

#அப்பாவென்றொரு கவிதை...


முகநூலில் இந்தப் பதிவில் விவாதிக்க ...

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels