அரவாணிகள் நம்மை நெருங்கும்போது ஒருவித அச்சமும், வெறுப்பும் கலந்த உணர்வு பரவுவது உண்டு ... சிறு வயதிலிருந்தே நான் இதை அனுபவித்திருக்கிறேன்.
அவர்கள் சுத்தமாய் இருக்கலாம், என்னிடம் எந்த நோக்கமும் இல்லாமல் நெருங்கலாம், அவர்கள் ஸ்பரிசத்தில் அன்பு நிரம்பியிருக்கலாம். எனக்கோ, அது எதுவும் பிடிபட்டதில்லை. மிகச் சிறு வயதிலிருந்தே, அரவாணிகள் குறித்த அச்ச பிம்பம் நம்மையும் அறியாமல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
'தீட்டு' 'அறுவெறுப்புணர்வு' என்ற கற்பிதம் - எப்படி மனிதர்களின் இயல்பான ஒற்றுமையைக் குலைக்கிறது என்பதை பின்னால் தெரிந்துகொண்டேன். கருப்பாயிருத்தல், உடல் உழைப்பு செலுத்துதல், புலால் உண்ணுதல், காமல்/காதல், மாதவிடாய் மாட்டுக்கறி, பன்றிக் கறி என ஒவ்வொன்றின் மீதும் - வெறுப்புணர்வும், அச்சமும் பரப்பப்பட்டுள்ளது.
தம்பியொருத்தன், லட்டு தயாரித்து விற்பனை செய்து வாழும் அரவாணியின் அழைப்பிற்கிணங்க அவர் வீட்டுக்கு சென்று திரும்பினான். அவன் மீதான விசாரணைகளுக்கு பின் அந்தப் பக்கம் போவதேயில்லை. என்னிடம் இதை திரும்பத் திரும்பச் சொல்லி வருத்தப்படுவான்.
சுயமாக சந்தித்த சில சாதி ஒதுக்குதல்களும் - சாதி உயர்வு கற்பித்துக் கொண்டவர்களின் ஆதிக்கமும் நம்மை பாதித்தபோது - இவை குறித்து சிந்திக்கத் தொடங்கினோம். தொடர்ச்சியான விவாதங்களும், அணுகுமுறை மாற்றங்களும் - ஆதிக்க உணர்வு அற்றவனாக - ஆதிக்கத்தை எதிர்த்தவனாக வாழுவதே அறிவுடைமை என்ற முடிவுக்கு வரச் செய்தது.
ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம் போன்ற கட்டுக்களில் இருந்து வெளிவர முயல்வதற்கு ஒரு களம் இருக்கிறது. அரவாணிகளைப் பொருத்தமட்டில் - அப்படியில்லை. அரவாணியோடு சில நிமிடங்கள் பேசினாலே - நம்மை குற்றவாளியாக எக்காலமிடும் முட்டாள் உலகத்தில் வசிக்கிறோம்.
அரவாணிகளுக்கு வேலை வாய்ப்பு, பாலியல் சமத்துவம் - அத்தோடு உடலியல் குறித்த உளவியல் புரிதல் - இவையெல்லாம் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
14 ஆம் தேதி - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் அத்தகையதொரு உரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெகு நாட்களாக தொடர்ந்துவரும் குற்றவுணர்ச்சியோடு அங்கே செல்கிறேன்.
#ஒதுக்கும் ஆதிக்கம் வீழட்டும் ...
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment