ஐபிஎல் எதிர்க்கும் நவீன அடிமைகள்!


ஸ்பார்டகஸ் காலத்து கிளாடியேட்டர்களாகட்டும், இந்திய மன்னர்களின் போர்க் களங்களாகட்டும் ... சிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை - என்ற பாரதிதாசனின் வரிகள்தான் கடந்தகாலத்தின் நிதர்சனமாய் இருந்திருக்கின்றன. இப்போது நாம் நாகரீக காலத்தில் வாழ்வதான பெருமித உணர்வு நம்மிடம் பொங்கி வழியலாம்.  ஆனால், அது உண்மையில்லை என்பதை யதார்த்தம் மெய்ப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது.

பார்முலா 1 கார் பந்தைய விபத்துக்களை திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கிறோம். வீடுகள்தோரும் மல்யுத்த வீரர்களின் சதைப் பிண்டங்கள் - இரத்தம் கொப்புளிக்க மோதிக் கொள்கின்றன. விளையாட்டின் மீதான வணிகம் - வீரர்களை அடிமைகளாக்கி - அதன் மீது தன் வியாபாரத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இலங்கை வீரர்களை புறக்கணிப்போம் என்ற முழக்கத்துடன் ஐபிஎல் போட்டிகள் விவாதக் களத்துக்கு வந்திருக்கின்றன. 
அடிமை வியாபாரத்தின் நவீன முகம்தான் ஐபிஎல். அரசியல் விவாதக் களத்தில் ஐபிஎல் வந்திருப்பது சரிதான் என்றாலும் - இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை எதிர்ப்பதால் ஆவது என்ன என்ற கேள்விக்கு பதில் கிடைத்தபாடில்லை.

மக்களின் இரண்டு பிரிவினர் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆள்வோரும், அவர்களுக்கு ஆதரவானோரும் ஒரு பிரிவினர் என்றால் - ஆளப் படுவோரும், ஆள்வோரால் சுரண்டப்படுவோரும் மற்றொரு பிரிவினர். இலங்கையின் ஆளும் வர்க்கம் பேரினவாதத்தால் தனக்கென இனவாத ஆதரவை ஏற்படுத்தியுள்ள போதிலும் - அது இலங்கை மக்கள் மீது அந்த நாட்டின் அரசாங்கம் நடத்திவரும் பொருளாதாரச் சுரண்டலை மறைப்பதற்காகத்தான் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


ஈராக் உள்ளிட்ட பெற்றோல் வளம் மிக்க நாடுகளில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை பரவலாக்கிட இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கர பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது. அதைத் தொடர்ந்து தனது பயங்கர போர்களை நடத்திக் காட்டியது. ஆயுதங்களுக்கு கோடிகோடியாய்ச் செலவளித்த புஷ் அரசு - கருப்பின மக்கள் வாழும் பகுதிகளில் சூராவளி தாக்கியபோது கைவிட்டதை நாம் அறிவோம்.


உலகம் முழுமையிலும் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசும், இந்திய அரசும் விதிவிலக்கானவை அல்ல. - இருநாட்டிலும் மக்கள் ஆளும் வர்க்கத்தின் சதியால்தான் துண்டாடப் படுகிறார்கள் என்பது வரலாறு நெடுகிலும் நிரூபிக்கப்பட்ட உண்மை.


இந்த சூழலில் - இலங்கை அரசுக்கு எதிராக நடந்துகொண்டிருந்த போராட்டங்கள், முறையான விவாதத்திற்குள் செல்லாமல் பரபரப்பின் பாதையில் வழிநடக்கத் தொடங்கிவிட்டன. விவாதமோ, கடந்தகாலத்தைப் பற்றிய பார்வையோ இல்லாமல் உணர்ச்சியால் வழிநடத்தப்படும் நண்பர்கள் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்ற முழக்கத்தை - புரட்சிகரமான முழக்கமாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
எந்த நாட்டிலும், அதிகாரத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படும் போர்களில் - ஆயுதங்களே ஜெயிக்கின்றன மனிதம் செத்துப் போகிறது. அப்பாவி மக்களுக்கு ஆதரவான போராட்டமானது - மனிதர்களை விழிப்படையச் செய்வதாக இருக்க வேண்டும்.

தமிழர்களுக்கு ஆதரவான உலகலாவிய ஆதரவை உருவாக்கிட நாம் விரும்புகிறோம். இன, மொழி வேறுபாடின்றி ஆதரவு எழுவது சாத்தியம். இந்த சாத்தியப்பாடு சிங்களருக்குள் உள்ள மனித நேயம் கொண்டோரை (அவர்கள் சிறு பிரிவாக இருந்தாலும்) எழுப்பலாம். - சிங்கள அரசியல்வாதிகள் பேரினவாதம் என்ற அழிவு சக்தியைக் கையில் எடுத்தார்கள். அது ஆதிக்கத்தின் பாதை.


ஆதிக்கத்தின் பாதையில் ஒருநாளும் விடுதலையை வென்றெடுக்க முடியாது.


மக்கள் உயிரின் மீது ஒரு ஐபிஎல் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. வியாபாரிகள் எந்தத் தடையும் இல்லாமல் அதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாமோ மற்றுமொரு அடிமையை எதிர்க்கிறோமேயன்றி, வியாபாரிகளை எதிர்க்க மறக்கிறோம். இதுவும் ஒருவகையில் அடிமைகளுக்கு இடையேயான கொலைவெறி மோதல்களின் நவீன முகம்தான்...

1 comment:

  1. தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக்கை வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது.

    அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து ஒலிம்பிக்கை நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது.

    1980 ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததை கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தது. அதற்கு பழிக்கு பழியாக 1984 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் யூனியன் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தது.

    1988 ஆம் சியோலில் நடந்த ஒலிம்பிக்கை தென்கொரியாவோடு சேர்ந்து நடத்த அனுமதிக்காததை கண்டித்து வடகொரியா புறக்கணித்தது. அத்தோடு சேர்ந்து கியூபாவும் எதியோபியாவும் புறக்கணித்தது.

    ஈராக் நாடு 1990 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதனை ஆசிய ஒலிம்பிக் குழு தடை செய்தது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தனை எதிர்த்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    for more details pls read

    http://savukku.net/index.php?option=com_content&view=article&id=1774:-2013-ipl-20-20-&catid=10:2010-10-16-14-42-56&Itemid=3

    ReplyDelete

Labels