மே தினம் ... 2014

உழைப்பாளர்களினால்தான் இந்த உலகம் இயங்குகிறது.

வியர்வை சுரக்க மூட்டை சுமக்கும் சுமைப்பணியாளரானாலும், ஏசி அறைக்குள் தூக்கம் தொலைக்கும் நவீன பணியாளரானாலும் - உழைப்பின் மூலம் இந்த சமூகத்திற்கு செல்வம் சேர்க்கிறார்.

ஒரு நாள் உழைப்பில் ஒரு பகுதி உழைப்பு அவசியமானது, மறு பகுதி உழைப்பு உபரி, ஓய்வும் உறக்கமும் இல்லாவிட்டால் மனிதனால் அடுத்த நாள் உழைக்கவும் அடுத்த சந்ததியை வளர்க்கவும் முடியாது. இதனை உணர்ந்ததால்தான் 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்ற முழக்கம் எழுந்தது. பின் அது சட்டமாகவும் ஆனது.

இன்று அந்த நியாயமான உரிமைகள் களவு போகின்றன. மனிதன் உழைப்பை கஷ்டமாக உணரத் தொடங்குகிறான். தான் உருவாக்கும் செல்வத்தை தானும் அனுபவிக்க வாய்ப்பில்லாத மனிதர்கள் எவரும் இந்த சோர்வுக்கு ஆளாகத்தான் செய்வார்கள்.

சமூகம் வர்கங்களாக பிரிந்துகிடக்கும் நிலையில் - உழைப்பாளி வர்கமே இன்றுள்ள அசமத்துவத்தை மாற்றி, புதியதை உருவாக்கிட முடியும். அதனை மாற்றியமைப்பது, சமூகத்தின் செல்வங்கள் ஓரிடத்தில் குவிவதை தடுத்து, எல்லோருக்குமான உலகத்தைக் கட்டமைக்கும் உயரிய லட்சியத்தை வென்றெடுப்பதில்தான் உள்ளது.

மே தினம் - உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தினம். இந்த நாளில், நாம் இழந்த உரிமைகளை வென்றெடுக்கவும், புதிய சமூகத்தைக் கட்டமைக்கவும் உறுதியெடுப்போம்.

மேதின சபதமேற்போம்!

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels