மீண்டும் வருகிறது கம்யூனிசப் பேய் !

தினமலரின் இன்றைய தலைப்பும் செய்தியும் சிரிப்பை வரவழைத்தன. தமிழகம் ஆகிறது 'சோவியத் யூனியன்' என்று தலைப்பு போட்டிருந்தார்கள். அதோடு ஜெ யாரிடமோ தவறான யோசனை பெறுகிறார் - கண்ணை விற்று சித்திரம் வாங்குகிற கதைதான். இனி எல்லாம் முடிந்தது என்கிற போக்கில் எழுதியிருந்தார்கள்.

இந்தியா, உலகமயக் கொள்கையிடம் தன்னை அடகுவைத்து, மீளமுடியாத நெருக்கடிகளை வரவழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் - ஒரு மாநிலத்தில் மட்டும் பொருளாதாரக் கொள்கையை மாற்றிவிட முடியாது என்பது ஒரு பக்கம் இருக்க. இவர்கள் ஏன் குதிக்கிறார்கள்? எது அவர்களை உண்மையில் பயப்படுத்துகிறது? என்பது முக்கியமான கேள்வி.

நலத்திட்ட அரசு:
உணவகம், மருந்தகம், காய்கறிச் சந்தை, பாட்டில் குடிநீர், கேபிள் இணைப்பு - என்ற வரிசையில் திரையரங்கம் ஏற்படுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பல முன்னேறிய நாடுகளில் உள்ளதுபோல இவைகள் அனைத்தும் நலத்திட்ட நடவடிக்கைகள்தான்.

குறிப்பாக திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் சினிமா - ஒரு காஸ்ட்லி வியாபாரமாகவே நீடித்திருக்கிறது. ரிலையன்ஸ் உள்ளிட்ட மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும் ஒரு உதாரணம்)

அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - அவர்களின் மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக திரையரங்கம் கிடைக்காத சிறு படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம். அதுவும் நடைமுறைப் படுத்தப்படும் விதத்தில்தான் உள்ளது.
---
இந்தியாவில் பெரும் தொழில்களை தொடங்க சோவியத் உதவி பெறப்பட்டுள்ளது. கலப்பு பொருளாதாரம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுவரையில் சோசலிசப் பொருளாதாரம் அமலில் இருந்ததில்லை.

தினமலர் ஒரு போலி அச்சத்தைக் கிளப்புவதற்கு வேறு ஒரு காரணம் உள்ளது. அவர்களின் விருப்ப நாயகனும், இந்திய பெரும் முதலாளிகளின் அன்பு வேட்பாளருமான நரேந்திர மோடியை அதிமுக ஆதரிக்கவில்லை என்பதே அது.
---
எது கம்யூனிசம் என்கிற விளக்கத்தைக் கூட - முதலாளிகளே கொடுப்பதும். 'மனைவியை' பொதுவுடைமை ஆக்கிடுவார்கள். இரண்டு சைக்கிள் இருந்தால் ஒன்றை பிடுங்கிக் கொள்வார்கள். என்றெல்லாம் தவறான விளக்கங்களைக் கொடுத்து அச்சப்படுத்துவது இன்றைக்கு மட்டும் நடப்பதல்ல. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே "கம்யூனிச பூதம்" என்ற முதலாளிகளின் பிரச்சாரத்துக்கு பதில் கொடுத்துத்தான் தொடங்கும் என்பதிலிருந்து பார்ததால் - தொடக்கத்திலிருந்தே அவர்கள் இதைத்தான் செய்துவந்திருக்கிறார்கள்.

அம்பானி, அடானி வகையராக்களும், அவர்களின் கதா நாயகர்களும் அச்சமடையத் தொடங்கியுள்ளார்கள்.

#இது_நல்லதுதான்!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels