கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?

வங்கிகள் கூறும் 8 ஆலோசனைகள்

”கல்விக்கடன் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது” என்று மாணவர்கள் புலம்புகிறார்கள். மந்திரிகளோ இந்த அரசு பல்லாயிரம் கோடிகள் கல்விக்கடனாகத் தர தயாராக இருக்கிறது என்று தம்பட்டமடிக்கிறார்கள். அட என்னதான் பிரச்சனை? என்று சில வங்கி நிர்வாகிகளைச் சந்தித்துக் கேட்டோம். அவர்கள் அள்ளிக்கொட்டிய முத்த்தான யோசனைகள் வாசகர்களுக்காக தரப்படுகின்றன. (அடைப்புக் குறிகளுக்குள்,  சந்தேகங்களும் அதற்கான பதில்களும்)

ஆலோசனை 1:
மாணவர்கள் முதலில் கல்லூரியில் சேர்ந்த பிறகே கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்று, தேர்வானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்விக்கடன் கிடைக்கலைனா என்ன செய்யிறது?. ”அது உங்க தனிப்பட்ட பிரச்சனை”)

ஆலோசனை 2:
கடன் கேட்கும் பலரும் ஏழை மாணவர்களாக இருக்கின்றனர். பலருக்கு கடன் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு இருப்பதில்லை. (வேற வங்கியில கணக்கு இருந்தா?. அங்கயே நீங்க விண்ணப்பிக்கலாம் ஆனா தரமாட்டோம்) எனவே, கணக்கை துவங்கி, சில மாதங்கள் உங்களை நாங்கள் கண்காணித்த பின்னர் கடனுக்கு விண்ணப்பிக்க முயற்சிக்க வேண்டும். (இதுக்கு பலநாளாகுமே?. அதுதான எங்களுக்கும் வேணும்)

ஆலோசனை 3:
கடனைத் திருப்பிச் செலுத்துவதை உத்திரவாதப் படுத்தும் வகையில் வருமானச் சான்றிதழ் பெற்று வந்தால் வங்கி மேலாளர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும். குறைந்த சம்பளம் பெறுவதாக சான்றிதழ் கொடுப்பவர்களுக்கு கடன் கிடைக்க வாய்ப்பு குறைவு. (இது எதுக்கு குடுக்கணும்? ”அட, கடன திருப்பி குடுக்க உத்திரவாதம் வேணாமா? சுலபமா கடன் கிடைச்சா நிறைய பேர் வந்துருவாங்க சார்)

ஆலோசனை 4:
சொந்தமாக நிலம் இருந்தால் அதற்கான ஒரிஜினல் பத்திரம் அல்லது வேறு ஏதாவது மதிப்பு மிக்க சொத்துக்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பெற்றோர் எத்தேனும் தொழில் நடத்துபவராகவோ, நிறுவன அதிபராகவோ இருந்தால் கடன் கிடைப்பது எளிது. (அப்ப ஏழைகளுக்கு கடன் குடுக்க மாட்டீங்களா? ”ஹீ ஹீ ... கல்விக்கடன் ஏழை மாணவர்களுக்குதான், ஆனா பிசினஸ் முக்கியம் இல்லையா)

ஆலோசனை 5:
கல்லூரிகள் கேட்கும் நன்கொடை கடனாக தரப்பட மாட்டாது. குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் எழுதி விண்ணப்பிக்க வேண்டும். (இத கல்லூரிகள் கிட்ட தான சொல்லனும்? ஒருவேளை அதிக கட்டணம் வசூலிக்கிற கல்லூரிகள் மேல நடவடிக்கைக்கு பரிந்துரைப்பீங்களா? நோ நோ ... அது டிபார்ட்மெண்ட் வேற. நாங்க கடன் தொகை குறைக்க சாக்கு மட்டும்தான் சொல்லுவோம்)

ஆலோசனை 6:
மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கிகளின் வழிகாட்டுதலின் பேரில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எனவே மாணவர்கள் நேரடியாக வங்கிகளுக்கு வருவதைவிட, முதலில் மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கிக்கு சென்று மனுக் கொடுத்த பின்னர் எங்களிடம் வரவேண்டும். (முதல்லயே உங்க கிட்ட வந்தா?. நாங்களே உங்களை அங்கெல்லாம் அனுப்பி, அதுக்கும் சலிக்காம நீங்க வந்தா அடுத்த ஆலோசனை குடுப்போம்)

ஆலோசனை 7:
மதிப்பு மிக்க சொத்துக்களின் ஒரிஜினல் பத்திரத்தை பிணையாக கொடுத்தால் கடன் கிடைப்பது எளிது. (இதுக்குபேரு கல்விக்கடனா? ... நாங்க உங்கள கல்விக்கடன் வாங்கச் சொன்னோமா?)

ஆலோசனை 8:
 ஒரிஜினல் டிசி, மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை கொடுப்பது கட்டாயம். (முதல் ஆலோசனைல கல்லூரில சேர்ந்த பின்னர்தான் விண்ணப்பிக்கனும்னு சொன்னீங்க, ஒரிஜினல் சான்றிதழ்களை குடுத்தா தான கல்லூரியில சேர முடியும்? ஆமா அதுதான் முதல்ல ... அப்ப தான சார் அலைக்களிக்க முடியும்? என்று கேட்காமல் கேட்டார்கள் அவர்கள்.)
 
இதெல்லாம் மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் இல்லையே? என்று கேட்டால், “மத்திய அரசு வழிகாட்டுதல்கள் மட்டும்தான் தந்திருக்கிறது. இதற்கென எந்த ஒதுக்கீடும் செய்யவில்லை. வங்கிகள் தங்கள் பணத்தில் கடன் கொடுக்க வேண்டும். எனவே நாங்கள் கேட்பதை நீங்கள் கொடுத்தாகவேண்டும்” என்று வெடிக்கிறார்கள் அவர்கள். பெரிய முதலாளிகள் வாங்கிய பலாயிரம் கோடிகள் வராக்கடனாக தள்ளுபடி செய்ய்யபடுகிறது. ஏழை மாணவர்களையோ, அற்ப காரணங்களுக்காக கால் கடுக்க நடக்கச் செய்கிறது.
”விழித்திடு தோழா, நமை வதைக்கும் பொய் விதிகளைத் திருத்திட வேண்டும்.”

2 comments:

  1. அருமையான பதிவு... வாழ்த்துகள்..!

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

    ReplyDelete
  2. விழிப்பதற்கான அறிகுறி கூட தெரியவில்லையே தோழா!

    ReplyDelete

Labels